வெப்பம் தணிக்கும், உடல் உபாதைகளைப் போக்கும் இளநீர், நுங்கு! | Refreshing Summer Drinks, Foods for heat related health issues

வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (24/05/2019)

கடைசி தொடர்பு:16:14 (24/05/2019)

வெப்பம் தணிக்கும், உடல் உபாதைகளைப் போக்கும் இளநீர், நுங்கு!

"கோடையில் குழந்தைகளுக்கு ஏற்படும் வியர்க்குரு, வேனற்கட்டிகள் ஆகியவற்றுக்கு நுங்கை உடலில் பூசி குளிக்கவைத்தாலே அவை மறைந்துவிடும். விலை உயர்ந்த, ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட க்ரீம் மற்றும் லோஷனுக்குப் பதில் இயற்கையின் கொடையான நுங்கைப் பயன்படுத்தினால் பாதிப்புகளைத் தடுக்கலாம்."

வெப்பம் தணிக்கும், உடல் உபாதைகளைப் போக்கும் இளநீர், நுங்கு!

ருவநிலை மாறுபடும்போது அதற்கேற்றாற்போல் நமது உடலை சமன்படுத்துவதில் உணவுகளுக்குப் பெரும் பங்கு உண்டு. அந்த வகையில் கோடையில் ஏற்படும் வெப்பத்தைத் தணித்து உடலைக் குளிர்ச்சியாக்க நிறைய உணவுப்பொருள்கள் உள்ளன. அவற்றில் தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீரும், பனைமரத்திலிருந்து கிடைக்கும் நுங்கும் வெப்பம் தணிக்கும் இரட்டையர்கள் என்றே கூறலாம்.

கோடை

இளநீர், நுங்கின் மருத்துவக் குணங்களையும், அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் விளக்குகிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்.வி.விக்ரம்குமார்.

``தாகத்தைத் தணிக்க தண்ணீரைத் தாண்டி இயற்கை நமக்கு அளித்த கொடை இளநீர். அக்காலத்தில் இளநீர் பிரதான குளிர்பானமாக இருந்தது. கேளி இளநீர், பச்சை இளநீர், செவ்விளநீர், மஞ்சள் கச்சி, ஆயிரங்கச்சி உட்பட பல்வேறுவகையான இளநீர் நம்மிடையே இருந்தன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவக்குணம் உண்டு. குறிப்பிட்ட நோய்க்குக் குறிப்பிட்ட வகை இளநீரைக் குடித்தால் தீர்வு கிடைக்கும் என்ற நிலை இருந்தது. காலப்போக்கில் பச்சை இளநீர், செவ்விளநீரைத் தவிர மற்ற வகை இளநீரைப் பார்க்கமுடியவில்லை. 

சோழர் காலத்தில் மருத்துவச் சாலைகளில் இளநீர் முக்கிய பானமாகப் பயன்படுத்தப்பட்டது. அங்குச் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அது மருந்தாகவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகள், போர் முடிந்ததும் நடைபெறும் வெற்றி விழாக்கள், வீட்டில் நடைபெறும் சடங்குகள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் செவ்விளநீர்க் குலைகளை கட்டிவைத்து அதன் முக்கியத்துவத்தைப் பறைசாற்றினார்கள்.

இளநீர்

சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை மருந்துகள் தயாரிக்கவும், மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை சுத்தம் செய்யவும், பல மருந்துகளுக்கு அனுபானமாகவும் இளநீர் இருக்கிறது. மேலைநாடுகளில் பல உணவகங்களில் தண்ணீருக்குப் பதில் இளநீர் பரிமாறும் பழக்கம் அதிகரித்துவருகிறது. ஆனால் நாம் இளநீரின் மகத்துவத்தை உணராமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்குரியது. 

பச்சை இளநீரில் நிறைய நுண்ணூட்டச்சத்துகள் இருக்கின்றன. குறிப்பாக பொட்டாசியம், மக்னீசியம், நீர்ச்சத்து மற்றும் குளிர்ச்சித்தன்மை அதிக அளவில் காணப்படுகின்றன. இளநீரில் உள்ள `கைனெடின்' (Kinetin) என்ற பொருள் சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுத்து முதுமையைத் தள்ளிப்போட உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இளநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான வேலைகளை ஆன்டிஆக்ஸிடன்ட் செய்கிறது. 

செவ்விளநீரில் பச்சை இளநீரைக் காட்டிலும் குளிர்ச்சி அதிகம். அதில் ஊட்டச்சத்துகளும் அதிகம். கர்ப்பகாலத்தில் பெண்களுக்குத் தேவையான ஊட்டங்களைக் கொடுக்கக்கூடியது செவ்விளநீர். இளநீரில் உள்ள மென்மையான நீர்த்தன்மையும், வழுக்கைப்பகுதியும் குடற்புண்களை நீக்கக்கூடியது. அத்துடன் உடலுக்குக் குளிர்ச்சியையும் கொடுக்கும்.  

நுங்கு

நமது கலாசாரத்தின் சின்னமாக நுங்கைச் சொல்வார்கள். அந்தக் காலத்தில் சிறுவர்களின் முக்கிய விளையாட்டுப் பொருளாக நுங்கு வண்டி இருந்தது. இன்று நுங்கு வண்டியையும் காணமுடியவில்லை, நுங்கின் பயன்பாட்டையும் காணமுடியவில்லை. 

கோடைக்காலத்தில் ஏற்படும் வெப்பம் சார்ந்த நோய்கள் வயிற்றுக்கழிச்சல், வயிற்று வலி, சூட்டினால் ஏற்படும் செரிமான உபாதைகளுக்கு நுங்கு நல்ல மருந்து. நுங்கை துவர்ப்புத்தன்மையுடன் கூடிய அதன் தோலுடன் சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கி, உடல் குளிர்ச்சியடையும். குறிப்பாக கோடையில் குழந்தைகளுக்கு ஏற்படும் வியர்க்குரு, வேனற்கட்டிகள் ஆகியவற்றுக்கு நுங்கை உடலில் பூசி குளிக்கவைத்தாலே அவை மறைந்துவிடும். விலை உயர்ந்த, ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட க்ரீம் மற்றும் லோஷனுக்குப் பதில் இயற்கையின் கொடையான நுங்கைப் பயன்படுத்தினால் பாதிப்புகளைத் தடுக்கலாம்.

பனை

இளநீரில் இருப்பதுபோல நுங்கிலும் நுண்ணூட்டங்கள் அதிகமாக இருக்கின்றன. நுங்கைப் பயன்படுத்தி பல்வேறு பானங்களைத் தயாரிக்கலாம். தென்தமிழகத்தில் நுங்கு சர்பத் மிகவும் பிரபலம். அதை வீட்டிலேயே தயாரிக்கலாம். நுங்கை நன்றாக மிக்ஸியில் அடித்து அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து சர்பத்தாக அருந்தலாம். 

இளநீர், நுங்கு இரண்டிலும் இருக்கும் மிகமுக்கியமான விஷயம் என்னவென்றால், இவற்றில் அத்தனை எளிதாகக் கலப்படம் செய்யமுடியாது. நேரடியாக நமக்குக் கிடைக்கக்கூடியது. அதனால் பயம் இல்லாமல் இளநீர், நுங்கைப் பயன்படுத்தலாம்" என்கிறார் டாக்டர் வி.விக்ரம்குமார்.

வீடியோ: கிராபியென் ப்ளாக்


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை