மருத்துவப் பாடத்திட்டத்திலிருந்து 'டூ ஃபிங்கர் விர்ஜினிட்டி டெஸ்ட்' பாடம் நீக்கப்படுமா? | Two finger virginity test degrades women

வெளியிடப்பட்ட நேரம்: 13:22 (13/05/2019)

கடைசி தொடர்பு:13:22 (13/05/2019)

மருத்துவப் பாடத்திட்டத்திலிருந்து 'டூ ஃபிங்கர் விர்ஜினிட்டி டெஸ்ட்' பாடம் நீக்கப்படுமா?

'டூ ஃபிங்கர் விர்ஜினிட்டி டெஸ்ட்' பரிசோதனை முறையானது, முழுக்க முழுக்க மருத்துவ அறிவியலுக்கு எதிரானது. பாலின நீதிக்கும் முரணானது. இது பெண்களைப் பாகுபடுத்துவதோடு இழிவுபடுத்தவும் செய்யும்.

மருத்துவப் பாடத்திட்டத்திலிருந்து 'டூ ஃபிங்கர் விர்ஜினிட்டி டெஸ்ட்' பாடம் நீக்கப்படுமா?

பெண்களின் கன்னித்தன்மையைப் பரிசோதிப்பது தொடர்பான பாடத்தை மருத்துவக் கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க முடிவு செய்திருக்கிறது மகாராஷ்டிர அரசு. இதை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழக மருத்துவப் பாடத்திட்டத்திலிருந்தும் அந்தப் பாடத்தை நீக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது. 

பெண்களை இழிவுபடுத்தும் டூ ஃபிங்கர் விர்ஜினிட்டி டெஸ்ட்

பெண்களின் கன்னித்தன்மையை உறுதி செய்வதற்கு 'டூ ஃபிங்கர் விர்ஜினிட்டி டெஸ்ட்' (Two finger virginity Test) என்ற முறை பின்பற்றப்பட்டு வருகிறது. எந்தவித உயிரியல் பரிசோதனைகளும் செய்யாமல், பெண்ணின் கருப்பைவாய்ப் பகுதியை மருத்துவர்கள் கைகளைக் கொண்டு ஆராய்வதே 'டூ ஃபிங்கர் விர்ஜினிட்டி டெஸ்ட்.' பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களைக் கண்டறிய இந்தச் சோதனைமுறை பின்பற்றப்படுகிறது. இது தொடர்பான பாடம், மகாராஷ்ட்ரா மாநில மருத்துவக் கல்லூரி பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தது. 'இந்தச் சோதனை முறை மருத்துவ அறிவியலுக்கு எதிரானது; மனித உரிமையை மீறும் செயல். இது தொடர்பான பாடத்தை மருத்துவக் கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும்' என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், 2018, டிசம்பர் மாதம் மத்திய சுகாதாரத்துறை, இந்திய மருத்துவக் கவுன்சில், மகாராஷ்டிர மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு மனு அளித்தார். 

மருத்துவர்

அந்த மனுவில், "மருத்துவப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் கன்னித்தன்மை, கன்னித்தன்மையை இழந்ததற்கான உட்புற மற்றும் வெளிப்புற அறிகுறிகள், கன்னிச்சவ்வின் (Hymen) செயல்பாடு ஆகியவற்றைப் பற்றி பாடங்கள் உள்ளன. இந்தப் பாடத்திட்டத்தைப் பின்பற்றி அனைத்துத் தேர்வுகளிலும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தப் பாடங்கள் பெண்களின் கன்னித்தன்மையைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. கன்னித்தன்மை உள்ள நிலை, அதை இழந்த நிலை என்று வரைபடங்களுடன் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளன. அதைப் பரிசோதிப்பதற்கான வழிமுறைகளும் விளக்கப்பட்டுள்ளன.

மருத்துவப் பாடத்திட்டம்

'டூ ஃபிங்கர் விர்ஜினிட்டி டெஸ்ட்' பரிசோதனை முறையானது, முழுக்க முழுக்க மருத்துவ அறிவியலுக்கு எதிரானது. பாலின நீதிக்கும் முரணானது. இது பெண்களைப் பாகுபடுத்துவதோடு இழிவுபடுத்தவும் செய்யும். இந்தப் பரிசோதனை முறையால் ஒரு பெண் கன்னித்தன்மையோடு இருக்கிறாரா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும் என்று எந்த ஆராய்ச்சியிலும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இந்தப் பாடங்களைத் தொடர்ந்து படிக்கும் மருத்துவ மாணவர்கள் மனதில் இந்தப் பரிசோதனை, அறிவியல்பூர்வமானது என்ற எண்ணம் பதிந்துவிடும். எனவே, இந்தப் பாடத்திட்டத்தை மருத்துவப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். 

மருத்துவரின் மனுவைத் தொடர்ந்து மகாராஷ்டிர மருத்துவப் பல்கலைக்கழகக் கல்வி வாரியத்தின் கூட்டத்தில் இந்தப் பாடங்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பரிசோதனை

2013-ல் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் "பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிநபர் உரிமையை மீறுவதாக இருப்பதால், மருத்துவர்கள் 'டூ ஃபிங்கர் விர்ஜினிட்டி டெஸ்ட்'  செய்யக் கூடாது" என்று தடை விதித்தது. மருத்துவப் பாடத்திட்டத்தைப் பற்றி உச்ச நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்தத் தடையையும் முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம் மகாராஷ்ட்ராதான். 

அதைத் தொடர்ந்து தற்போது பாடத்திட்டத்திலும் இதை நீக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை அந்த மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர். "கன்னித்தன்மை பரிசோதனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இருப்பினும், கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த முறை இன்னும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதையும் கண்காணித்து நிறுத்த வேண்டும். பாடத்திட்டத்திலிருந்து அதை நீக்குவது பாராட்டத்தக்கது" என்று மகாராஷ்டிர மாநில மருத்துவர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

மருத்துவ மாணவர்கள்

தமிழகத்தின் நிலை என்ன?

கன்னித்தன்மை பரிசோதனை குறித்த பாடத்திட்டங்கள் தமிழக மருத்துவப் பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடங்களைத் தடயவியல் மருத்துவப் பேராசிரியர்களே நடத்துகின்றனர்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரும் தடயவியல் மருத்துவ நிபுணருமான எட்வின் ஜோவிடம் பேசினோம்.
"கன்னித்தன்மையைப் பரிசோதிக்கும் முறையை நீக்க வேண்டும் என்று 2001-ம் ஆண்டிலிருந்து தடயவியல் நிபுணர்கள் குரல் எழுப்பி டாக்டர் எட்வின் ஜோவருகிறோம். 'இந்தப் பரிசோதனை மூலம் எந்த முடிவையும் எட்ட முடியாது' என்பதுதான் உண்மை. 'டூ ஃபிங்கர் விர்ஜினிட்டி டெஸ்ட்' என்ற முறையை அரசு கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் செய்வதில்லை. 

ஆனால், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கும் முதுநிலை தடயவியல் மருத்துவ மாணவர்களுக்கும் பாடத்திட்டத்தில் இது இருக்கிறது. இந்தப் பரிசோதனை முறைக்கு தடயவியல் நிபுணர்கள் மத்தியில் ஆட்சேபம் இருப்பதால், பாடப் புத்தகங்களில் இருந்தாலும் அதை மாணவர்களுக்கு நடத்துவதில்லை. தேர்வுகளிலும் இந்தப் பாடம் தொடர்பாகக் கேள்விகள் கேட்கப்படுவதில்லை.

இப்போது நீங்கள் இதுபற்றிக் கேட்கும்போது, தேவையற்ற ஒன்றைப் பாடப்புத்தகங்களில் ஏன் இன்னும் வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனவே, அதை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்" என்றார்.

ஆணாதிக்க மனோபாவத்தின் ஒரு படிநிலையாகவே இந்த விவகாரத்தையும் அணுக வேண்டியிருக்கிறது. மருத்துவத்திலும் அறிவியலிலும் இந்த மனோபாவம் புரையோடியிருப்பது வேதனையளிக்கிறது. இதைச் சரியாக உணர்ந்து அதற்கான ஆக்கபூர்வமான நகர்வை மகாராஷ்டிர மாநிலம் எடுத்து வைத்திருக்கிறது. இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்றினால்தான் வருங்கால மருத்துவர்கள் மனதில் மாற்றத்தை விதைக்க முடியும்!


டிரெண்டிங் @ விகடன்