`மனஅழுத்தத்தைப் போக்கும் வழி' - பிறந்த குழந்தைகளை நீந்தவிடும் ஸ்பா! | Hydrotherapy spa in Hyderabad

வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (27/05/2019)

கடைசி தொடர்பு:19:43 (27/05/2019)

`மனஅழுத்தத்தைப் போக்கும் வழி' - பிறந்த குழந்தைகளை நீந்தவிடும் ஸ்பா!

பிறந்து இரண்டுநாள் ஆன குழந்தைகள் முதல் எட்டு மாதக் குழந்தைகள் வரை தண்ணீரில் நீந்தவிட்டு மசாஜ் செய்யும் மையம் (ஸ்பா) ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பாவில், 'ஹைட்ரோதெரபி' என்று அழைக்கப்படும் தண்ணீர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

ஹைட்ரோதெரபி ஸ்பா


குழந்தைகளின் கழுத்தில் காற்று நிரப்பிய சிறிய பலூன்களைப் பொருத்தி, நீச்சல் குளத்தில் நீந்தவிடுவதுதான் ஹைட்ரோதெரபி. பச்சிளம்குழந்தைகள் படுத்துக்கொண்டிருக்கும்போதே கை, கால்களை அசைத்துக்கொண்டே இருப்பார்கள் என்பதால், நீச்சல் குளத்திலும் அவர்களால் எளிதாகக் கை, கால்களை அசைத்து நீச்சல்குளத்தில் சுற்றிச் சுழலமுடியும். 

பச்சிளங்குழந்தைகள்


"பெரியவர்களுக்கு மட்டுமல்ல பிறந்த குழந்தைகளுக்கும்கூட மனஅழுத்தம் ஏற்படும் என்பதைப் பலரும் அறிவதில்லை. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்தவுடனே, புதிய சூழலுக்கு ஆட்படுகிறது. இது, பல்வேறு வகையில் குழந்தைகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் மலச்சிக்கல், தூங்குவதில் சிரமம், மந்தமாக இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஹைட்ரோதெரபி சிகிச்சைமூலம் குழந்தைகளின் அனைத்து உணர்வுகளும் அமைதியாகும்" என்கின்றனர், அந்த மையத்தின் ஹைட்ரோதெரபி நிபுணர்கள்.

மசாஜ்


நீச்சல் பயிற்சி முடிந்ததும், பயிற்றுவிக்கப்பட்ட இயன்முறை மருத்துவர்கள்மூலம் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வகையில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட தண்ணீர், தண்ணீரில் வெதுவெதுப்பான வெப்பநிலை போன்றவை பராமரிக்கப்படுகிறது. வாரம் இருமுறை ஹைட்ரோதெரபி சிகிச்சை செய்தால், குழந்தைகள் அழுத்தம் நீங்கி ஆசுவாசமாக உணர முடியும் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கான பிரத்தியேக பேக்கேஜ் முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.