கோடையில் முதியோரைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கான தீர்வுகள்! #SummerTips #Video | Hot Weather Safety Tips for Older Adults

வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (08/05/2019)

கடைசி தொடர்பு:17:54 (08/05/2019)

கோடையில் முதியோரைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கான தீர்வுகள்! #SummerTips #Video

"சிலருக்கு நடப்பதில் சிக்கல் இருக்கும். படுக்கையில் நீண்ட நேரம் இருக்கும் முதியவர்களும் உண்டு. இவர்களுக்குத் தண்ணீரை தேடி எடுத்துக் குடிப்பதில் சிரமம் இருக்கும். தனியாக இருக்கும் சூழலில் உள்ள முதியவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும்."

கோடையில் முதியோரைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கான தீர்வுகள்! #SummerTips #Video

டிக்கிற வெயில் எப்பேர்ப்பட்ட பலசாலிகளையும் சோர்வாக்கித் தளர்த்திவிடுகிறது. அதுபோன்ற நேரங்களில் குழந்தைகளை எத்தனை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறோமோ அதே அளவு கவனிப்பு வீட்டிலிருக்கும் முதியோர்களுக்கும் தேவை. வயோதிகத்திலும் ஆரோக்கியமாக இருப்பது முதியோருக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நலம் பயக்கும். 
கோடைக்காலத்தில் முதியோரைப் பாதிக்கும் விஷயங்கள் என்னென்ன, அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி என்று விளக்குகிறார் முதியோர் நல மருத்துவர் லக்ஷ்மிபதி ரமேஷ்.

கோடைக்காலம் - முதியோர்

முதியோர் நல மருத்துவர் லஷ்மிபதி ரமேஷ்``கோடைக்காலத்தில் குழந்தைகள், முதியோர் ஆகிய இரண்டு பிரிவினரும் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கோடையில் பொதுவாக முதியோரை அதிகம் பாதிப்பது நீர்ச்சத்து இழப்பு. நீர்ச்சத்து இழப்போடு உடலில் சோடியத்தின் அளவும் முதியோருக்குக் குறைந்துவிடும். 

முதியோருக்கு உடலில் தசைகளின் அடர்த்தி குறைவாக இருக்கும். ஆனால் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கும். உடலில் தசையில்தான் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. தசை குறைந்து கொழுப்பு அதிகரிக்கும்போது உடலில் நீர்சத்தும் தானாகக் குறையத்தொடங்கும்.

சாதாரணமாக ஒரு மனிதனின் உடலில் 60 சதவிகிதம் நீர் காணப்படும். அதாவது, ஒரு நபர் 100 கிலோ எடை இருந்தால் அதில் 60 கிலோ நீர்தான் இருக்கும். அதுவே ஒரு முதியவர் என்றால், தசைகளின் அடர்த்தி குறைவாக இருப்பதால் 50 கிலோ மட்டுமே நீர் இருக்கும். 

நம் உடலில் உள்ள செல்களில் கூடுதலாக திரவங்கள் (Extra Cellular Fluids) இருக்கும். உடல் நீர்ச்சத்தை அதிகமாக இழக்கும் நிலையில், இந்தத் திரவங்கள் செல்லிலிருந்து வெளியேறி உடலை நிலைப்படுத்தும். இந்தத் திரவங்களும் முதியோருக்குக் குறைவாகவே இருக்கும். அதனால் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு தனக்கு ஏதோ சம்பவிக்கப் போகிறது என்று அவர்கள் உணருவதற்கு முன்பாகவே மயக்கமடைதல், தலை சுற்றி கீழே விழுதல் போன்று ஏதாவது நிகழ்ந்துவிடலாம்.

நீர்

கோடைக்காலம் முதியோரை அதிகம் பாதிப்பதற்கு வயது அதிகரித்தல் மட்டுமே காரணம் அல்ல. அவர்களுக்கு இருக்கும் சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், இதயநோய், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு போன்றவையும் காரணமாக இருக்கலாம். 

வயது அதிகரிக்க அதிகரிக்க உடலில் தாகத்தை உருவாக்கும் இயக்கமுறை (Thirst mechanism) மாறிவிடும். வெயிலில் சென்றுவிட்டு வந்தால் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிப்போம். ஆனால் தாகத்தை உருவாக்கும் இயக்கமுறை மாறிவிடுவதால் முதியோருக்கு தாகம் என்ற உணர்வு ஏற்படாது. அதனால் உடனிருப்பவர்கள்தான் அடிக்கடி அவர்களைத் தண்ணீர் குடிக்க நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

கோடையில் உடலிலிருந்து அதிகஅளவில் நீர் வெளியேறும் அல்லது ஆவியாகும். அதிக அளவில் நீர் வெளியேறும்போது எளிதில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டுவிடும். அதேபோல வயதானவர்களுக்குச் சிறுநீர் வெளியேறுவதற்காகக் கொடுக்கப்படும் மாத்திரைகளாலும் நீர்ச்சத்து இழப்பு ஏற்படலாம். இவை இரண்டும்தான் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள். 

மோர்

சிலருக்கு நடப்பதில் சிக்கல் இருக்கும். படுக்கையில் நீண்ட நேரம் இருக்கும் முதியவர்களும் உண்டு. இவர்களுக்குத் தண்ணீரை தேடி எடுத்துக் குடிப்பதில் சிரமம் இருக்கும். தனியாக இருக்கும் சூழலில் உள்ள முதியவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும்.

சில மருத்துவப் பிரச்னைகளுக்கு குறிப்பிட்ட அளவுக்குமேல் தண்ணீர் அருந்தக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பார்கள். தண்ணீர் குடிக்கக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத முதியவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும். தண்ணீர் குடிப்பதற்கு மருத்துவர்கள் கட்டுப்பாடுகள் விதித்திருக்கும் பட்சத்தில், கோடைக்காலத்தில் மட்டும் மருத்துவர் பரிந்துரையோடு குடிக்கும் தண்ணீரின் அளவைச் சற்று அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

பழச்சாறு

வெயில் காலத்தில், உணவு விஷயத்திலும் முதியோர் கவனம் செலுத்தவேண்டும். தினமும் உணவில் ஏதாவது பழச்சாறு, மோர் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். உயர்ரத்த அழுத்தம் இருக்கும் முதியவர்கள் உணவில் உப்பின் அளவைக் குறைக்கவேண்டும். ஆனால், வெயில் காலத்தில் ஏற்கெனவே வியர்வையில் அதிக அளவில் உப்பு வெளியேறிவிடுவதால் மோரில் உப்பு போட்டு அருந்துவதில் தவறில்லை. அதனால் வெயில் அதிகமாக இருக்கும் மாதங்களில் உப்புக்கான கட்டுப்பாட்டை சற்று தளர்த்திக்கொள்ளலாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் உப்பைச் சேர்க்கக் கூடாது, சாதாரண அளவு சேர்த்துக்கொள்ளலாம். 

வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்துவிட்டு தளர்வான ஆடைகளை அணியவேண்டும். பருத்தி ஆடைகள் மிகவும் சிறந்தது. முதியவர்கள் அதிகாலை அல்லது வெயில் தாழ்ந்த மாலை நேரங்களில் நடைப்பயிற்சிக்குச் செல்வது நல்லது. தனியாக நடைப்பயிற்சி செல்வதைத் தவிர்க்கவும். கண்டிப்பாகத் துணையுடன் செல்ல வேண்டும் அல்லது குழுவாகச் சேர்ந்து செல்வது நல்லது. 

முதியோர்

இதுபோன்ற சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தினால் கோடையை எந்தப் பிரச்னையும் இல்லாமல் சமாளித்துவிடலாம்" என்கிறார். 


டிரெண்டிங் @ விகடன்