காற்று மாசால் குழந்தைகளுக்கு மனநல பாதிப்பு! - எச்சரிக்கும் மருத்துவ ஆய்வு | Air pollution raises anxiety, depression risks in kids: study

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (24/05/2019)

கடைசி தொடர்பு:19:45 (24/05/2019)

காற்று மாசால் குழந்தைகளுக்கு மனநல பாதிப்பு! - எச்சரிக்கும் மருத்துவ ஆய்வு

காற்று மாசு அதிகமில்லாத இடங்களைக் காட்டிலும் மாசு அதிகமுள்ள போக்குவரத்து நெருக்கடியுள்ள இடங்களிலுள்ள குழந்தைகளின் மூளைகளில் மையோ இனோசிட்டால் புரதம் அதிகரிக்கிறது. இத்தகைய குழந்தைகளில் 12 சதவிகிதத்தினர் மனநலப் பிரச்னைகளுக்கு உள்ளாகிறார்கள்

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பிரச்னைகள், சுவாசக் கோளாறுகள் மட்டும்தான் ஏற்படும் என்று நீண்ட நாள்களாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், காற்று மாசுபாட்டால் மூளை தொடர்பான பிரச்னைகளும் மனநல பாதிப்புகளும் ஏற்படலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, காற்று மாசினால் குழந்தைகளே அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

காற்று மாசு

அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் கெல்லி பர்னஸ்ட் மேற்பார்வையில் நடந்த, இந்த ஆய்வானது சுற்றுச்சூழல் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வில் 12 வயது வரையுள்ள சுமார் 145 குழந்தைகள் பங்கேற்றனர்.

போக்குவரத்து நெருக்கடி

மூளையில் `மையோ இனோசிட்டால்' (Myo-inositol) என்ற புரதம் காணப்படுகிறது. இந்தப் புரதம் அதிகம் சுரந்தால் மூளையில் அழற்சி ஏற்படும். `காற்று மாசிலுள்ள சில நச்சுப்பொருள்களால் மூளையின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, மைடோ இனோசிட்டால் புரதம் அதிகம் சுரக்கிறது. இதனால் மூளையில் அழற்சி ஏற்படுகிறது. அதன்மூலம் மனஅழுத்தம், மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன' என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. .

காற்று மாசு அதிகமாகக் காணப்படும் பகுதியில் இருக்கும் குழந்தைகளின் மூளையில் மையோஇனோசிட்டால் அதிகமாக இருப்பதையும் ஆய்வில் உறுதி செய்திருக்கின்றனர்.

குழந்தை

``காற்று மாசு அதிகமில்லாத இடங்களைக் காட்டிலும் மாசு அதிகமுள்ள போக்குவரத்து நெருக்கடியுள்ள இடங்களிலுள்ள குழந்தைகளின் மூளைகளில் மையோ இனோசிட்டால் புரதம் அதிகரிக்கிறது. இத்தகைய குழந்தைகளில் 12 சதவிகிதத்தினர் மனநலப் பிரச்னைகளுக்கு உள்ளாகிறார்கள்" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.