`ஷாப்பிங் செய்யும்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரா நீங்கள்?!' - இதப் படிங்க பாஸ் | Using smartphone while shopping creates destruption

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (07/05/2019)

கடைசி தொடர்பு:17:20 (07/05/2019)

`ஷாப்பிங் செய்யும்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரா நீங்கள்?!' - இதப் படிங்க பாஸ்

இந்த ஆய்வைத் தொகுத்துப் பார்க்கும்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்திக்கொண்டே பொருள்களைக் கடையின் அடுக்கிலிருந்து எடுக்கும்போது கவனச் சிதறல் ஏற்படுகிறது. இதனால் தேவையில்லாத கூடுதல் பொருள்களை வாங்குவதோடு, செலவும் அதிகரிக்கிறது. 

ரலாற்றில் நுழையும் புதிய கேட்ஜெட்டுகள் உலகை கைக்குள் அடக்கிவிடுகின்றன. பல நன்மைகளை கேட்ஜெட்டுகள் நமக்கு வாரிக்கொடுத்தாலும்,  மற்றொருபுறம் அவற்றின் பயன்பட்டால் பல்வேறு ஆரோக்கியம் மற்றும் உளவியல் சார்ந்த  பிரச்னைகள் உருவெடுக்கின்றன. அதனால்தான் கேட்ஜெட்டுகளிடம் இருந்து சற்று விலகியே இருக்கும்படி மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். கேட்ஜெட்டுகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் ஸ்மார்ட்போன்களை வைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுவாரஸ்யமான முடிவு வெளியாகியுள்ளது. 

ஷாப்பிங் செய்யும்போது ஸ்மார்ட்போன் பயன்பாடு

சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் ஷாப்பிங் செய்யும்போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அமெரிக்காவில் உள்ள ஃபேர்ஃபீல்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். 230 பேர் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஷாப்பிங் சம்பந்தப்பட்ட டாஸ்க் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களைத் தேர்ந்தெடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

ஆய்வில் பங்கேற்றவர்கள் ஷாப்பிங் முடியும்வரை ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தாதவர்கள், இடையிடையே பயன்படுத்தியவர்கள், முழு நேரமும் பயன்படுத்தியவர்கள் என்று பிரிக்கப்பட்டனர். ஆராய்ச்சியின் முடிவில் ஷாப்பிங் செய்யும்போது ஸ்மார்ட்போனில் பேசியவர்கள், சாட் செய்தவர்கள், பாடல் கேட்டவர்கள், இமெயில் செக் செய்தவர்கள் என ஸ்மார்ட்போனில் கவனத்தைச் செலுத்தியவர்கள் தாங்கள் வாங்கவேண்டிய பொருள்களை மறந்து, தேவையில்லாத பொருள்களையும், அதிக எண்ணிக்கையிலான பொருள்களையும் வாங்கியிருக்கின்றனர்.

செல்போன் பயன்பாடு

``ஆராய்ச்சிக்கு உட்படுத்தியவர்களில் 93 சதவிகிதம் பேர் ஷாப்பிங்கின்போது தாங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர். இந்த ஆய்வைத் தொகுத்துப் பார்க்கும்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்திக்கொண்டே பொருள்களைக் கடையின் அடுக்கிலிருந்து எடுக்கும்போது கவனச் சிதறல் ஏற்படுகிறது. இதனால் தேவையில்லாத கூடுதல் பொருள்களை வாங்குவதோடு, செலவும் அதிகரிக்கிறது. ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்கள் கவனத்தை வெகு எளிதாக சிதற அடித்துவிடுகிறது" என்கிறார் ஆராய்ச்சியில் ஈடுபட்ட டாக்டர் மைக்கேல் ஸ்கியான்ட்ரா.

இனி ஷாப்பிங் போகும்போது துணிப்பையை மறக்கமாக எடுத்துட்டுப்போங்க.... ஆனா, ஸ்மார்ட்போனை மறந்தும் எடுத்துட்டுப் போயிராதீங்க....