சம்மர் லீவ்ல குழந்தைகளை பாடம் படிக்கச் சொல்லாதீங்க! - மனநல மருத்துவரின் ஆலோசனை #Video | Summer vacation is the best time to teach life lessons

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (17/05/2019)

கடைசி தொடர்பு:15:51 (17/05/2019)

சம்மர் லீவ்ல குழந்தைகளை பாடம் படிக்கச் சொல்லாதீங்க! - மனநல மருத்துவரின் ஆலோசனை #Video

ஒவ்வொரு குழந்தையும் என்றைக்குத் தனக்கான விஷயங்களை, தானாகவே செய்யப் பழகுகிறதோ அதுதான் அனைத்துக்கும் அடிப்படையாக இருக்கும். அதற்கு இந்த விடுமுறைக் காலம் சரியான நேரம்.

சம்மர் லீவ்ல குழந்தைகளை பாடம் படிக்கச் சொல்லாதீங்க! -  மனநல மருத்துவரின் ஆலோசனை #Video

ள்ளி, கல்லூரிகளுக்கு  இது விடுமுறைக்காலம். `விட்டாச்சு லீவு' என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் குழந்தைகளுடன் நாமும் சேர்ந்து `செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே பாடுங்களேன் கொண்டாடுங்களேன்' என்று வெறும் கொண்டாட்டத்துடன் நின்றுவிடாமல் வாழ்க்கைப் பாடங்களையும் அவர்களுக்குக் கற்றுத் தரவேண்டியது அவசியம். 

குழந்தைகள் விடுமுறை

`விடுமுறை எவ்வளவு முக்கியம், ஏன் முக்கியம் என்பதைச் சொல்லித் தரவேண்டும், குறிப்பாக டீன் ஏஜ் குழந்தைகளுடன் அதிக நேரம் ஒதுக்கி அவர்களை நல்வழிப்படுத்தத் தகுந்த காலம்' என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா. இதுபற்றி அவர் விரிவாகப் பேசினார்.

``பள்ளிப்பருவத்தில் நாம் என்னதான் கல்வியைக் கற்றுக்கொண்டாலும், வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை பள்ளிப்பாடம் ஒருபோதும் கற்றுத்தராது. ஒவ்வொரு குழந்தையும் என்றைக்கு தனக்கான விஷயங்களை, தானாகவே செய்யப் பழகுகிறதோ அதுதான் அனைத்துக்கும் அடிப்படையாக இருக்கும். அதற்கு இந்த விடுமுறைக் காலம் சரியான நேரம். காலையில் எழுந்தவுடன் படுக்கையை மடித்து வைப்பதில் தொடங்கி உணவு தயாரிக்கும் பணியில் பெற்றோருக்கு உதவுவது, சுயமாகச் சாப்பிடுவது, சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை கழுவி வைப்பது, பெற்றோர் உதவியில்லாமல் சுயமாகப் பல் துலக்கப் பழகுவது, குளிப்பது என அனைத்து வேலைகளையும் அவர்கள் சுயமாகச் செய்யவேண்டும். அதற்கு அவர்களை  பெற்றோர் பழக்கப்படுத்தப்பட வேண்டும்.

விடுமுறை

`என்னுடைய குழந்தை டீன் ஏஜ் பருவத்தில் உள்ளது. அவனுக்கு / அவளுக்கு நீங்கள் சொல்லும் அடிப்படை விஷயங்கள் அனைத்தும் ஏற்கெனவே தெரியும்... தினசரி பழக்கமாக அவன் இதை ஏற்கெனவே செய்வான். அப்படியும் அவனுக்கு ஓய்வு நேரம் நிறைய கிடைக்கும். பூங்கொடி பாலா, குழந்தைகள் மனநல மருத்துவர்பகலில் சும்மாதான் இருப்பான். அந்த நேரத்தில், அவனைப் பள்ளிப் பாடம் பயில அறிவுறுத்தலாம்தானே?' எனச் சில பெற்றோர் எங்களிடம் கேட்பதுண்டு. இத்தகைய பெற்றோர் சிறுவர்களைவிட, டீன் ஏஜ் பருவத்தினருக்குத்தான் இந்தக் கோடை விடுமுறை அவசியம் என்பதை உணரவேண்டும். காரணம், சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவை அனைத்தும் எளிய வீட்டுப்  பழக்கங்களாகவே இருக்கும். ஆனால் டீன் ஏஜ் பருவத்தில் சொல்லிக் கொடுப்பவை மனநலம் சார்ந்து இருக்கும். 

அடிப்படையாகவே டீன் ஏஜ் பருவத்தினருடன், பெற்றோர் அதிக நேரம் செலவிடவேண்டும். விடுமுறைக் காலத்தில், பெற்றோர் அவர்களுக்குக் கூடுதலாக நேரம் ஒதுக்கவேண்டும். தோல்வியை எப்படி எதிர்கொள்வது, நட்பு வட்டத்தை எப்படி மேம்படுத்திக்கொள்வது, பாடத்திட்டத்தைத் தாண்டி கூடுதல் அறிவுத்திறனை எப்படி வளர்த்துக்கொள்வது, உறவினர்கள் மற்றும் பெரியவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதுபற்றிப் பேசவேண்டும். அவற்றுடன் உடல் சார்ந்த விஷயங்களையும் ஒரு கலந்துரையாடலாகப் பேசவேண்டியது அவசியம். பொதுவாக இளம்வயதில்தான், குழந்தையின் உடல் சார்ந்த மற்றும் உறுப்பு சார்ந்த வளர்ச்சிகள் இருக்கும். எனவே, அதைப்பற்றி அவர்களிடம் விரிவாகப் பேசவேண்டும். பெண் குழந்தை என்றால், மாதவிடாய் தொடர்பாகப் பேசி அதுபற்றிய விவரங்களைத் தெரியப்படுத்தலாம். பருவமடையாத பெண் குழந்தையாக இருந்தால், பருவமடையும்போது உடலில் நிகழும் மாற்றங்கள் பற்றி எடுத்துச் சொல்லலாம். எதிர் பாலினத்தின்மீது ஏற்படும் ஈர்ப்பு குறித்து பேசுவது, அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான ஆலோசனைகளையும் அவர்களுக்கு முறையாகச் சொல்லித்தரவேண்டும்.

விளையாட்டு

விடுமுறையில், குழந்தைகளை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வது மிகவும் நல்லது. அப்படிச் செய்யும்போது, நீங்கள் சொல்லிக் கொடுக்காமலேயே அவர்கள் சில விஷயங்களைப் புரிந்துகொள்வர். உதாரணமாக, உங்கள் வீட்டில் மெத்தை இருக்கலாம், உறவினர் வீட்டில் அது இல்லாமல் இருக்கலாம். அல்லது உங்கள் வீடு சின்னதாக இருக்கலாம், உறவினர் வீடு பெரிதாக இருக்கலாம். அதேபோல, இரு இடங்களிலும் உணவு மற்றும் சுவையில் நிறைய மாற்றங்கள் இருக்கும். உங்கள் வீட்டில் இல்லாத சில பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், வசதிகள் அங்கே இருக்கும். இவை அனைத்தையும் பார்க்கும்போதும், உபயோகிக்கும்போதும் சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவாறு குழந்தை தன்னைத்தானே பழக்கப்படுத்திக்கொள்ளும். எதை, எங்கே, எப்படிப் பேச வேண்டும், அடுத்தவர்களின் பொருள்களை எப்படி உபயோகப்படுத்த வேண்டும், சூழல்களை எப்படி அணுகுவது என்பதுகுறித்து அவர்கள் தாமாகவே புரிந்துகொள்வார்கள். வாய்ப்பிருந்தால், உறவினர்களை உங்கள் வீட்டுக்கு அழையுங்கள். அந்த உறவினரை நீங்கள் நடத்தும் விதத்தைப் பொறுத்து, குழந்தைகளும் அவர்களை அணுகக் கற்றுக்கொள்வார்கள். 

இவை அல்லாமல், பெற்றோர் தாங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். வாகனங்களைக் கழுவுவதில் தொடங்கி, வீட்டைச் சுத்தப்படுத்துவது, காய்கறி மற்றும் மளிகைப் பொருள்கள் வாங்கச் செல்வது, துணிகள் மற்றும் பொருள்களை முறையாகச் சுத்தப்படுத்தி அடுக்குவதுவரை அனைத்திலும் குழந்தையின் பங்கு இருக்கவேண்டியது அவசியம். இப்படிச் செய்வதால், குழந்தை வீட்டில் தனது இருப்பின் முக்கியத்துவத்தை உணரும். வேலையின் நடுவே, குழந்தையிடம் பேச்சுக்கொடுப்பதன்மூலம் அவர்களது எண்ணங்களை நீங்கள் புரிந்துகொள்ளலாம். 

பெற்றோர் நேரம் செலவிடுதல்

இவை அனைத்தும் மேலாக, குழந்தைக்கு ஓய்வு நேரம் கிடைத்தால், அவர்களை வெளியே சென்று விளையாட அனுமதியுங்கள். அப்படி விளையாடச் செல்லும்போது உங்கள் கண்பார்வைக்கு அப்பாற்பட்டு, முன்னறிவிப்பின்றி வெளியிடங்களில் விளையாடச் செல்லக் கூடாது என்பதை மட்டும் அவர்களுக்கு அறிவுறுத்தவும். ஒவ்வொரு நாளின் இறுதியிலும், அன்றைய நாளில் அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் அன்றைக்குச் சந்தித்த புதிய மனிதர்கள் யார் யார், அவர்களின் அணுகுமுறை எப்படி இருந்தது, உடன் விளையாடும் குழந்தை யார், அவர்கள் குறித்த இவர்களின் பார்வை எப்படி உள்ளது என அன்றைய சம்பவங்கள் அனைத்தையும் அவர்களிடம் பேசவேண்டும். ஆகவே, விடுமுறையை ஆரோக்கியமாகச் செலவிட அவர்களுக்கு நீங்கள் எதுவும் கற்றுத்தர வேண்டியதில்லை. அவர்களுடன் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். அது போதும்" என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்