வைரல் 'காக்ரோச் சேலஞ்ச்' - 'குவிக் ஹீரோ கான்செப்ட்' காரணமா? | Story about Internet's latest viral craze 'Cockroach Challenge'

வெளியிடப்பட்ட நேரம்: 13:56 (17/05/2019)

கடைசி தொடர்பு:15:25 (17/05/2019)

வைரல் 'காக்ரோச் சேலஞ்ச்' - 'குவிக் ஹீரோ கான்செப்ட்' காரணமா?

ஒரேயொரு கரப்பான் பூச்சியை முகத்தில் ஓடவிட்டு, சேலஞ்சை முதன்முதலில் தொடக்கி வைத்தவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 'அலெக்ச் அங்' என்ற இளைஞர். சமூக வலைதளங்களில் அது பரவியதையடுத்து தற்போது பலரும் தங்கள் முகங்களில் கரப்பான் பூச்சிகளை ஓடவிட்டு, போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வைரல் 'காக்ரோச் சேலஞ்ச்' - 'குவிக் ஹீரோ கான்செப்ட்' காரணமா?

ப்ளூ வேல் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், டென் இயர்ஸ் போட்டோ சேலஞ்ச், வீடியோ கால் சேலஞ்ச் வரிசையில் தற்போது இணையத்தில் டிரெண்டாகியிருப்பது 'காக்ரோச் சேலஞ்ச்'. முகத்தில் கரப்பான் பூச்சியை ஓடவிட்டு, சில நொடிகள் அப்படியே வைத்திருந்து, அதைப் போட்டோ எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் சிலர். பதிவுக்குக் கிடைக்கும் லைக், கமென்டுகளைப் பார்த்து மற்றவர்களும் அதைச் செய்து அப்லோடு செய்ய இணையத்தில் வைரலாகி வருகிறது 'காக்ரோச் சேலஞ்ச்'. தைரியமானவர்கள் மட்டுமல்ல, கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே பதறியடித்து ஓடும் பயந்தவர்களுமேகூட இந்த 'காக்ரோச் சேலஞ்'சில் தங்களைச் சேர்த்துக்கொண்டு, இணையத்தைக் கலக்கிவருகிறார்கள். 

காக்ரோச் சேலஞ்ச்

ஒரு பக்கெட் குளிர்ந்த நீரை, தலையில் ஊற்றியபடி அதை வீடியோ எடுத்துப் பகிர்ந்த 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்'; பத்து வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்ட 'டென் இயர்ஸ் போட்டோ சேலஞ்ச்'; வீடியோ கால் பேசி அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் பதிவு செய்த 'வீடியோ கால் சேலஞ்ச்'  போன்றவை சுவாரஸ்யமானவை. அவற்றால் யாருக்கும் பெரிய ஆபத்துகள் எதுவும் இல்லை. அதேநேரத்தில், ஆன்லைனில் யாரோ சொல்வதைக் கேட்டு கை, கால்களை கிழித்துக்கொண்ட 'ப்ளூ வேல் சேலஞ்ச்' ஆகட்டும், ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாடும் 'கிகி சேலஞ்'சாக இருக்கட்டும், தற்போது டிரெண்ட்டாகி வரும் 'காக்ரோச் சேலஞ்'சாக இருக்கட்டும்... அவை உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

ஒரேயொரு கரப்பான் பூச்சியை முகத்தில் ஓடவிட்டு, சேலஞ்சை முதன்முதலில் தொடக்கி வைத்தவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 'அலெக்ச் அங்' என்ற இளைஞர். சமூக வலைதளங்களில் அது பரவியதையடுத்து தற்போது பலரும் தங்கள் முகங்களில் கரப்பான் பூச்சிகளை ஓடவிட்டு, போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சென்சிட்டிவ்வான சருமம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக இது அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பலரும் இந்த சேலஞ்சில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள்.

அலெக்ச் அங்

``மிக விரைவாகப் பிரபலமாவதற்காக இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள். ஆனால், இந்த 'குவிக் ஹீரோ கான்செப்ட்' பாதுகாப்பானதோ, நிரந்தரமானதோ அல்ல'' என்று சொல்லும் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம், இதுபோன்ற விபரீதங்களில் இளைஞர்கள், தங்களை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக்கொள்வதற்கான காரணங்கள் குறித்து விரிவாகப் பேசினார். ஸ்வாதிக் சங்கரலிங்கம்

''முன்பெல்லாம் நிறைய படித்து உயர் பதவியில் இருப்பவர்கள், மக்களுக்குச் சேவை செய்யும் அரசியல் தலைவர்கள்; விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்கள்; சினிமா நடிகர், நடிகைகள்தான் மக்களால் கொண்டாடப்படும் பிரபலங்களாக இருந்தனர். இவர்களெல்லாம் ஏதோவொரு வகையில் தங்களை வருத்தி, கடின உழைப்பைச் செலுத்தி தங்களது திறமையால் அந்த நிலைக்கு வந்திருப்பார்கள். அதேபோல சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு 'நெகட்டிவ் பப்ளிசிட்டி'யால் பிரபலமானவர்களும் இருப்பார்கள்.

இருதரப்பினருமே மக்களால் அறியப்பட்டவர்களாக இருந்தாலும் யாரைக் கொண்டாட வேண்டும், யாரைப் பின்பற்றக் கூடாது என்பதை மக்கள் அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால், இன்றைய இணைய உலகத்தில் வித்தியாசமான ஒரு வசனத்தை பேசுவதன்மூலமும் ஒரு பாடலுக்கு நடனமாடுவதன் மூலமும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். ஒருமுறை மக்கள் தங்களைக் கவனித்துவிட்டால், பின்தொடர ஆரம்பித்துவிட்டால், அதைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் புதுப்புது முயற்சிகளில் இறங்குகிறார்கள். அப்படி ஆரம்பித்ததுதான் இந்தப் புதுப்புது சேலஞ்சுகள். 

இந்தத் திடீர் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கிடைக்கும் லைக், கமென்ட்டுகளை  தங்களது சாதனையின் அளவுகோலாக நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். நன்றாகப் படிப்பதால், விளையாட்டுகளில் சாதனைகள் செய்வதால் கிடைக்கும் பேர், புகழ், மரியாதை அவர்களை இன்னும் திறமையாகச் செயல்படவைக்கும். அதனால் அவர்களுக்கு நன்மை கிடைப்பதுடன் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் அவை தூண்டுகோலாக இருக்கும். ஆனால், இதுபோன்ற சமூகவலைதள சாகசங்களால் பிரபலமானவர்கள் கிகி, சேலஞ்ச், கரப்பான்பூச்சி சேலஞ்சுகளை நோக்கித்தான் போவார்கள். இதனால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. விபரீதங்கள் நிகழவே வாய்ப்பிருக்கிறது. 

செல்பி விபத்து

இன்று, கரப்பான்பூச்சி சேலஞ்ச் செய்பவர்கள், நாளைக்கு 'ஸ்னேக் சேலஞ்ச்' செய்யப்போவதாகச் சொல்லிக்கொண்டு பாம்பின் அருகே நின்றபடி படம் பிடித்துப் போடுவார்கள். அதை யாராவது முயன்றால், அதனால் விபரீதங்களே ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ரயில் படிக்கட்டில் நின்றபடி செல்ஃபி எடுக்கவும், ஃபேஸ்புக்கில் லைவ் போடவும் முயன்று தவறி விழுந்து இறந்தவர்கள் பலர். இதுபோன்ற முயற்சிகளை அவற்றுக்குக் கிடைக்கும் லைக், கமென்ட்டுகளுக்கு ஆசைப்பட்டே பலர் செய்கிறார்கள். அரைகுறை ஆடையுடன் நடனமாடுவது, ஆபாச வசனங்களுக்கு வாயசைப்பது, பிறரை வசைபாடுவது எனப் பல விஷயங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் பல்வேறு விபரீதங்களில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள்.

தங்களைத் தனித்துவமாகக் காட்டிக்கொள்ளும் குணம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும்கூட இருக்கிறது. ஆனால், எந்த வழியில் எப்படி தாங்கள் முன்னிலைப் படுத்தப்படுகிறோம், பிரபலமாகிறோம் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களால் கிடைக்கும் பெயரும் புகழும் நிரந்தரமானதல்ல. `கோமாளித்தனங்களைப் பார்த்து ரசித்தே லைக் செய்கிறார்கள்; திறமைகளைப் பார்த்து அல்ல' என்பதை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் தனித்துவமாக இருக்க விரும்பினால் நம்முடைய தனித்திறன்களைக் கண்டறிந்து, அதற்கு முறையாகப் பயிற்சி எடுத்து, திறமைகளை மேம்படுத்த வேண்டும். அது ஓவியம் வரைதல், பாடல் பாடுதல், நடனம் ஆடுதல், கவிதை எழுதுதல் என எதுவாகவும் இருக்கலாம். அதனால் கிடைக்கும் பெயரும் புகழும், அங்கீகாரமும் மட்டுமே நிலையானதாக இருக்கும்.

வெற்றி

எந்தவொரு விஷயத்திலும் வெற்றிபெற சில காலங்கள் ஆகும். அதற்குப் பல்வேறு பயிற்சிகள், அனுபவங்கள் தேவைப்படும். ஆனால், பொறுமை இல்லாதவர்கள்தான் இதுபோன்ற குறுக்குவழிகளில் இன்ஸ்டண்ட் பாப்புலராக முயல்வார்கள். இவற்றைக் குறும்புத்தனமாக செய்வதில் எந்தத் தவறும் இல்லை. அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி தற்காலிகமானதே என்பதைப் புரிந்துகொண்டவர்களாலும் எந்தப் பிரச்னையும் இல்லை. அப்படி இல்லாமல் தனது திறமைகளை நிர்ணயிக்கக்கூடியது என்றும், அதனால் கிடைக்கும் லைக், கமென்ட்டுகள் மிகப்பெரிய அங்கீகாரம் தரக்கூடியவை என்றும் கருதக்கூடியவர்கள் நிச்சயம் மாற வேண்டும் '' என்கிறார் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்