இளம் வயது கர்ப்பத்தால் அதிகமாகும் இறப்பு விகிதம்... தீர்வு என்ன? | Teen Pregnancy Issues and Challenges

வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (13/05/2019)

கடைசி தொடர்பு:21:07 (13/05/2019)

இளம் வயது கர்ப்பத்தால் அதிகமாகும் இறப்பு விகிதம்... தீர்வு என்ன?

10 முதல் 19 வயது வரையுள்ள பருவ காலம் `வளரிளம் பருவம்' (adolescent) எனப்படுகிறது. குழந்தைப் பருவம் மாறி, வளரிளம் பருவத்தில் உடலில் 30 முதல் 42 சதவிகித வளர்ச்சி ஏற்படுவது இந்தப் பருவத்தில்தான். அந்தச் சமயத்தில் கர்ப்பம் தரிப்பதால் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுச் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

இளம் வயது கர்ப்பத்தால் அதிகமாகும் இறப்பு விகிதம்... தீர்வு என்ன?

ளம் வயதில் பெண்கள் கர்ப்பமடைவதால் குறைப்பிரசவம், எடை குறைவான குழந்தைகள் பிறப்பது போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. அதிக ரத்தப்போக்கு, பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி வெளியே வர முடியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாய் சேய் உயிரிழப்புகளும் அதிகமாகிவருகின்றன. உலக அளவில் ஆண்டுக்கு 2.1 கோடி இளம் பெண்கள் கர்ப்பமடைவதாகவும், அதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. 

இளம் வயது கர்ப்பம்

10 முதல் 19 வயது வரையுள்ள பருவ காலம் `வளரிளம் பருவம்' (adolescent) எனப்படுகிறது. உடலில் எலும்பு, தசை போன்ற உறுப்புகள் இந்தப் பருவத்தில்தான் வளர்ச்சியடையத் தொடங்கும். குழந்தைப் பருவம் மாறி, வளரிளம் பருவத்தில் உடலில் 30 முதல் 42 சதவிகித வளர்ச்சி ஏற்படும். இத்தகைய சூழலில் அந்தப் பெண்ணுக்குப் புரதச்சத்து அதிகம் தேவை. அந்தச் சமயத்தில் கர்ப்பம் தரிப்பதால் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுச் சிக்கல்கள் ஏற்படக்கூடும். புரதச்சத்து பற்றாக்குறையுடன் மாதவிடாய் சமயத்தில் ரத்தப்போக்கும் ஏற்படுவதால் இளம்வயதிலேயே ரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. 

``இளம் வயதில் கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடைந்திருக்காது. அந்தத் தருணத்தில் கர்ப்பம் தரிப்பதால் குறைப் பிரசவம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இந்தப் பருவத்தில் கருத்தரிப்புக்கான ஹார்மோன் உற்பத்தியாகி உடலில் மாற்றங்கள் நடைபெறத் தொடங்கினாலும் கர்ப்பப்பை பக்குவமடைந்திருக்காது. அந்த நிலையில் கர்ப்பமடையும்போது கர்ப்பப்பையில் இருக்கும் நஞ்சுக்கொடி (Placenta) அந்தப் பகுதியில் ஒழுங்காக ஒட்டாமல் இருக்கும். அதனால் பனிக்குடத்தில் போதுமான அளவு நீர் இருக்காது. அத்துடன் கர்ப்பப்பை சுருங்கி விரியும் தன்மையையும் இழந்துவிடும். இதனால் கருவுற்றிருக்கும்போதும், குழந்தை பிறந்த பிறகும் தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படும். பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி வெளியே வரமுடியாத நிலைகூட ஏற்பட்டு தாய் உயிரிழக்க நேரும்.

கர்ப்பம்

தாயின் இடுப்பு எலும்புகள் போதிய வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால் குழந்தைக்கும், தாய்க்கும் ஒத்திசைவு இருக்காது. ஆகையால்  மகப்பேறு மருத்துவர் அனுரத்னாஇதுபோன்ற சூழலில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையின் தலை பெரிதாக இருப்பதுபோல் தோன்றும். தாயின் இடுப்பெலும்பின் வழியே குழந்தையின் தலை வெளியே வருவதில் சிக்கல் ஏற்படும். இதனால் பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்தே குழந்தையை வெளியே எடுக்க வேண்டியிருக்கும். இத்தகைய இடர்பாடுகளால் தாய் மற்றும் குழந்தையின் இறப்பு விகிதங்கள் அதிகரிக்கின்றன. 

வளரிளம் பருவத்தில் பெண்களின் உடலில் நிகழும் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களால் உளவியல் ரீதியாகப் பாதிப்படைந்திருப்பர். மேலும், இந்தப் பருவத்தில் பெண்களுக்குக் கூச்ச சுபாவமும், தாழ்வு மனப்பான்மையும் அதிகமாகவே இருக்கும். திருமணம், குழந்தைப்பேறு போன்ற அழுத்தங்களை அவர்கள் எதிர்கொள்ளும்போது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவார்கள். 

வளரிளம் பருவத்தில் உடலில் ரத்த நாளங்கள் சிறியதாக இருக்கும். அவர்கள் கர்ப்பமடையும்போது ரத்த நாளங்கள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாவதால் உயர் ரத்தஅழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பிரசவத்துக்குப் பிறகும்கூட உயர் ரத்தஅழுத்தம் நிரந்தரமாக வாய்ப்புண்டு. இளம் வயதில் கர்ப்பமடைவதால் தாய்ப்பால் சுரப்பதில்கூட சிக்கல் ஏற்படும். 

ரத்த அழுத்தம்

இளமைக் கர்ப்பம் – காரணிகள்!

குழந்தைத் திருமணங்கள் சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்டுள்ளதால் அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டன. இருப்பினும் முழுவதுமாக ஒழிந்துவிடவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இளமைக்கால கர்ப்பத்துக்கு குழந்தைத் திருமணங்களும் முக்கியக் காரணம். இதுதவிர, பாலியல் வன்கொடுமை, இளம் வயதிலேயே பாலியல் செயல்பாடுகள் போன்றவையும் இளம் வயதில் பெண்கள் கருத்தரிப்பதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. கர்ப்பத்தைத் தவிர்க்கப் பாதுகாப்பான தடுப்பு வழிமுறைகளைக் கையாளாததும் இதற்குக் காரணமாகிறது...'' என்கிறார் மகப்பேறு மருத்துவர் அனுரத்னா.

கர்ப்பம்

இளமைக்கால கர்ப்பம் என்பது தனிநபர் சார்ந்த பிரச்னையல்ல. அதைச் சமூகப் பிரச்னையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ஆண், பெண் இருவருக்குமே இளமைக்காலம் என்பது ஆற்றல்மிக்கப் பருவம். இந்தப் பருவத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தைப் பேறு என்பது அந்தப் பெண்ணின் எதிர்காலத்தைச் சீர்குலைக்கும். ஒரு தனிமனிதன் சீர்குலைவு ஒட்டுமொத்த சமூகத்தின் ஆக்கத்திறனையும் பாழ்படுத்தும்.


டிரெண்டிங் @ விகடன்