குடிக்க வெந்நீர் கேட்டது ஒரு குத்தமா?- விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் | Bad experience for a woman in fight

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (22/05/2019)

கடைசி தொடர்பு:15:05 (22/05/2019)

குடிக்க வெந்நீர் கேட்டது ஒரு குத்தமா?- விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

மும்பையிலிருந்து கொச்சிக்கு சென்றுகொண்டிருந்தது அந்தத் தனியார் விமானம். அதில் கடைசி இருக்கையில் ஒரு பெண்ணும் அவர் அருகில் ஒரு முதியவரும் பயணித்துக்கொண்டிருந்தனர். பயணத்தின் நடுவே முதியவர் விமானப் பணிப்பெண்ணிடம் குடிக்க வெந்நீர் கேட்டிருக்கிறார். குடிப்பதற்கு வெந்நீர் என்று கேட்டால் வெதுவெதுப்பான நீரைத்தான் கொடுப்பார்கள். ஆனால் அந்தப் பணிப்பெண்ணோ கொதிக்கும் நீரை கண்ணாடி டம்ளரில் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அத்தனை சூடாக இருக்கும் என்று எதிர்பாராத முதியவர் டம்ளரை வாங்கியதும், சூடு தாங்க முடியாமல் பிடியை விட்டுவிட்டார். அவ்வளவுதான்!. டம்ளரில் இருந்த வெந்நீர் அருகிலிருந்த பெண்ணின் மீது சிந்திவிட்டது.

பணிப்பெண் வெந்நீர் கொடுத்தார்


துடித்துப்போனார் அந்தப் பெண். வெந்நீரின் சூடு காரணமாக அவருக்கு 20 சதவிகித தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. `விமான நிர்வாகமோ, ஊழியர்களோ தனக்குத் தேவையானவை எந்த உதவியையும் செய்யவில்லை' என்று அந்தப் புகார் தெரிவித்துள்ளார்.
``டம்ளரில் இருந்த அதிக சூடான வெந்நீர் கொட்டியதும் என் கால் தொடையின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் தோல் பொசுங்கிவிட்டது. வெப்பத்தினால் இரண்டு அடுக்குத் தோல் உரிந்து தசை வெளியே தெரிந்தது. அந்த வலி மிகவும் கொடுமையானதாக இருந்தது. வலியோடு எழுந்து சென்று விமான ஊழியர்களிடம் விவரத்தைக்கூறினேன். அவர்கள் காயத்தில் வைக்க ஐஸ்கட்டிகளைத் தந்தனர். விமானத்தில் உணவுப்பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் காயத்தின் மீது ஐஸ்கட்டியை வைத்தபடியே நின்றுகொண்டிருந்தேன். 

விமானப் பயணம்


விமானத்தில் ஏதேனும் மருத்துவர்கள் பயணித்தால் எனக்கு உதவும்படி அறிவியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டேன். அறிவித்தார்களா இல்லையா என்று தெரியாது. ஆனால் சிறிது நேரத்தில் கேபின் கண்காணிப்பாளர் என்னைப் பார்க்க வந்தார். வந்த சிறிது நேரத்தில், `விமானம் தரையிறங்கும்போது என்னுடைய சூட்கேஸை எடுத்துக்கொண்டு இறங்கவேண்டும்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். 

மோசமான அந்த நிலையிலும் விமான ஊழியர்கள் எனக்கு எந்த உதவியையும் செய்ய முன்வரவில்லை. பிற பயணிகளும் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தனர். நானே என்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு விமானத்திலிருந்து வெளியேறினேன். கொச்சின் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான உதவியை விமானநிலைய அதிகாரிகள் செய்தனர். அங்கிருந்த விமான நிலைய மருத்துவர் என்னை உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். மருத்துவமனையில் காயத்திற்கு சிகிச்சை பெற்றேன்.

வெந்நீர்

இந்தச் சம்பவத்துக்காக விமான நிறுவனம் எனக்கு நிவாரணம் அளிக்கவேண்டும் என்று கூறி கடிதம் எழுதினேன். ஆனால் நடந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கோருவதாக மட்டும் மின்னஞ்சல் வந்தது" என்று தெரிவித்திருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.
விமான நிறுவன நிர்வாகமோ, `அந்தப் பெண்ணுக்குத் தேவையான உதவிகளை அளிப்பதற்கு ஊழியர்கள் முன்வந்தனர். அவை அனைத்தையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்' என்று தெரிவித்துள்ளது.