நடுவானில் பிரசவ வலி... விமானத்திலேயே பிரசவம்... பிறந்தது அழகிய பெண் குழந்தை! | Woman delivers a girl baby in the flight

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (14/05/2019)

கடைசி தொடர்பு:17:00 (14/05/2019)

நடுவானில் பிரசவ வலி... விமானத்திலேயே பிரசவம்... பிறந்தது அழகிய பெண் குழந்தை!

ர்ப்பிணி ஒருவர் விமானத்தில் பயணித்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், விமானம் உடனடியாகத் தரையிறக்கப்பட்டது. தரையிறங்கிய விமானத்தின் உள்ளேயே பிரசவமும் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்திருக்கிறது. 

விமானத்தில் பெண் குழந்தை பிறந்தது

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவுக்கு சர்வதேச விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த விமானம் இந்தியாவைக் கடந்துகொண்டிருக்கும்போது அதில் பயணித்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இந்தத் தகவல் விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதை அவசர நேர்வாகக் கருதி விமானத்தை உடனே தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து விமானம் ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்ட சம்பவம் அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவர் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் மருத்துவர் குழுவினர் விமானத்துக்குள் வைத்தே அந்தக் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர்.

விமானத்தில் பிரசவ வலி

``பிரசவத்தில் அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பாதுகாப்பு காரணங்களினால் அறுவை சிகிச்சை செய்யப் பயன்படுத்தும் கத்தியை விமானத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் குழந்தை பிறந்ததும் உடனடியாக தொப்புள்கொடியை அறுக்க முடியவில்லை" என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரசவம் நல்லபடியாக நடைபெற்றாலும் தாயும் சேயும் இன்னும் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை. அதே தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.