இந்தியாவில் 54 சதவிகிதம் மருத்துவப் பணியாளர்களுக்குப் போதிய கல்வித்தகுதி இல்லை! மிரளவைக்கும் ஆய்வு | 54 percent medical staff in India are not qualified

வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (31/05/2019)

கடைசி தொடர்பு:12:40 (31/05/2019)

இந்தியாவில் 54 சதவிகிதம் மருத்துவப் பணியாளர்களுக்குப் போதிய கல்வித்தகுதி இல்லை! மிரளவைக்கும் ஆய்வு

இந்த விஷயத்தில் போதுமான கல்வித்தகுதி என்பதை இரண்டு விதமாக அணுகவேண்டும். ஒன்று மருத்துவத் துறை சார்ந்த கல்வித்தகுதியே இல்லாமல் பணியாற்றிக்கொண்டிருப்பது, மற்றொன்று மருத்துவத் துறை சார்ந்த கல்வித்தகுதி உள்ள நபர், வேறு மருத்துவப் பிரிவில் பணியாற்றுவது.

இந்தியாவில் 54 சதவிகிதம் மருத்துவப் பணியாளர்களுக்குப் போதிய கல்வித்தகுதி இல்லை!  மிரளவைக்கும் ஆய்வு

ந்தியாவின் மக்கள்தொகை 134 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் 134 கோடி பேரின் உடல்நலனைக் காப்பாற்றுமளவுக்கு மருத்துவர்களின் எண்ணிக்கை இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். 1000 பேருக்கு ஒரு மருத்துவர், 500 பேருக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் வரையறை. அமெரிக்காவைச் சேர்ந்த `டிசீஸ் டைனமிக்ஸ் எகனாமிக்ஸ் அண்ட் பாலிசி' (Disease Dynamics, Economics & Policy) என்ற அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்கள், 20 லட்சம் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது கண்டறியப்பட்டது. மக்கள்தொகை விகிதத்துக்கு ஏற்ப மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால் விலைமதிப்பில்லாத உயிர்களை இழந்து வருகிறோம்.

மருத்துவர்

இன்னொருபுறம், 'இந்தியாவிலுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களில் 54 சதவிகிதம் பேருக்கு போதுமான கல்வித்தகுதி இல்லை' என்பது மற்றொரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 'தகுதியான மருத்துவர்களில் 20 சதவிகிதம் பேர் தற்போது சேவையாற்றவில்லை' என்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு 'பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்' என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில், அலோபதி மருத்துவர்களில் 24 சதவிகிதம், பல் மருத்துவர்களில் 8 சதவிகிதம், ஆயுஷ் பிரிவு மருத்துவர்களில் 21 சதவிகிதம் பேருக்கு போதிய கல்வித்தகுதி இல்லை என்பது தெரியவந்தது. இதுதவிர, இயன்முறை மருத்துவம் மற்றும் ஆய்வக நிபுணர்களில் 45 சதவிகிதம், செவிலியர்களில் 58 சதவிகிதம், மருத்துவம் சார்ந்த பணியாளர்களில் 62 சதவிகிதம், மருந்தாளுநர்களில் 62 சதவிகிதம் பேருக்கு போதிய கல்வித்தகுதி கிடையாது என்ற அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகியுள்ளன.

செவிலியர்கள் - மருத்துவப் பணியாளர்கள்

இந்த விஷயத்தில் போதுமான கல்வித்தகுதி என்பதை இரண்டு விதமாக அணுகவேண்டும். ஒன்று மருத்துவத் துறை சார்ந்த கல்வித்தகுதியே இல்லாமல் பணியாற்றிக்கொண்டிருப்பது, மற்றொன்று மருத்துவத் துறை சார்ந்த கல்வித்தகுதி உள்ள நபர், வேறு மருத்துவப் பிரிவில் பணியாற்றுவது. இந்த வகையினரே கணிசமான அளவில் இருக்கிறார்கள். அதாவது, எம்.பி.பி.எஸ். படித்த ஒருவர், மயக்கவியல் தொடர்பான 6 மாத பயிற்சியை முடித்துவிட்டு, மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றிக்கொண்டிருப்பார். ஒரு மருத்துவர் மயக்கவியல் துறையில் முதுநிலை பட்டம்பெற்று, அந்த அனுபவத்துடன் சிகிச்சையளிப்பதற்கும் ஆறு மாத கால பயிற்சி முடித்துவிட்டு மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றுவதற்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு. 

"அண்மையில் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து நோயாளிகள் உயிரிழந்தார்கள். 'மின்சாரம் தடைப்பட்டவுடன் ஜெனரேட்டரை இயக்காததே உயிரிழப்புக்குக் காரணம்' என்று கூறப்பட்டது. அந்த ஜெனரேட்டரில் சிறிய பழுது இருந்துள்ளது. அது நவீன ஜெனரேட்டர் என்பதால் பணியில் இருந்த எலக்டீரிசியனுக்கு அந்தப் பழுதை நீக்கி இயக்கத் தெரியவில்லை. இதனால் பல உயிர்கள் பலியாகியிருக்கின்றன. 

சிகிச்சை

மருத்துவத் துறையைப் பொறுத்தவரை எல்லாப் பணிகளுமே முக்கியமானவை. இன்று மருத்துவம் சார்ந்த உரிமம் பெறாத நிறையப் போலி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் படித்து வெளியேறும் மாணவர்களால் தரமான சேவையை வழங்கமுடியாது. தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய செயல்முறை அனுபவம் இருக்காது. அதுவும் மருத்துவச் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, போலி நிறுவனங்களை ஒழிப்பதில் அரசு கவனம்செலுத்த வேண்டும்" என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்.

மேலும் அவர், ``தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற மருத்துவமனைகளில் பல்வேறு துறை சார்ந்த மருத்துவ டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்நிபுணர்களின் இடங்கள் காலியாகவே இருக்கின்றன. அதனால்தான் அரசு சிறிய பயிற்சியை அளித்து எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்களை அந்த இடத்தில் பணியமர்த்துகிறது. சிகிச்சையின் தரத்தில் இது நிச்சயம் வேறுபாட்டைக் காட்டும். ஆனால் அந்த சிகிச்சைகூட கிடைக்காவிட்டால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்பதும் நிதர்சனம். உதாரணமாக, அதிகரித்துவரும் சிசேரியன் பிரசவங்களைக் கையாள மயக்கவியல் நிபுணர்கள் இல்லையென்றால் கர்ப்பிணிகளின் நிலை என்னாகும்? கிராமப்புறப் பணிக்குச் செல்ல பல மருத்துவர்கள் முன்வராதபோது, எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்து அந்தப் பணியிடத்துக்கு அனுப்புவதால் பல உயிர்களைக் காப்பாற்ற முடிகிறது. 

போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால்தான் இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அதனால் இது முழுவதும் தவறு என்று கூறிவிட முடியாது. மருத்துவக் கல்லூரிகளை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியும். மெள்ள மெள்ள சீர்செய்யவேண்டிய பிரச்னை இது என்பதால், கவனமாகத்தான் கையாளவேண்டும்" என்கிறார் டாக்டர் ரவீந்திரநாத்.

இதுதவிர, இந்தியாவில் உள்ள அலோபதி, பல் மருத்துவம், ஆயுஷ் ஆகிய மருத்துவத் துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கை குறித்தும் அந்த ஆய்வில் ஆராயப்பட்டது. அதில், இந்தியாவில் பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த 38 லட்சம் பேர் தற்போது பணியாற்றி வருகின்றனர். ஆனால் அந்தந்த மருத்துவத் துறையினருக்கான கவுன்சில்கள், சங்கங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் 12 லட்சம் பேர் தற்போது பணியாற்றவில்லை என்று தெரியவந்துள்ளது.

மருத்துவர்

இந்தியாவைச் சேர்ந்த மருத்துவத் துறையினருக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. வேலை பார்க்க வெளிநாடுகளுக்குச் சென்றுவிடவேண்டும் என்ற நோக்கத்துடனே பலர் படிக்கின்றனர். படித்து முடித்ததும் வெளிநாடுகளுக்குப் பறந்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் மருத்துவம் படித்தாலும் குடிமைப் பணிகள், அரசியல் என வேறு பாதைக்குத் திரும்பிவிடுகிறார்கள். இதனாலும் இந்தியாவில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை குறைகிறது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

மருத்துவத் துறை என்பது உயிர்களோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். தகுதியான நபர் சிகிச்சையளிக்காமல் ஓர் உயிரை இழந்துவிட்டால் எத்தனைக் கோடி கொடுத்தாலும் அதை மீட்டெடுக்கமுடியாது. மருத்துவர்கள் பற்றாக்குறை, தகுதியான மருத்துவப் பணியாளர்கள் இல்லாதது என்ற இரண்டு முக்கியப் பிரச்னைகளுக்கான தீர்வை எட்டினால்தான் மக்களின் ஆரோக்கியம் மேம்படும்.


டிரெண்டிங் @ விகடன்