குழந்தைகளை வெயிலில் விளையாட விடுங்கள்- `அப்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்' அலர்ட்! | Have you heard about 'Apartment Syndrome' in kids?

வெளியிடப்பட்ட நேரம்: 20:03 (30/05/2019)

கடைசி தொடர்பு:20:03 (30/05/2019)

குழந்தைகளை வெயிலில் விளையாட விடுங்கள்- `அப்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்' அலர்ட்!

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு நேரடியாகச் சூரியஒளி கிடைப்பது அரிது. பால்கனிக்கோ, மொட்டைமாடிக்கோ பலர் செல்வதே இல்லை. பள்ளிகளிலும் சரி வீடுகளிலும் சரி, குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிப்பதில்லை.

குழந்தைகளை வெயிலில் விளையாட விடுங்கள்- `அப்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்' அலர்ட்!

சென்னையில் வைட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருவதாக ஹோமியோபதி துறையின் மூத்த மருத்துவர் ஒருவர் என்னிடம் கூறினார். `எப்போதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் உள்ள சென்னையில் வைட்டமின் டி குறைபாடா?' என்று அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அப்போதுதான் முதன்முதலாக `அப்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்' (Apartment syndrome) பற்றிக் கேள்விப்பட்டு அதுகுறித்து வாசிக்க ஆரம்பித்தேன். 

வைட்டமின் டி

முதன்முதலில் 2009-ம் ஆண்டு `அப்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்' பற்றி வெளிவந்த ஒரு செய்தி என் கவனத்தை ஈர்த்தது. சென்னையைச் சேர்ந்த ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டி ஆரோக்கியமாக வளர்த்தும்கூட கால்கள் வளைந்த நிலையில் காணப்பட்டன. இந்தப் பாதிப்பை `ரிக்கட்ஸ்' என்பர். இது வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும் எலும்பு வளர்ச்சிக் குறைபாடு. குழந்தையை அதன் தாய் கண்ணும்கருத்துமாக வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு, வெயில்படாமல் வளர்த்ததால் வைட்டமின் டி பற்றாக்குறையால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது பின்னர் கண்டறியப்பட்டது. சென்னை போன்ற நகர்ப்புறங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு ஏற்படும் வைட்டமின் டி குறைபாட்டை `அப்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்' என்கின்றனர். அண்மைக்காலத்தில் அதிகம் பேரைப் பாதித்துள்ள `அப்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்' பற்றி பலகட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. 

குழந்தை

குழந்தைகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், வீட்டிலேயே இருக்கும் பெண்கள், முதியவர்கள், பணிக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் வைட்டமின் டி குறைபாடு உள்ளது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், படித்த மக்கள் மத்தியில்தான் `வைட்டமின் டி' குறைபாடும் அது தொடர்புடைய பிரச்னைகளும் நிறைந்திருக்கின்றன. எவ்வளவு ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளைக் கையாண்டாலும் வெயிலைத் தவிர்ப்பதால் ஏற்படும் விளைவு இது. 

சூரிய ஒளி

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு நேரடியாகச் சூரியஒளி கிடைப்பது அரிது. பால்கனிக்கோ, மொட்டைமாடிக்கோ பலர் செல்வதே இல்லை. பள்ளிகளிலும் சரி வீடுகளிலும் சரி, குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிப்பதில்லை. வளரும் பதின்பருவத்து ஆண்களும் பெண்களும், வெயில் உடலில் பட்டால் நிறம் கருத்துவிடக்கூடாதென சன்ஸ்கிரீன் லோஷனைப் பூசிக்கொள்கிறார்கள்.

வீட்டில் ஏ.சி., வீட்டைவிட்டு படியிறங்கியவுடன் நுழையும் வாகனங்களில் ஏ.சி., பள்ளி, கல்லூரி அலுவலகங்களில் ஏ.சி... ஏ.சி.யில் வாழ்வதை நாகரிகமாகக் கருதும் இன்றைய தலைமுறையினர் தவறவிடுவது வெயிலிலிருந்து கிடைக்கப்பெறும் வைட்டமின் டி' என்ற அருமருந்தான நுண்சத்தை. சென்னை போன்ற பெருநகரங்களில் வைட்டமின் டி சத்து மாத்திரைகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவது இந்தப் பிரச்னையை அழுத்திச்சொல்கிறது.

ஏ.சி. அறை

ஹோமியோபதி மருத்துவர் கோ. பிரேமாவெயிலிலிருந்து நமது உடல் உற்பத்தி செய்யும் ஒரு மிகமுக்கியமான நுண்சத்து வைட்டமின் டி. இது எலும்புகளுக்கு பலம் சேர்க்கும் கால்சியம் சத்தை உடல் கிரகிக்க உதவுவது மட்டுமன்றி நுரையீரல், இதயம் சார்ந்த நோய்கள், தோல் நோய்கள், சர்க்கரைநோய் எனப் பல நோய்களின் தாக்கத்தைக் குறைக்கும் அருமருந்தாகும். வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே மிதமான வெயில் கிடைக்கப்பெறும் குளிர்பிரதேசங்களில் வாழ்பவர்கள் சூரியக்குளியல் எடுக்கும் வழக்கத்தை நாம் அறிவோம். வருடம் முழுக்க வெயில் கிடைக்கப்பெறும் வெப்பமண்டல நாட்டில் வசிக்கும் சென்னைவாசிகள் மத்தியிலும் பிற இந்திய நகரங்களிலும் இந்தக் குறைபாடு வெகுவாக அதிகரித்துவருவது ஆச்சர்யத்தையும் கவலையையும் அளிக்கிறது. 

இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம், வெயில் நேரடியாகச் சருமத்தில் படும்போது மட்டுமே வைட்டமின் டி சத்து உடலால் உற்பத்தி செய்யப்படும். சன்ஸ்கிரீன் லோஷன்கள், ஆடைகள், கார் மற்றும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் இவற்றினால் வடிகட்டப்பட்டுக் கிடைக்கும் வெயிலினால் வைட்டமின் டி கிடைக்காது. 

அபார்ட்மெண்ட் சின்ட்ரோம்

முன்னர், நமது வாழ்வியல் முறையில் வாரம் ஒருமுறையோ இருமுறையோ எண்ணைய் தேய்த்து சிற்றாடைகளை அணிந்து வெயிலில் உட்கார்ந்திருந்து குளிப்பது வழக்கமாக இருந்தது. இதுபோன்ற நல்ல பழக்கங்கள் இடைவிடாத வாழ்க்கை ஓட்டத்தின் நேரமின்மையினாலும் சந்தர்ப்பமின்மையினாலும் வழக்கொழிந்துவிட்டன. 

இதற்கு மாற்று என்ன? 

வேறென்ன, சூரியக்குளியல்தான். குழந்தைகள், ஆண்கள் இதைச்சுலபமாகச் செய்துவிடமுடியும். பெண்களும் முதியவர்களும் இதைச்செய்யும் சூழலையும் வீட்டிலிருப்பவர்கள் ஏற்படுத்த வேண்டும். இதற்காகச் சுட்டெரிக்கும் உச்சிவெயிலில் உடலை வருத்திக்கொள்ள வேண்டியதில்லை. ஒருநாளைக்கு 20 நிமிடங்கள் கை, கால்களின் சருமம் மட்டுமாவது வெயிலில் நேரடியாகப்படும்படி இருந்தால் போதுமானது. அதுவே சூரியக் குளியல்.

சூரியக் குளியல்

குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருப்பவர்கள் என அனைவரும் அவசியம் தினமும் வெயில் குளியல் எடுக்கவேண்டும். தேவைப்பட்டால் சுத்தமான தேங்காய் எண்ணெய் தேய்த்து வெயிலில் அமரலாம். இது, தோல் கறுத்துப் போவதையும் சுருங்குவதையும் தடுக்கும்.

இதைவிட்டுவிட்டு குறைபாடு ஏற்பட்ட பின்னர் மாத்திரைகளையும் வைட்டமின் டி எண்ணெய்யையும் தேடும்நிலைக்குச் செல்லவேண்டாமே. 

வெயிலை ரசித்து வெயிலோடு விளையாடி உறவாடலாமா? 

- ஹோமியோபதி மருத்துவர் கோ.பிரேமா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்