பெரும்பாலான மீட்டிங்குகள் பெயிலியர் ஆவது ஏன் ?- காரணத்தைக் கண்டறிந்த அமெரிக்க ஆய்வாளர்கள்! | Is Conference Room Air Making You Dumber?

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (08/05/2019)

கடைசி தொடர்பு:20:50 (08/05/2019)

பெரும்பாலான மீட்டிங்குகள் பெயிலியர் ஆவது ஏன் ?- காரணத்தைக் கண்டறிந்த அமெரிக்க ஆய்வாளர்கள்!

`மீட்டிங்... மீட்டிங்' என்று ஓடிக்கொண்டிருக்கிறீர்களா. குளிரூட்டப்பட்ட அறையின் உள்ளே உட்கார்ந்து நீண்டநேரம் விவாதித்தும் ஒரு முடிவும் எட்டப்படவில்லையா? `மீட்டிங் என்றதும் மனசு பதறுது பாஸ்...' என்று அலுத்துக்கொள்பவரா... அப்படியென்றால் இது உங்களுக்குத்தான்!

விவாதம்

முன்பெல்லாம் `மீட்டிங்' என்பது மிகக்குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. ஆனால், இன்று பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எல்லாத்துறையிலும் அடிக்கடி `மீட்டிங்' நடத்தப்படுகிறது. எந்தவொரு சிறிய விஷயத்துக்கும் உடனே ஒரு மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கட்டளைகள் பறக்கின்றன. ஒரே நாளில் பல மீட்டிங்கில் கலந்துகொள்பவர்களும் உண்டு. 

இப்படியாக ஓர் அறைக்குள்ளே நடக்கும் மீட்டிங்கில் பெரும்பாலும் ஒருமித்த கருத்தோ, சரியான முடிவோ எட்டமுடியாமல் போகும். அதற்குக் காரணம் என்ன என்பதே தெரியாமல் அடுத்த மீட்டிங்கையும் நடத்துவார்கள். ஆனால், இனி அப்படி செய்யத் தேவையில்லை. அதற்குச் சரியான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

முடிவு எடுத்தல்

பொதுவாக காற்றோட்டமில்லாத ஓர் அறைக்குள்ளே `மீட்டிங்' நடக்கும்போது அங்கே நம்முடைய உடலின் வெப்பமும், நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவும் அதிகமாக இருக்கும். அறையில் காற்றோட்டமில்லாததால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். வேறுவழியில்லாமல் கார்பன் டை ஆக்சைடையே சுவாசிக்க வேண்டியிருக்கும். இதனால் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் விரிவடையும். மேலும், மூளைச் செல்களின் செயல்பாடுகள் குறைந்து உடலுக்கும் மூளைக்குமான தகவல் தொடர்பில் தொய்வு ஏற்படும். இதனால்தான் பல `மீட்டிங்' நடத்தியும் சரியான முடிவு எட்டப்படுவதில்லை.

இதைத்தான் அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், `வெளிப்புறத்திலுள்ள காற்று மாசுபாடு குறித்தும் அதனால் ஏற்படும் நோய்கள் குறித்துதான் விவாதிக்கப்படுகிறதே தவிர, ஓர் அறைக்குள் நிலவும் மாசு குறித்து அதிக ஆய்வுகள் நடத்தப்படுவதில்லை’ என்றும் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

மீட்டிங்

 `ஓர் அறைக்குள்ளே எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது என்பதைச் சிறப்பு வாய்ந்த சென்சார் இல்லாமல் கண்டறிய முடியாது. ஆகவே, திறந்த, காற்றோட்டமான அறைகளில் `மீட்டிங்' நடத்துவதே உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமானதாக இருப்பது மட்டுமன்றி, ஒரு விஷயத்தில் தெளிவான முடிவை எட்டவும் முடியும்’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.