உடல் பருமன், மன அழுத்தம், மந்தம்... கிரிக்கெட் ரசிகர்களே உஷார்! #WorldCup2019 | Health Tips for cricket fans

வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (29/05/2019)

கடைசி தொடர்பு:13:31 (29/05/2019)

உடல் பருமன், மன அழுத்தம், மந்தம்... கிரிக்கெட் ரசிகர்களே உஷார்! #WorldCup2019

எதையாவது கொறித்துக்கொண்டே விளையாட்டைப் பார்ப்பதில் பலருக்கும் சுவாரஸ்யம். நள்ளிரவாக இருந்தாலும் நேரம் காலம் பார்க்காமல் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒருநாள், இரண்டு நாளாக இருந்தால் பரவாயில்லை. கிரிக்கெட் நடக்கும் ஒரு மாதம் முழுவதும் இது தொடர்ந்தால் நிலைமை என்னவாகும்?

உடல் பருமன், மன அழுத்தம், மந்தம்... கிரிக்கெட் ரசிகர்களே உஷார்! #WorldCup2019

நாளை தொடங்கவிருக்கிறது, ஐ.சி.சி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் திருவிழா, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஒரே கூரையின்கீழ் கட்டிப்போட்டுவிடும். உள்நாட்டில் போட்டிகள் நடக்கும்போதே நேரில் சென்று பார்க்கும் ரசிகர்களைவிட ரிமோட்டும் கையுமாக டி.வி முன் அமர்ந்து போட்டிகளைப் பார்ப்பவர்களே அதிகம். இங்கிலாந்தில் மேட்ச் என்னும்போது அனைவரும் கண்டிப்பாக டி.வி. முன்னர்தான் ஆஜராவோம்.

உலகக்கோப்பை கிரிக்கெட்

மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கும் மேலாக திளைக்கத் திளைக்க கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து ரசிப்பார்கள். பெரும்பாலான போட்டிகள் இந்திய நேரத்துக்கு மாலை 3 மணிக்குத் தொடங்கவிருக்கின்றன. சில போட்டிகள் மாலை 6 மணிக்குத் தொடங்கும். `எவ்வளவு பெரிய வேலை இருந்தாலும் மேட்ச் தொடங்குறதுக்கு முன்னாடி வீட்டுக்குப் போயிடணும்', `மேட்ச் தொடங்குறதுக்கு முன்னாடி எல்லா வேலையையும் முடிச்சிடணும்' என்று போட்டிகள் தொடங்கி முடிவடையும் வரை கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் அன்றாட அலுவல்களை கிரிக்கெட்டை வைத்தே திட்டமிடுவார்கள். 

மேட்ச் நடக்கும்போது வீட்டிலிருப்பவர்கள் வேறு எந்த சேனலையும் பார்க்கக் கூடாது, மேட்ச் நேரத்தில் வேறு வேலைகள் எதையும் செய்யச் சொல்லக் கூடாது என்று பல வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். நண்பர்களுடன் போட்டிகளைப் பார்ப்பவர்களுக்கு கூடுதல் உற்சாகம் பீறிடும். ஆனால் போட்டிகளைப் பார்ப்பவர்கள் சத்தமில்லாமல் சில வேலைகளைச் செய்வார்கள். முக்கியமானது சாப்பாடு. எதையாவது கொறித்துக்கொண்டே விளையாட்டைப் பார்ப்பதில் பலருக்கும் சுவாரஸ்யம். நள்ளிரவாக இருந்தாலும் நேரம் காலம் பார்க்காமல் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒருநாள், இரண்டு நாளாக இருந்தால் பரவாயில்லை. கிரிக்கெட் நடக்கும் ஒரு மாதம் முழுவதும் இது தொடர்ந்தால் நிலைமை என்னவாகும்? 

உடல் பருமன்

`கிரிக்கெட் போட்டிகளைக் காணும் ரசிகர்கள் தங்கள் உடல் நலத்திலும், உணவுப்பழக்கத்திலும் சற்று கவனம் செலுத்தவேண்டும்' என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

ஒரு ஒருநாள் போட்டி நிறைவடைய குறைந்தபட்சம் ஏழு மணி நேரம் ஆகும். தொடர்ந்து 7 மணி நேரம் டி.வியில் போட்டிகளைப் பார்ப்பவர்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று உணவியல் நிபுணர் அபிராமியிடம் கேட்டோம்.உணவியல் நிபுணர் அபிராமி

``விளையாட்டின் சுவாரஸ்யம், என்ன சாப்பிடுகிறோம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை மறக்கடித்துவிடும். டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு விடுவோம். இதனால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உடல்பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்றைய காலத்தில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் டி.வி பார்த்துக்கொண்டேதான் சாப்பிடுகின்றனர். அதனால் இரவு உணவைச் சாப்பிடும்போது டி.வியை அணைத்துவிட்டோ, வேறு அறைக்குச் சென்றோ சாப்பிடுவது நல்லது.

கிரிக்கெட் பார்ப்பவர்களின் முக்கியமான நொறுக்குத்தீனி, பாப்கார்ன். இதைப் பெரும்பாலும் மைக்ரோவேவ் அவனில்தான் தயாரிக்கிறார்கள். அதில் பல்வேறு பதப்படுத்தும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன என்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்காது. பாப்கார்ன் சாப்பிட விரும்புபவர்கள் உலர்த்திய மக்காச்சோள முத்துகளை வாங்கி, வீட்டில் பிரஷர் குக்கரில் தயாரித்துச் சாப்பிடலாம். ஆனால், அதையும் இரவு நேரங்களில் தவிர்ப்பது நல்லது. சிப்ஸ், பிரெஞ்ச் ஃபிரைஸ் போன்ற ஆரோக்கியமில்லாத நொறுக்குத்தீனிக்குப் பதில் நட்ஸ், உலர்பழங்களைச் சாப்பிடலாம். பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதற்குப் பதில் எளிதில் செரிமானமாகும் தோசை, இட்லி போன்ற உணவுகள் நல்லது. 

அளவில்லாத உணவு, பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து டி.வி பார்ப்பது போன்றவற்றால் உடல் இயக்கம் இல்லாமல் போய் வயிற்றில் கொழுப்பு சேர்ந்து, தொப்பை வரலாம். அதனால், ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது எழுந்து நிற்பது, அறைக்குள்ளே நடப்பது எனச் சிறிய சிறிய இயக்கங்களைச் செய்வது நல்லது.

பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்ப்பது

போட்டிகளின் நடுவே நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்களின் விளம்பரங்கள்தான் அதிக அளவில் ஒளிபரப்பப்படுகின்றன. இதுவும் கிரிக்கெட் பார்ப்பவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி வாங்கிச் சாப்பிடத்தூண்டும். பாட்டில்களில் அடைத்துவிற்கப்படும் பானங்களுக்குப் பதில் மோர் அருந்தலாம். அதிக குளிர்ச்சி இல்லாமல் அறை வெப்பநிலையில் உள்ள மோரை அருந்துவது நல்லது. 
உடலில் உள்ள நச்சுகளை இரவு நேரத்தில்தான் மூளை வெளியேற்றும் என்பதால் இரவு 10.30 மணிக்குள் தூங்கச்செல்வது நல்லது. தூக்கம் தாமதமானால் நச்சுகளை வெளியேற்றும் பணி தாமதமடைவதுடன், அவை உடலிலேயே தங்கிவிடவும் வாய்ப்புண்டு. கல்லீரல், சிறுநீரக நோய்களுக்கான முக்கியக் காரணம் உடலில் நச்சு சேர்வதுதான். 

உலர் பழங்கள்

போதிய தூக்கம் இல்லாததாலும் உடல்பருமன் ஏற்படும். இரவுத் தூக்கம் சரியாக இல்லையென்றால் அடுத்த நாள் உடல் மந்தமாக இருக்கும்; சுறுசுறுப்பாக இயங்கமுடியாது. அதனால், இரவு நேரங்களில் தொடர்ச்சியாக கிரிக்கெட் பார்க்காமல், நடுவே சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ளவேண்டும்" என்கிறார் அவர். 

போட்டியில் தனக்குப் பிடித்த அணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடைவதும் தோற்றால் வருத்தப்படுவதும் யதார்த்தம். `போட்டிகளை வெறும் போட்டிகளாக மட்டுமே பார்க்கவேண்டும். அதை மனதுக்கு நெருக்கமாக எடுத்துச்சென்று கவலைப்படுவது தேவையற்ற மனஅழுத்தத்தையே உண்டாக்கும்' என்கின்றனர் மருத்துவர்கள். அதுபோன்ற நேரங்களில் ஒரு டார்க் சாக்லேட் சாப்பிட்டால் புத்துணர்ச்சி கிடைக்கும். தொடர்ந்து மறுநாளும் அதே அழுத்தம் நீடித்தால் காலையில் 15 நிமிடங்கள் தியானம் செய்யலாம்.

மொத்தத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட்டின்மீது காட்டும் அக்கறையைக் கொஞ்சம் உங்கள் உடல்நலத்திலும் காட்டுங்கள் மக்களே!


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை