ராணுவத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ராணுவ வீரர் அந்தஸ்து - பாதுகாப்பு அமைச்சகம் முடிவு! | Military Nurses get ex-servicemen status

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (18/05/2019)

கடைசி தொடர்பு:16:40 (18/05/2019)

ராணுவத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ராணுவ வீரர் அந்தஸ்து - பாதுகாப்பு அமைச்சகம் முடிவு!

'செவிலியர்களுக்கும் பிற ராணுவ வீரர்களைப் போன்று அனைத்து அந்தஸ்தையும் வழங்க வேண்டும்' என்று செவிலிய சேவைப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள் சட்டபூர்வ போராட்டத்தை நடத்தி வந்தனர்.

ந்திய ராணுவம் மற்றும் ஆயுதப் படைகளில் பணியாற்றி ஓய்வுபெறும் செவிலியர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் (Ex-serviceman) அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவத்தில் பணியாற்றும்போது பிரிகேடியர் மற்றும் அதற்கு மேலான ரேங்கில் பணியாற்றும் செவிலியர்கள் தங்கள் அலுவலக வாகனங்களில் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட போர்டை பொருத்திக்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட உள்ளது.

செவியர்களுக்கு ராணுவ வீரர் அந்தஸ்து


இந்திய ராணுவத்தில் செவிலிய சேவையில் ( Military Nursing Service) 5,300 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். ராணுவத்தில் முழுக்க முழுக்க பெண் அதிகாரிகள் பணியாற்றும் பிரிவும் இதுதான். ஆனால், இந்தப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ராணுவ அதிகாரிகளுக்கான அந்தஸ்து, சிறப்பு உரிமைகள், சலுகைகள் ஆகியவை வழங்கப்படுவதில்லை. ராணுவத்தில் பணியாற்றும் செவிலியர்களும் பிற ராணுவத்தினரைப் போன்று பச்சை வண்ண சீருடை அணிந்தனர். அதுவும் பழுப்புநிற சீருடையாக 2004-ம் ஆண்டு மாற்றப்பட்டது. இது செவிலியர்களை மேலும் வருத்தமடையச் செய்தது.

'செவிலியர்களுக்கும் பிற ராணுவ வீரர்களைப் போன்று அனைத்து அந்தஸ்தையும் வழங்க வேண்டும்' என்று செவிலிய சேவைப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள் சட்டபூர்வ போராட்டத்தை நடத்தி வந்தனர். 2010-ம் ஆண்டு ஆயுதப் படைகள் தீர்ப்பாயம் ராணுவத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ராணுவ வீரர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். என்று தீர்ப்பளித்தது. ஆனால், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது.

செவிலியர்


இந்தநிலையில், ஓய்வுபெறும் செவிலியர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் அந்தஸ்தை வழங்க ராணுவத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் குழு மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான சட்டபூர்வ மற்றும் தொழில்நுட்ப பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட பிறகு, இந்த முடிவு அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
ஓய்வுபெறும் செவிலியர்களுக்கும் முன்னாள் ராணுவ வீரர் அந்தஸ்து வழங்கப்பட்டால் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படும். அதன் மூலம் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, ராணுவ வீரர்களின் மறுகுடியேறத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் உரிமை ஆகிய சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.