அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாட்டுக்கு உண்மையான காரணம் என்ன? | Truth Behind Medicine Shortage in Government hospitals

வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (15/05/2019)

கடைசி தொடர்பு:18:52 (15/05/2019)

அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாட்டுக்கு உண்மையான காரணம் என்ன?

ஊசி போடுவதற்கான சிரிஞ்சுகள், கையுறைகள் போன்றவற்றிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. கையுறை இல்லாததால் மருத்துவர்கள், லேப் டெக்னீஷியன்கள், நோயாளிகளை முறையாகச் சோதிக்காமல் பெயருக்குச் சிகிச்சையளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. 

அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாட்டுக்கு உண்மையான காரணம் என்ன?

ரசு மருத்துவமனைகளையே நம்பிக்கையாகக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் கடந்த சில மாதங்களாக கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மருத்துவர் பரிந்துரைக்கும் எந்தச் சீட்டைக் கொண்டுபோனாலும் `மருந்து ஸ்டாக் இல்லை' எனப் போன வேகத்தில் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். 

தெருவுக்குத் தெரு தனியார் மருத்துவமனைகள் முளைத்து விட்டாலும். பெரும்பாலான மக்கள் இன்னும் நம்பிக்கொண்டிருப்பது அரசு மருத்துவமனைகளைத்தான். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாகக் காய்ச்சல், தலைவலி முதல் இதயப் பாதிப்பு, புற்றுநோய்வரை எதற்கும் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் ஸ்டாக் இல்லை. உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டிய நாய்க்கடி, விஷக்கடி போன்ற பாதிப்புகளுக்கும்கூட மருந்துகள் இல்லை என்பதுதான் உச்சக்கட்ட அதிர்ச்சி.

மருந்து தட்டுப்பாடு

ஊசி போடுவதற்கான சிரிஞ்சுகள், கையுறைகள் போன்றவற்றிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. கையுறை இல்லாததால் மருத்துவர்கள், லேப் டெக்னீஷியன்கள், நோயாளிகளை முறையாகச் சோதிக்காமல் பெயருக்குச் சிகிச்சையளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. 

அரசு மருத்துவமனைகளில் திடீரென ஏன் இந்த நிலை? 

`மருந்துகள் தயாரிப்பதற்கான வேதிப்பொருள்களில் 80 சதவிகிதம் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. சூழல்மாசுபாட்டைக் காரணம்காட்டி அந்த நாட்டில் சில மருந்து மூலப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே தட்டுப்பாடு நிலவுகிறது. மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூன் மாதத்துக்குள் நிலை சீரடையும் '' என்கிறார் மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் உமாநாத்.

ஆனால், `தற்போதுள்ள நிலையைப் பார்க்கிறபோது, ஜூன் மாதத்திற்குள் நிச்சயம் நிலை சரியாக வாய்ப்பில்லை' என்கிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள். 

மருத்துவர்கள் கையுறை

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச்செயலாளர் காசி விரிவாக நம்மிடம் பேசினார். 

``தமிழகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலமாக நிதி ஒதுக்கப்படுகிறது. மருத்துவமனைகள் முதலாண்டில் எவ்வளவு செலவு செய்திருக்கிறதோ, அதைவைத்து அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கப்படும். சில மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தமாட்டார்கள். அடுத்தாண்டு நிதி ஒதுக்கும்போது குறைவாக ஒதுக்கிவிடுவார்கள். அதனால் பல மருத்துவமனைகளில் நிதிப் பற்றாக்குறை உண்டாகிவிடும். போதிய அளவுக்கு மருந்துகள் கொள்முதல் செய்யமுடியாமல் தட்டுப்பாடு ஏற்படும். 

சில மருத்துவமனைகள் வெகு சீக்கிரமாகவே ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவழித்து விடுவார்கள். டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய் பாதிப்புகள் வரும்போது அரசு அதற்கான சிறப்பு நிதியை ஒதுக்காமல் போனால், அவர்களுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் நிதியைச் செலவழித்து விடுவார்கள். அதனால் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு, மருந்து மாத்திரைகள் கொள்முதல் செய்வதில் பிரச்னைகள் உண்டாகும். 

ஊசி

சமீபகாலங்களில் நிதியே ஒதுக்காமல் இன்சூரன்ஸில் கிடைக்கும் தொகையை வைத்து மருத்துவமனைச் செலவுகளைப் மருத்துவர் அரங்கத்தின் பொதுச்செயலாளர் காசிபார்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள். வழக்கமாக ஒதுக்கும் நிதியை நிறுத்திவிடுகிறார்கள். இதுவும் நிதிப் பற்றாக்குறைக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. 

மருத்துவமனைக்கு என்னென்ன தேவை என்பதை அந்த மருத்துவமனையின் முதல்வர்கள்தான் அறிக்கையாக வழங்கவேண்டும். அதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தாலும் இது போன்ற மருந்துத் தட்டுப்பாடு வரும். ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் இந்தப் பிரச்னை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டதும் பிரச்னை ஓரளவுக்குச் சரியாகிவிடும். இந்த ஆண்டு தேர்தல் வந்துவிட்டதால் நிதி முழுமையாக ஒதுக்கப்படவில்லை. அதுதான் இப்போதைய நெருக்கடிக்கு முக்கியக் காரணம். மருத்துவமனை பொறுப்பாளர்கள் தேர்தல் வரும் என்பதை உணர்ந்து முன்பே அதற்கான வழிமுறைகளைச் சரியாகக் கையாண்டிருந்தால் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.

பல ஆரம்பச் சுகாதார மையங்களில் வேகவேகமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்திவிடுவார்கள். தனியார் நிறுவனங்களின் தலையீடு காரணமாக விலை அதிகமான மருந்துகளை வாங்குவதாலும் நிதிப் பற்றாக்குறை உண்டாகிவிடும்.

மருந்து

`சீனாவிலிருந்து வேதிப்பொருள்கள் இறக்குமதி செய்யமுடியாததுதான் காரணம்' என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அது எப்போதும் உள்ள பிரச்னைதான். அதைச் சரிசெய்ய வேண்டுமென்றால், அத்தியாவசியமான உயிர்க் காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், உபகரணங்கள் போன்றவற்றை மத்திய - மாநில அரசுகளே பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். அதன்மூலம் மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உத்தரவாதப்படுத்த முடியும். மருந்துகளை வாங்கும் செலவும் பன்மடங்கு குறையும்.

தமிழகச் சுகாதாரத்துறைச் செயலாளர், அதிகாரிகளின் கவனக்குறைவுதான் இதற்குக் காரணம். ஜூன் மாதம் தேர்தல் முடிந்துவிடும்; நிதி ஒதுக்கீடு செய்துவிடுவார்கள்; நிலை சரியாகிவிடும் என்கிற எண்ணத்தில், 'ஜூன் மாதத்தில் நிலை சரியாகிவிடும்' என்று சொல்கிறார்கள். உண்மையில் இந்தப் பிரச்னை ஓரிரு மாதங்களில் தீராது... '' என்றார் அவர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்