'ஆண்டுக்கு 80 லட்சம் பேருக்கு புகையிலையால் பாதிப்பு!' - உலக சுகாதார அமைப்பு #WorldNoTobaccoDay | this story about world no tobacco day

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (31/05/2019)

கடைசி தொடர்பு:21:20 (31/05/2019)

'ஆண்டுக்கு 80 லட்சம் பேருக்கு புகையிலையால் பாதிப்பு!' - உலக சுகாதார அமைப்பு #WorldNoTobaccoDay

லக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையில், புகையிலை மிகப்பெரிய அளவில் பொது சுகாதாரத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளது. புகைபிடிப்பதால், உலக அளவில் ஆண்டுக்கு 80 லட்சத்துக்கும் அதிகமானோர்  பாதிப்புக்குள்ளாகி இறக்கின்றனர். அதில், 70 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நேரடியாக புகையிலையைப் பயன்படுத்துவதால் மரணமடைகின்றனர்.  10 லட்சத்துக்கும் அதிகமானோர், மற்றவர்கள் பிடிக்கும் புகையை சுவாசிப்பதால் பாதிப்புக்குள்ளாகின்றனர். 

சிகரெட்

புகைப்பழக்கம் உள்ள 110 கோடி பேரில்  சுமார் 80 சதவிகிதம்  பேர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் வாழ்கின்றனர். புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் இறப்பதால், அவர்களது குடும்பம் வருமானத்தை இழந்து, பொருளாதாரத்தில் நலிந்துபோகும் சூழலுக்குத் தள்ளப்படுகிறது. சில நாடுகளில், ஏழ்மை காரணமாக புகையிலைப் பண்ணைகளில் குழந்தைகள் வேலை பார்க்கும் நிலை உள்ளது. இதனால், அந்தக் குழந்தைகளுக்கு  `பச்சைப் புகையிலை நோய்' பாதிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.  பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் காணப்படுகின்றன. இதனால், ஏராளமானோருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்படுவதுடன் புற்றுநோய் பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது. 

இந்திய அளவில் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில், நகர்ப்புறங்களில் மூன்று பேரில் ஒருவரும், கிராமப்புறங்களில் ஐந்து பேரில் ஒருவரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 28.6 சதவிகிதம் பேர்  புகையிலை பயன்படுத்துவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதில்,  தினமும் 24.9 சதவிகிதம் பேரும், அவ்வப்போது 3.7 சதவிகிதம் பேரும் புகையிலை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. ஆண்கள் 42.4 சதவிகிதமும் பெண்கள் 14.2 சதவிகிதமும் பயன்படுத்துகின்றனர்.

புகைப்பிடிக்காதீர்

முந்தைய ஆய்வுகளுடன்  ஒப்பிடும்போது, தமிழகத்தில் புகையிலை பயன்படுத்துவோர் 16.2 சதவிகிதத்திலிருந்து  20 சதவிகிமாக அதிகரித்துள்ளது. இதில் புகைப்பிடிக்கும் பழக்கம் 9.6 சதவிகிதத்திலிருந்து 10.5 சதவிகிதமாகவும், புகையில்லாத புகையிலையைப் பயன்படுத்துவோர் 8.1 சதவிகிதத்திலிருந்து 10.6 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளனர். ஆனால், கேரளாவில் 21.4 சதவிகிதத்திலிருந்து 12.7 சதவிகிதமாகவும், கர்நாடகாவில்  28.2 சதவிகிதத்திலிருந்து 22.8 சதவிகிதமாகவும், ஆந்திரப்பிரேதேசத்தில் 29  சதவிகிதத்திலிருந்து  20 சதவிகிதமாகவும் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. 2016 மற்றும் 2017 காலகட்டங்களில்  இந்த ஆய்வு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புகையிலை பயன்பாட்டினைக் குறைக்கவும், அதனால் ஏற்படும் தீங்குகள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 1987-ம் ஆண்டு முதல் மே 31-ந்தேதியை உலக புகையிலை எதிர்ப்பு தினமாக உலக சுகாதார நிறுவனம் அனுசரித்துவருகிறது. இந்த ஆண்டு, 'நுரையீரல் பாதுகாப்பு' என்பதை மையக் கருத்தாகக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவுசெய்துள்ளது. தமிழக சுகாதாரத் துறையும் மே மாதம் 31-ந்தேதி முதல் தொடர்ந்து 15 நாள்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது.

புகைப்பழக்கம்

15 நாள்கள் நடைபெறவிருக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகுறித்து தமிழ்நாடு மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அதிகாரி டாக்டர் சோமசுந்தரத்திடம் கேட்டோம்.

``பொது இடங்களில் புகையிலைப் பொருள்களைப்  பயன்படுத்தவோ, 18 வயது நிரம்பாதவர்களுக்கு  புகையிலைப் பொருள்களை  விற்பதோ, கடைகளில் லைட்டர் போன்றவற்றைப் பயன்படுத்துவதோ கூடாது என்று சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருள்களுக்கான (COTPA - Cigarettes and Other Tobacco Products Act) சட்டம் கூறுகிறது. மீறி பயன்படுத்துவோருக்கு, தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்கிறது அந்தச் சட்டம். அதன்படி, வரும் 15 நாள்களும் `கோட்பா' (COTPA) சட்டம் கட்டாயமாக்கப்பட உள்ளது. 

பள்ளிக் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இரண்டு நிமிட காணொளி பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்தக் காணொளிப் பாடல் காண்பிக்கப்பட உள்ளது. அந்தப் பாடலை அதிகாரப்பூர்வமாக யூ-டியூபில் வெளியிட்டுள்ளோம். கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில்  இ-சிகரெட் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இணையதள விற்பனையகங்களில் தொடர்ந்து இ-சிகரெட் விற்கப்படுவதால், அதுகுறித்து  சைபர் கிரைமில் புகார் செய்யவுள்ளோம். COTPA சட்டம் தமிழகத்தில் 2008-ம் அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் ரூபாய் 3 கோடிக்கும் மேல் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஆண்டு சென்னை  மாவட்டத்தில் மட்டும் 50 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இந்தச் சோதனையை நடத்த முடிவுசெய்திருக்கிறோம். 

சிகரெட்

வரும் காலங்களில்,  புகையிலை விற்கப்படும் கடைகளில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வேறு பொருள்களை விற்கவோ, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் விற்கப்படும் கடைகளில் புகையிலை விற்கவோ கூடாது என்று முடிவெடுத்துள்ளோம். தற்போதைய நிலவரப்படி, புகைபிடிப்போரின் எண்ணிக்கை 0.9 சதவிகிதமும், மெல்லும் புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இதில் நல்ல விசயம் என்னவென்றால், குழந்தைகள் புகைபிடிப்பது குறைந்துள்ளதுடன் புகையிலை நச்சுக்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஆனால், புகையிலை பயன்படுத்துவது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வதை முக்கிய நோக்கமாகவைத்துள்ளோம்'' என்று கூறினார்.