சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்துக்கு... | Advice to special children parents

வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (08/05/2019)

கடைசி தொடர்பு:16:57 (08/05/2019)

சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்துக்கு...

"சிறப்புக் குழந்தைகள் என்று பொதுவான பெயரிட்டு சொன்னாலும் அவர்களில் செரிபல் பிளாஸி, ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், லேர்னிங் டிசெபிலிட்டி உள்ளிட்ட பல வகைப் பிரிவுகள் இருக்கின்றன. அந்தத் தன்மைக்கு ஏற்றவாறு கல்வி கற்க உதவ வேண்டும். இல்லையெனில், பள்ளியில் சேர்த்தும் எந்தப் பலனும் இருக்காது."

சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்துக்கு...

மது சமூகத்தில் சிறப்புக் குழந்தைகளை வழிநடத்துவதில் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதே யதார்த்தம். அந்தக் குழந்தைகளுக்கு அவசியம் அளிக்கப்பட வேண்டிய கல்வி, பயிற்சி உள்ளிட்டவற்றைப் பற்றி அர்விந்த் பவுண்டேஷன் சிறப்புக் குழந்தைகள் தொண்டு நிறுவன தலைவர் ஆத்மராஜிடம் பேசினோம்.

குழந்தை

``சிறப்புக் குழந்தைகளைப் பொதுப் பள்ளியில் சேர்க்க என்ன அடிப்படைத் தகுதிகள், உடல் தகுதிகள் இருக்க வேண்டும்?''

ஆத்மராஜ்``மற்ற குழந்தைகள்போல, சிறப்புக் குழந்தைகளுக்கும் அடிப்படி கல்வியைக் கற்க உரிமை உண்டு. பள்ளிக்கு அனுப்பும்போது பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

முதல் விஷயம். ஒவ்வொரு சிறப்புக் குழந்தைக்கும் தனித்தனி சிறப்புத் தன்மைகள் இருக்கும். அதைப் பெற்றோர் சரியாக இனம் காண வேண்டும். மேலும், சிறப்புக் குழந்தைகள் என்று பொதுவான பெயரிட்டு சொன்னாலும் அவர்களில் செரிபல் பிளாஸி, ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், லேர்னிங் டிசெபிலிட்டி உள்ளிட்ட பல வகைப் பிரிவுகள் இருக்கின்றன. அந்தத் தன்மைக்கு ஏற்றவாறு கல்வி கற்க உதவ வேண்டும். இல்லையெனில், பள்ளியில் சேர்த்தும் எந்தப் பலனும் இருக்காது. அரசுப் பள்ளிகளில் சிறப்புக் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்று அரசு ஆணையும் இருக்கிறது. அதற்கென ஒரு ஆசிரியரும் இருப்பார்.

எந்தப் பள்ளிக்கு அனுப்புவதாக இருந்தாலும் தங்கள் குழந்தையின் உடல், மனநிலையைப் பற்றிப் பெற்றோர் முழுமையாகத் தெரிந்துகொள்வது அவசியம். தண்ணீர் குடிப்பது, கழிவறை செல்வது உட்பட அடிப்படைத் தேவைகளைக் குழந்தைகள் தானே செய்யப் பழக்கிவிட்டார்களா... மற்றவர்களின் உதவியை அவர்கள் எந்நேரமும் நாட வேண்டிய அவசியம் ஏற்படுமா என்பதைக் கணித்த பிறகே, அதற்கேற்ற பள்ளியைப் பெற்றோர்கள் தேர்வு செய்ய வேண்டும்.''

``சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கான அட்வைஸ்... எப்படிக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும்?''

``ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், அவற்றில் ஒன்று சிறப்புக் குழந்தை என்றால், அந்தக் குழந்தையைப் பொது இடங்களுக்கு, விழாக்களுக்கு அழைத்துச் செல்வதில் சில பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும் அழைத்துச் செல்லாமல் இருப்பது தவறு என்பேன். வெளியுலகுக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே அடைத்து வைப்பதால், அந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய சோஷியல் மேனர்ஸ் கிடைக்காமலேயே போய்விடும். 10 வயதுக்குள் அந்தக் குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய, சொல்லிக்கொடுக்க வேண்டிய தகவல்களை, விஷயங்களைப் பெற்றோர்களே தடுக்கிறார்கள் என்பேன்.

சொல்வது சுலபம் என்பதை நானும் அறிவேன். பொது இடத்தில் அழைத்துச் செல்வதை சில குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். அப்படி நினைக்கும் குழந்தைகளை அவர்கள் வழியிலேயே சென்று மாற்றம் ஏற்பட வைப்பதே பெற்றவர்களின் செயலாக இருக்க வேண்டும். சிறப்புக் குழந்தைகளுக்குத் தனித்திறமை மட்டுமல்ல, சிந்தனையும் உணர்வுகளும் உண்டு. அதனால், சிறப்புக் குழந்தைகளை வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம். மற்ற குழந்தைகளோடு ஒப்பீடு செய்யவும் வேண்டாம்.

சிறப்புக் குழந்தைகளால் நன்கு படித்து, தேர்ச்சிப் பெற்று, கைவினைப் பொருள்களைச் செய்து வியாபாரமும் செய்ய முடியும் என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. எனவே, சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைச் சுமையாக நினைக்க வேண்டாம்.''

சிறப்புக் குழந்தை பெற்றோர்கள்

`சிறப்புக் குழந்தைகள் பற்றி நார்மல் குழந்தைகளின் பெற்றோருக்குச் சின்ன தகவல்...''

``இயல்பான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, சிறப்புக் குழந்தைகளின் பெற்றோராகச் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சிறப்புக் குழந்தைகளின் வெளித்தோற்றங்களைப் பார்த்து அவர்களை எடைபோட்டுவிடாதீர்கள். அவர்கள் அப்படிப் பிறந்ததற்கு அவர்களோ, அவர்களின் பெற்றோர்களோ எந்தக் குற்றமும் செய்யவில்லை. இந்த நிதர்சனங்களை நீங்கள் உணர்ந்துகொண்டு அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது வித்தியாசம் காட்டாமல் பழகினாலே அவர்கள் உங்களுக்கு அசௌகரியமாகத் தெரியமாட்டார்கள். ஏனென்றால்... உங்கள் உடல்மொழியில் ஆரம்பித்து செய்கை வரை அவர்களை அலட்சியப்படுத்தும் ஒவ்வொன்றையும் தன் மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்வார்கள். அந்தக் குழந்தைகள் சிறப்புக் குழந்தைகளுடன் படிக்கும் தன் குழந்தையும் அவர்கள் செய்வதையே செய்வார்கள் என்று பயந்து நிர்வாகத்திடம் கேட்பதைப் பார்க்க முடிகிறது. நிச்சயம் அப்படி நடக்காது என்பதை நீங்கள் உணர்ந்தாலே உங்கள் உள்ளத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கான கனிவு தானாக உண்டாகும். சிறப்புக் குழந்தைகளின் வாழ்க்கைப் பயணத்தில் நீங்களும் ஒரு மைல்கல்லாக இருக்கலாமே.''

 


டிரெண்டிங் @ விகடன்