``கேட்ஜெட்டை கண்ணருகே பார்த்தால் குழந்தைகளுக்கு என்ன பிரச்னை வரும்?'' நிபுணர் பதில் | Gadgets increase this problem in your kid's eyesight

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (25/05/2019)

கடைசி தொடர்பு:13:25 (25/05/2019)

``கேட்ஜெட்டை கண்ணருகே பார்த்தால் குழந்தைகளுக்கு என்ன பிரச்னை வரும்?'' நிபுணர் பதில்

`` `கிட்டப் பார்வை வந்தால், ஸ்பெக்ஸ் போட்டுக்கலாம் அங்கிள்; இப்போ அழகழகான ஃபிரேம்கள் வந்திருக்கு. கண்ணாடி போட்டுக்கிட்டா ஸ்டைலா இருக்கும்' என்று என்னிடமே நிறைய குழந்தைகள் சொல்கிறார்கள்.''

``இன்னிக்கி உங்க பிள்ளைகள் எவ்வளவு நேரம் கேட்ஜெட்டில் கேம் விளையாடினாங்க என்று கேட்டால், உங்களால சரியா பதில் சொல்ல முடியுமா? முடியாது அல்லவா! அப்படின்னா, பிள்ளைகள் ரொம்ப நேரம் கேட்ஜெட்டில் விளையாடி இருக்காங்கன்னு அர்த்தம். மொபைல் போனில் ரொம்ப நேரம் கேம் விளையாடுறது தப்புன்னு தெரிஞ்சும், அதைவிட முடியாமல் கஷ்டப்படுற நிறைய குழந்தைகளை இன்னிக்கு நான் பார்த்துக்கிட்டிருக்கேன்'' என்று பேச ஆரம்பிக்கிற டாக்டர் பார்த்தசாரதி, தூரத்தில் இருக்கிற பொருள்களைப் பார்க்கும் திறன், குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை கடகடவென அதிகமாவதற்கான காரணம், இதன் அதிகபட்ச ஆபத்து ஆகியவற்றைப் பற்றிச் சொல்கிறார். 

குழந்தை - கேட்ஜெட்

``ஒரு தலைமுறைக்கு முந்தைய குழந்தைகளின் பொழுபோக்கு வீட்டுக்கு வெளியே இருந்ததால, `சூரியனைப் பாரு; இன்னிக்கு முழு நிலா எவ்ளோ அழகா இருக்கு; கல்யாண முருங்கையோட சிவப்புக் கலர் பூ எவ்ளோ உச்சியில் பூத்திருக்குப் பாரேன்' என்று உயரமான இடத்தில் இருந்த விஷயங்களையும் கூர்ந்து பார்த்து ரசிச்சோம். அதனால, அந்தத் தலைமுறை கண்களோட பார்க்கும் திறன் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்துச்சு. ஆனா, இன்னிக்கு வீட்டுக்குள்ளேயே பொழுதுபோக்குகிற மாதிரி டி.வி., போன், டேப், ஐ பேட், லேப்டாப் என்று எலக்ட்ரானிக் சாதனங்கள் நிறைய வந்துவிட்டன. அதனால், இந்தக் கால குழந்தைகள் பார்த்து ரசிக்கிற, விளையாடுகிற அத்தனை விஷயங்களும் கண்களுக்கு அருகேயே இருக்கு. இதனால, தூரத்துல இருக்கிற பொருள்களை பார்க்கிற திறன் கண்கள்ல மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். 

கண் டாக்டர் பார்த்தசாரதிபள்ளிக்கூடத்திலும் நோட்டு, புத்தகம், எழுதுறது, படிக்கிறது என்று எல்லாமே கண்களுக்கு அருகே வைத்துப் பார்க்கிற நியர் விஷன்தான். இதில், வீட்டிலும் கண்களுக்குப் பக்கத்துல வைச்சுப் பார்க்கிற கேட்ஜெட்களையே குழந்தைகள் நேரம், காலம் தெரியாமல் பார்த்துக்கிட்டிருந்தா... யோசியுங்க.

இன்னிக்கு, உலக அளவுல குழந்தைகளுக்கான பிரச்னையில் கண் பார்வை மங்குவதுதான் மிகப் பெரிய பிரச்னையா இருக்கு. ஹாங்காங், மலேசியா போன்ற நாடுகள்ல 30-க்கு 28 குழந்தைகள் கண் பார்வை மங்கும் பிரச்னைக்காகக் கண்ணாடி அணியுறாங்க. சிங்கப்பூர் பள்ளிக்கூடங்களில், குழந்தைகளின் பார்க்கும் திறனை அதிகப்படுத்த ஆராய்ச்சி ஒண்ணு செஞ்சிருக்காங்க. அதாவது, கிட்டப் பார்வை உள்ள குழந்தைகளை தினமும் மாலையில் 2 மணி நேரம் வெயிலில் விளையாட  வைக்க, அந்தக் குழந்தைகளுக்கு, பார்வைக் குறைகிற வேகம் குறைஞ்சிருக்கு. 

`கிட்டப் பார்வை வந்தால், ஸ்பெக்ஸ் போட்டுக்கலாம் அங்கிள்; இப்போ அழகழகான ஃபிரேம்கள் வந்திருக்கு. கண்ணாடி போட்டுக்கிட்டா ஸ்டைலா இருக்கும்' என்று என்னிடமே நிறைய குழந்தைகள் சொல்கிறார்கள். ஆனால், பிள்ளைகள் தொடர்ந்து கண்களுக்கு அருகே வைத்து கேட்ஜெட்டைப் பார்ப்பதால், கண்களுடைய மைனஸ் பவர் அப்படின்னு சொல்லக்கூடிய கிட்டப்பார்வை அதிகமாகிட்டே போகும். கிட்டப்பார்வை அதிகமாகிட்டே போனால், கண்களுடைய வளர்ச்சியும் அதிகமாகிட்டே போகும். இந்த வேகமான வளர்ச்சி பிள்ளைகளுடைய 18 வயசு வரைக்கும் இருக்கும். இந்த நேரத்துல அவங்க கண்கள் பின்னாடி இருக்கிற ரெட்டினாவும் பின்னாடி போயிட்டே இருக்கும். இதனால, ஒரு சில குழந்தைகளுக்கு ரெட்டினா கிழிந்துகூட போகலாம். ரெட்டினா கிழிந்தால் பார்வையே போய்விடும். 

கிட்டப்பார்வை

ஒரு குழந்தையின் அப்பா அல்லது அம்மா கண்ணாடி போடுகிறவர்களாக இருந்தா, பிள்ளைகளுக்கும் கிட்டப்பார்வை வருவதற்கு 25 சதவிகிதம் வாய்ப்பிருக்கு. நிலைமை இப்படியிருக்க, பிள்ளைகள் ஸ்மார்ட்போனில் கேம் விளையாட விளையாட இந்தப் பிரச்னை வந்தே விடும். கீரை சாப்பிடுவது, கேரட் சாப்பிடுவதால் எல்லாம் கிட்டப்பார்வையை ஒண்ணும் செய்ய முடியாது. ஸ்மார்ட்போனில் விளையாடாமல் இருப்பது மட்டுமே பிள்ளைகளின் கண்களைக் காப்பாற்றும் ஒரே வழி'' என்று முடித்தார் டாக்டர் பார்த்தசாரதி.


டிரெண்டிங் @ விகடன்