உடல் சூட்டைப் போக்கும்... சரும பாதிப்புகளைத் தடுக்கும் 'மண் குளியல்' சிகிச்சை! | The benefits of mud baths

வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (18/05/2019)

கடைசி தொடர்பு:19:35 (22/05/2019)

உடல் சூட்டைப் போக்கும்... சரும பாதிப்புகளைத் தடுக்கும் 'மண் குளியல்' சிகிச்சை!

உடல் சூட்டைப் போக்கும்... சரும பாதிப்புகளைத் தடுக்கும் 'மண் குளியல்' சிகிச்சை!

குளிக்கும்போது உடல் அழுக்கைப் போக்க சோப்பு; தலை அழுக்கினைப் போக்க ஷாம்பு, கண்டிஷனர் என அழுக்கு நீக்கிகளின் பட்டியல் நீள்கிறது. அந்தக் காலங்களில் வெறும் மண்ணை தலை, உடல் முழுக்கத் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் இருந்தது. இன்றைக்கும் கிராமங்களில் கோடையில் கொண்டாடப்படும் கோயில் விழாக்களில் `சேத்தாண்டி வேஷம்' என்ற பெயரில் பக்தர்கள் சகதி நிறைந்த குளம், கண்மாய்க்குள் உருண்டு புரண்டும், சேற்றை அள்ளிப் பூசியபடியும் வலம் வருகிறார்கள். மண்ணுக்கும் குளியலுக்கும் பாரம்பர்யத் தொடர்பு அதிகம். ஆனால் இயற்கை மருத்துவத்தில், மண் ஒரு சிகிச்சை முறையாகவே பின்பற்றப்படுகிறது.

சேத்தாண்டி வேஷம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண் குளியல் சிகிச்சை இலவசமாகத் தரப்படுகிறது. கோடைக்காலத்தில் அதிகரிக்கும் உடல் சூடு மற்றும் சருமப் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு தருவதால்இயற்கை மருத்துவர் தீபா பலரும் மருத்துவமனை சென்று மண் குளியலில் ஈடுபட்டுவருகிறார்கள். 

உடல் ஆரோக்கியம் தரும் மண் குளியல் பற்றித் தெரிந்துகொள்ள, மருத்துவக்கல்லூரியின் இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர் யோ.தீபாவிடம் பேசினோம்.

``பிரபஞ்சத்தில் பேரண்டம் என்பது பூமி, சிற்றண்டம் உடல். பிரபஞ்சத்தில் உள்ள நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து அடிப்படை தாதுக்கள் நம் உடலிலும் நிறைந்துள்ளன. இதுவே நம் பாரம்பர்ய மருத்துவம் உணர்த்தும் செய்தி. அப்படியான பஞ்ச மகா பூதங்களில் ஒன்றான நிலத்தில் உள்ள மண்ணைக் கொண்டே மண் குளியல் சிகிச்சை தரப்படுகிறது. இதை உணர்ந்த நம் முன்னோர் உடலில் மண்ணைத் தேய்த்துக் குளிப்பது, காயங்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துவது என மண் சிகிச்சை முறைகள் வழக்கத்தில் இருந்தன. நாகரிக மாற்றத்தால் அது வழக்கொழிந்து கிராமங்களுடன் நின்றுவிட்டது. மண்ணில் இயற்கையிலேயே தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை நம் சருமத்தில் படும்போது பல்வேறு மருத்துவப் பலன்களை தருகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே மண் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஒரு வகைதான் 'மண் குளியல்' சிகிச்சை.

மண் குளியல் சிகிச்சை

பூமியில் மூன்று முதல் நான்கு அடி ஆழத்தில் மண் எடுக்கப்பட்டு அதிலுள்ள தேவையற்ற பொருள்களும், பெரிய கற்களும் நீக்கப்படும். பின்னர் அந்த மண்ணைச் சூரிய ஒளியில் உலரவைத்து அதிலுள்ள கிருமிகள் நீக்கப்படும். இதுபோன்று பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே மண் பயன்படுத்தப்படுகிறது. குளியலுக்காகப் பயன்படுத்தப்படும் மண்ணை ஒரு பாத்திரத்தில் எடுத்து நீர் சேர்த்து குழைவாகக் கரைக்கவேண்டும். உள்ளாடையை மட்டும் அணிந்துகொண்டு, உடலில் சூரியஒளி படுமாறு ஓர் இருக்கையில் அமர்ந்துகொண்டு தலைமுடி தவிர உடல் முழுவதும் மண்ணைப் பூசவேண்டும். அதன்பிறகு சூரிய வெளிச்சத்தில் சில நிமிடங்கள் நிற்கவேண்டும். 

நோய் பாதிப்புகளைப் பொறுத்து மண்ணுடன் சில மூலிகைகள் சேர்க்கப்பட்டு மண் குளியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உதாரணமாக, வெயிலில் வரக்கூடிய அக்கி பாதிப்புகளுக்குக் குப்பைமேனி இலைகளைச் சேர்த்தும், சின்னம்மை பாதித்தால் மண்ணுடன் மஞ்சள், வேப்பிலை சேர்த்துக் குழைத்துப் பூசுவோம். கை, கால், முகம், கழுத்து, வயிறு என நோய்க்குத் தகுந்தவாறு பூசவேண்டும். குறிப்பிட்ட நோய் பாதிப்புக்கு ஏற்ப எந்தப் பகுதியில் மண் சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதை இயற்கை மருத்துவர் ஆலோசனைப்படி செய்யவேண்டும். உடலில் மண் பூசும்போது, பாதத்திலிருந்து மேல் நோக்கிப் பூசவேண்டும். சுமார் 30 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் படுமாறு நின்றபிறகு குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும். 

மண் குளியல்

உடலில் கழிவுகள் தங்குவதே பல்வேறு நோய்களுக்குக் காரணம். கழிவுகளை வெளியேற்றும் முக்கியப் பணியைத் தோல் செய்கிறது. வியர்வை வழியாக வெளியேறும் கழிவுகள் தோலில் தங்குவதால் அரிப்பு போன்ற சருமப் பிரச்னைகள் உண்டாகும். கோடை வெயிலும் சேர்ந்துகொள்வதால் சருமப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில் மண் குளியல், எப்படிப்பட்ட தோல் நோயாக இருந்தாலும் அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, குணமாக்க உதவும். 

உடலில் கழிவுகள் தேங்கினால் உடல் சூடு அதிகரிக்கும். இந்த நிலையில் மண் குளியல் சிகிச்சை எடுத்தால் ஈரப்பதத்தைத் தக்கவைத்து உடலுக்குக் குளிர்ச்சி தரும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டைச் சீராக்கும்; மலச்சிக்கல் பிரச்னைகளைப் போக்கும்; சிறுநீரகப் பாதிப்பைக் குறைக்கும். தோலில் அதிக எண்ணெய்ப் பசை உள்ளவர்கள் மண் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்குப் பாத எரிச்சல் குறைக்க உதவும். உடல் பருமன், வெரிக்கோஸ் வெயின், கால் வலி, சிறுநீரகப் பிரச்னை, நரம்புக் கோளாறுகள், முடக்கு வாதம் எனப் பல்வேறு நோய்களுக்கும் மண் சிகிச்சை சிறந்தது. குறிப்பாக, மண் சிகிச்சை பக்கவிளைவுகள் இல்லாமல் நோயைக் குணப்படுத்த உதவும். 

மண்சிகிச்சை எடுத்துக்கொள்பவர்

மண் குளியல் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் சிலவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும். சுயமாக இந்தக் குளியல் சிகிச்சை எடுப்பதைத் தவிர்க்கவேண்டும். ஆரோக்கியமான ஒருவர் முதல் முறையாவது இயற்கை மருத்துவர் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. அதன்பிறகு தாமாக எடுத்துக் கொள்ளலாம். மண் குளியல் சிகிச்சை எடுப்பவர்கள் வெறும் வயிற்றில் இருக்கவேண்டும். சாப்பிட்ட இரண்டரை மணிநேரம் கழித்தும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். சிகிச்சைக்கு முன்பாக நோயாளிகள் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும். இளம் வெயிலில் மண் குளியல் எடுத்துக்கொள்வது நல்லது" என்கிறார் தீபா. 

அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. உள் நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறுவோர் பலருக்கும் மண் குளியல் சிகிச்சை தரப்படுகிறது. 10 வயதுக்கும் மேற்பட்ட ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

வீடியோ: கிராபியென் ப்ளாக்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை