`குழந்தைக் கடத்தலில் சிக்கிய அமுதவள்ளியை செவிலியர் என்று சொல்லாதீர்கள்!' - நர்ஸிங் கவுன்சில் | Tn nursing council request's Do not call amuthavalli as nurse

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (08/05/2019)

கடைசி தொடர்பு:07:00 (08/05/2019)

`குழந்தைக் கடத்தலில் சிக்கிய அமுதவள்ளியை செவிலியர் என்று சொல்லாதீர்கள்!' - நர்ஸிங் கவுன்சில்

''ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட பெண்ணை, அனைத்து ஊடகங்களிலும் செவிலியர் என்று குறிப்பிடுகிறார்கள். அவர் செவிலியரே இல்லை. அவரை செவிலியர் என்று அழைப்பதால், ஒட்டு மொத்த செவிலியர்களின் பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அதனால், நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் சிக்கித் தவிக்கின்றோம். இனி யாரைப் பற்றி செய்தி போட்டாலும், அவர் யார், என்ன என்பதை முழுமையாக விசாரித்து செய்தி போடுங்கள்'' எனத் தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் பதிவாளர் பேராசிரியை எஸ்.ஆனி கிரேஸ் தெரிவித்துள்ளார்.

செவிலியர்

குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக வெளியான ‘வாட்ஸ்அப்’ உரையாடல், தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதைத் தொடர்ந்து ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ராசிபுரத்தைச் சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற செவிலிய உதவியாளர் அமுதவள்ளி, அவரின் கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டு, தற்போது விசாரணை வளையத்தில் உள்ளனர். இந்தநிலையில், இன்று கொல்லிமலையைச் சேர்ந்த ராணி, இளையராணி, தனலட்சுமி என்கிற மூன்று செவிலியர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

குழந்தை கடத்தல்

இந்தநிலையில், முறையாக செவிலியர்களாகப் பதிவு செய்யாமல் பணி செய்பவர்களை 'செவிலியர்கள்' என்று ஊடகங்கள் பதிவு செய்வதற்கு எதிராகத் தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் பதிவாளர் பேராசிரியை எஸ்.ஆனி கிரேஸ் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், ``பிரிட்டிஷ் காலத்தில் செவிலிய உதவியாளர்களாகப் படிக்காத பெண்களை நியமித்தார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு, செவிலிய உதவியாளருக்கென தனியான அங்கீகரிக்கப்பட்ட படிப்பு கொண்டுவரப்பட்டது. அதைப் படித்தவர்கள் மட்டுமே செவிலிய உதவியாளர்கள். அதை விடுத்து, மருத்துவமனையில் வேலை செய்தாலே அவர்களை எல்லாம் செவிலியர்கள், செவிலிய உதவியாளர்கள் என அழைப்பது தவறானது. அவர்கள் ஏதாவது தவறிழைக்கும்போது, 'செவிலியர்கள்' எனக் குறிப்பிட்டு எழுதுவதும் தொலைக்காட்சிகளில் காட்டுவதும் எங்களைக் காயப்படுத்துகிறது. இனிவரும் காலங்களிலாவது, அப்படிச் செய்யாதீர்கள். முழுமையாக விசாரித்து செய்திகளைப் பதிவு செய்யுங்கள்'' என்றார் அவர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க