இரண்டாவது குழந்தைக்கு பிளான் செய்யும்போது இதையெல்லாம் யோசியுங்கள்! | Here is a check list for who planning for the second child

வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (26/05/2019)

கடைசி தொடர்பு:10:46 (27/05/2019)

இரண்டாவது குழந்தைக்கு பிளான் செய்யும்போது இதையெல்லாம் யோசியுங்கள்!

''இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னால் குறைந்தது இரண்டு வருடத்துக்கான பொருளாதார தேவைகளுக்கான பணத்தைச் சேமித்து வைத்துவிடுங்கள்.'' 

இரண்டாவது குழந்தைக்கு பிளான் செய்யும்போது இதையெல்லாம் யோசியுங்கள்!

ந்தத் தலைமுறை இளம் அம்மாக்கள் மீது, 'இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதில்லை' என்கிற அதிருப்தி முதிய தலைமுறைக்கு நிறையவே இருக்கிறது. சூழ்நிலை காரணமாகப் பல அம்மாக்கள் இரண்டாவது குழந்தை வேண்டாம் என்கிற முடிவை எடுக்கிறார்கள். சில அம்மாக்களோ... இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னால் என்னென்ன திட்டமிட வேண்டும் என்று தெரியாத காரணத்தால், அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டேபோய் ஒருகட்டத்தில் அதைக் கைவிட்டுவிடுகிறார்கள் அல்லது இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்டு கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்தக் கட்டுரை. இதுபற்றி விளக்கமாகப் பேசுபவர் சைக்காலஜிஸ்ட் பிருந்தா ஜெயராமன்.

குழந்தை

குழந்தைகளை யார் பராமரிப்பது?

முதல் குழந்தையை தாத்தா - பாட்டி பார்த்துக்கொள்கிறார்களா, டே கேர் பார்த்துக்கொள்கிறதா. தாத்தா - பாட்டி என்றால், அவர்களால் இரண்டாவது குழந்தையையும் சேர்த்துப் பராமரிக்க முடியுமா, அந்தளவுக்கு அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்று பாருங்கள். இருந்தால் தாராளமாக இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம். டே கேரில்தான் குழந்தையை விட வேண்டுமென்றால், எத்தனை வயதில் விடப்போகிறீர்கள், அதுவரைக்கும் குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறீர்கள் என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். 

உங்கள் பொருளாதார நிலைமை வலுவாக இருக்கிறதா?

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளத் தடையாக இருப்பதே தம்பதியரின் பொருளாதாரம்தான். இரண்டு பேரும் வேலை பார்த்தால்தான் அடிப்படைத் தேவைகளையே சந்திக்க முடியும் என்கிற நிலைமையில் இருந்தீர்களென்றால், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னால் குறைந்தது இரண்டு வருடத்துக்கான பொருளாதார தேவைகளுக்கான பணத்தைச் சேமித்து வைத்துவிடுங்கள். 

சைக்காலஜிஸ்ட் பிருந்தா ஜெயராமன்வீடு, ஆஃபீஸ் என்று போராடுகிறீர்களா?

சில அம்மாக்களுக்கு வேலையின் தன்மை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு வீடும் மன அழுத்தம் தருகிற மாதிரி இருந்தால், நிலைமை கஷ்டம்தான். இரண்டில் ஒரு மன அழுத்தத்தைச் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி, அதைச் சரி செய்துகொண்டு இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுங்கள். உதாரணத்துக்கு, வீட்டு வேலைகள் மன அழுத்தத்தைத் தருகிறது என்றால், வீட்டு வேலைகளைக் கணவரையும் பகிர்ந்துகொள்ள சொல்லுங்கள். ஆஃபீஸ் வேலை மன அழுத்தத்தைத் தருகிறது என்றால், 2 வருடங்களுக்கு வேலையை விட்டுவிட்டு இரண்டாவது குழந்தைப் பெறுவது, முதல் குழந்தையை கொஞ்சுவது என்று வாழ்க்கையை அனுபவியுங்கள். 

உங்கள் ஆரோக்கியம் ஓகே தானா?

சில இளம் அம்மாக்களுக்குப் பொருளாதார வசதி, குழந்தைகளையும் தன்னையும் பார்த்துக்கொள்ள அம்மா, மாமியார் என எல்லாமே நிறைவாக இருக்கும். ஆனால், முதல் குழந்தைப் பெற்றபோதே தைராய்டு, டயபடீஸ், உடல் பருமன் என்று உடல்நிலை மோசமாகி இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்துகொண்டு இரண்டாவது குழந்தைப் பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள். 

முதல் மற்றும் இரண்டாவது குழந்தைக்கான வயது வித்தியாசம் என்ன?

முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் மூன்றில் அல்லது நான்கு வயது இடைவெளி இருந்தால் நல்லது. மூன்று வருடங்களுக்கு முன்னாடியே இரண்டாவது குழந்தைப் பெற்றுக்கொண்டீர்களென்றால், நீங்களும் பெரிய அளவில் ஹெல்த்தியாக இருக்க மாட்டீர்கள். தவிர,  இரண்டும் போடுகிற சண்டையைத் தீர்த்து வைப்பதற்கே மிச்சம் மீதியிருக்கிற உங்கள் எனர்ஜியும் செலவழிந்து விடும். இதற்கேற்றபடி, இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுங்கள்.

சந்தோஷமாக இருங்கள்!

நீங்கள் இரண்டாவது குழந்தைப் பெற்றுக்கொண்டால் நீங்களும் உங்கள் குடும்பமும் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள் என்றால், உடனே திட்டமிடுங்கள்.


டிரெண்டிங் @ விகடன்