சுற்றுலா செல்லும்போது அவசியம் எடுத்துச்செல்ல வேண்டிய பொருள்கள்! | What are essential things to pack when travelling?

வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (10/05/2019)

கடைசி தொடர்பு:17:38 (10/05/2019)

சுற்றுலா செல்லும்போது அவசியம் எடுத்துச்செல்ல வேண்டிய பொருள்கள்!

சர்க்கரை நோயாளிகளைத் தவிர மற்றவர்கள் லெமன், புதினா, இஞ்சி ஜூஸ்களை அருந்துவது உடலுக்கு நலம்தரும். சில முதியோருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் வேறு பிரச்னைகள் இருந்தால், அவர்கள் பயணத்தின்போது தவறாமல் உட்கொள்ள வேண்டிய மாத்திரைகள் பற்றிய சிறுகுறிப்பை உடன் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

சுற்றுலா செல்லும்போது அவசியம் எடுத்துச்செல்ல வேண்டிய பொருள்கள்!

பெரும்பாலானோருக்குக் கோடை விடுமுறையில்தான் சுற்றுலா வாய்க்கிறது. அலுவலகத்திற்கு குட்பை சொல்லிவிட்டு குழந்தைகளோடு குதூகலமாகக் கிளம்பி விடுவார்கள். சுற்றுலா கிளம்பும்போது பார்த்துப் பார்த்து துணிமணிகளை எல்லாம் அள்ளி பேக் செய்வார்கள். ஆனால், அத்தியாவசியமான சில பொருள்களை மறந்து விடுவார்கள். அவசியமாகத் தேவைப்படும் நேரத்தில், அந்தப் பொருள் கிடைக்காமல் தவிப்பார்கள். 

சுற்றுலா

சுற்றுலா செல்லும்போது, அவசியம் கொண்டு செல்ல வேண்டிய பொருள்கள் என்னென்ன? 

குடும்ப நல மருத்துவர் சுனிதா சுனில் விளக்குகிறார். 

``சுற்றுலா செல்லும் எல்லோர் கையிலும் அவசியம் இருக்க வேண்டியது சிறிய முதலுதவிப் பெட்டி. அந்தப் பெட்டியில் பேண்டேஜ், ஆன்டிசெப்டிக் க்ரீம், காட்டன் துணி, டெட்டால், பேண்ட் எய்டு, சிறிய கத்தரிக்கோல், தீக்காயத்தைக் குணப்படுத்தும் கிரீம் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். 

முதலுதவி பெட்டி

சுற்றுலாவின்போது காய்ச்சல், உடல்வலி ஏற்படலாம். அதற்காக பாரசிட்டமால் மாத்திரைகளை எடுத்துச்செல்வது நல்லது. அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள் `ரானிடிடின்' (Ranitidine) மாத்திரைகளை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். சிலருக்குப் பயணம் ஒத்துக்கொள்ளாது. வாந்தி எடுப்பார்கள். `எமிசெட்' (Emeset) மாத்திரை அல்லது மருந்தை அவர்கள் எடுத்துச் செல்வது நல்லது. சீதோஷ்ண நிலை ஒத்துக்கொள்ளாமல் மூச்சுத்திணறல், சளித்தொல்லைக்கு சிலர் ஆளாக நேரிடும். சிலவகை உணவுகள் ஒவ்வாமையை உண்டாக்கி, சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும். அதற்காக `செட்ரிசின்' (Cetirizine) மாத்திரைகளை உடன் எடுத்துச் செல்லலாம். 

மாத்திரைகளைப் பொறுத்தவரை, தற்காலிக நிவாரணத்துக்காக ஒருவேளை மட்டுமே சாப்பிட வேண்டும். பிரச்னை தொடர்ந்தால் உடனடியாக அருகிலிருக்கும் தகுதிவாய்ந்த மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றுவிட வேண்டும். 

சுற்றுலா

கோடைக்காலத்தில் நீர் வறட்சி ஏற்படும். அதனால் பயணத்தின்போது கண்டிப்பாக ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகளை (உப்பு-சர்க்கரை கரைசல்) எடுத்துச் செல்லவேண்டும். அரசு வழங்கும் பாக்கெட்டுகளாக இருந்தால் நல்லது. 

சுற்றுலாவின்போது, உணவு ஒத்துக்கொள்ளாமல் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புண்டு. அதைத்தடுக்க நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். பயணத்தில் அதிகம் நடக்க நேரிடலாம். மூட்டு, கால்களில் வலி ஏற்படலாம். சுளுக்கு, பிடிப்பு ஏற்படலாம். வலி நீக்கும் ஸ்பிரே ஒன்றையும் கையில் வைத்திருப்பது நல்லது. 

சுற்றுலா பொருள்கள்

குடும்ப நல மருத்துவர் சுனிதா சுனில்சர்க்கரை நோயாளிகளைத் தவிர மற்றவர்கள் லெமன், புதினா, இஞ்சி ஜூஸ்களை அருந்துவது உடலுக்கு நலம்தரும். சில முதியோருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் வேறு பிரச்னைகள் இருந்தால், அவர்கள் பயணத்தின்போது தவறாமல் உட்கொள்ள வேண்டிய மாத்திரைகள் பற்றிய சிறுகுறிப்பை உடன் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

இது கோடைக்காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமிருக்கும். எனவே, எப்போதும் கையில் குடை இருக்கட்டும். குறிப்பாக முதியோர், நேரடி சூரியஒளியில் நிற்காமல் இருப்பது நல்லது. 

கடற்கரை அல்லது நீச்சல் குளத்துக்குச் செல்வதற்குமுன் சன் ஸ்க்ரீன் லோஷன் மற்றும் மாய்ஸ்ச்சரைஸரை உடலில் தடவிக்கொண்டு செல்லவேண்டும். சுற்றுலாவில் பெரும்பாலும் அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். எளிய சைவ உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். 

சுற்றுலா தம்பதி

மொபைல் எண், தங்கியிருக்கும் விடுதியின் முகவரி மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட முக்கிய விவரங்களை கார்டில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அந்த கார்டுகளை ஒவ்வொருவரும் தனித்தனியாக வைத்துக்கொள்வது அவசியம். 

சுற்றுலாவின்போது தட்பவெப்பச் சூழலுக்கு ஏற்றவாறு பருத்தி ஆடைகள் மற்றும் தொப்பி, மஃப்ளர், கூலிங் கிளாஸ் போன்றவற்றை எடுத்துச் செல்லலாம். சுற்றுலா செல்லும் பலர் மலைப் பிரதேசங்களை பெரும்பாலும் தேர்ந்தெடுப்பார்கள். அந்தப் பகுதிகளுக்குச் செல்பவர்கள் அதற்குரிய பூட்ஸ் மற்றும் தரமான கேன்வாஸ் ஷு மற்றும் பக்கிள்ஸ் வைத்த செருப்புகளை அணிந்து செல்லுங்கள். பெண்கள் ஹைஹீல்ஸ் அணிவதைத் தவிர்க்கவேண்டும்.

சுற்றுலா பயணிகள்

குழந்தைகளுக்குத் தேவையான டயாப்பரை எடுத்துச் செல்லவேண்டும். இந்த டயாப்பர்களை ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம். அதேபோல் பெண்கள் நாப்கின் எடுத்துச் செல்வது நல்லது” என்கிறார் சுனிதா சுனில். 


டிரெண்டிங் @ விகடன்