`ஒரு நாளைக்கு இத்தனை கப்புக்கு மேல போனா..!' - காபி பிரியர்களே அலர்ட் | too much consumption of coffee leads to cardiovascular diseases

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (14/05/2019)

கடைசி தொடர்பு:16:20 (14/05/2019)

`ஒரு நாளைக்கு இத்தனை கப்புக்கு மேல போனா..!' - காபி பிரியர்களே அலர்ட்

நீண்ட காலம் காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் இதய ரத்தநாள நோய்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

காலையில் எழுந்ததும் சூடா ஒரு கப் காபி குடிக்கிறது வண்டிக்கு பெட்ரோல்போடுறது மாதிரி. பல பேருக்கு காபி உள்ளே போனாதான் வண்டி அடுத்த கியருக்கே நகரும். சிலருக்கு பெட் காபிதான் வேண்டும். 
 

காபி

 

தலைவலியா, சூடா ஒரு காபி குடிச்சா சரியாகிடும்.  

அலுவலக இடைவேளைகள் காபியால்தான் நிறைக்கப்படுகின்றன. 

காதலை வளர்ப்பதற்கு காபி(ஷாப்)தான் கைகொடுக்கிறது. 

வீட்டுக்குள் நுழைந்த விருந்தினர்களை வரவேற்பதும் காபிதான்.

இப்படி வாழ்க்கையின் அனைத்துத் தருணங்களையும் காபியுடன் பொருத்திப்பார்த்துவிடலாம். ஆனால், காபி அருந்துவது நமது உடலுக்குப் பொருத்தமானதுதானா என்ற கேள்வி பல காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம் என்ற ஆய்வை நடத்தியுள்ளது ஆஸ்திரேயாவில் உள்ள தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம். 

இதய ரத்தநாள நோய்கள்

நீண்ட காலம் காபி குடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் இதய ரத்தநாள நோய்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், 'காபியில் இருக்கும் கபைன் அதிக அளவில் உடலுக்குள் செல்லும்போது உயர் ரத்தஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. உயர் ரத்தஅழுத்தம் இதய நோய்களுக்குப் பிரதான காரணியாக விளங்குகிறது. அதனால் அதிக அளவில் காபி குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 22 சதவிகிதம் அதிகரிக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபைன்

ஆரோக்கியமான இதயம், சரியான அளவு ரத்த அழுத்தம் ஆகியவற்றைப் பெறுவதற்கு ஒரு நபர் ஒரு நாளைக்கு ஆறு கப்புக்கு மேல் காபி குடிக்கக் கூடாது. ஆறு கப்புக்கும் அதிகமாகக் குடிக்கும்போது கபைனின் அளவு அதிகரித்து இதய ரத்தநாள நோய்களுக்கான வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு 'தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன்' என்ற இதழிலும் வெளியாகியுள்ளது.