Kerala: இல்லாத புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை - கேரளப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! | Woman who has no cancer given chemotherapy

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (03/06/2019)

கடைசி தொடர்பு:18:25 (03/06/2019)

இல்லாத புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை - கேரளப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

ருத்துவத் துறையில் நடக்கும் அலட்சியங்கள் அப்பாவி பொதுமக்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கின்றன. அதற்கு உதாரணமாக கேரள மாநிலத்தில் ஒரு நிகழ்வு அண்மையில் நடந்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் ரஞ்சனி. 38 வயதான இவர், ஒரு கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தார். தனியாக இருந்து தனது 8 வயது பெண் குழந்தையை வளர்த்து வருகிறார்.

தவறாக புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்ட ரஞ்சனி

PC:DoolNews.Com

ரஞ்சனிக்கு அண்மையில் மார்பகத்தில் கட்டி உருவானது. அது புற்றுநோய் பாதிப்பாக இருக்கலாம் என்று சந்தேகித்ததால், கடந்த பிப்ரவரி மாதம் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயை உறுதிசெய்வதற்காகத் திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இரண்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டது. ஒன்று அவர் அனுமதிக்கப்பட்ட அதே அரசு மருத்துவமனையின் ஆய்வகத்துக்கும், மற்றொன்று அரசு மருத்துவமனையில் அருகில் இருக்கும் தனியார் ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. 

மார்பகப் புற்றுநோய்


திசு மாதிரியைக் கொடுத்த ஏழு நாள்களில் தனியார் ஆய்வகத்தின் முடிவுகள் கிடைத்தன. அரசு மருத்துவமனை ஆய்வகத்திலிருந்து முடிவுகள் வருவதற்கு முன்னரே தனியார் ஆய்வகத்திலிருந்து முடிவுகள் கிடைத்தன. அந்தப் பரிசோதனை முடிவு ரஞ்சனிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகத் தெரிவித்தது. அதைப் பார்த்த மருத்துவர்களும் ரஞ்சனி உடனடியாக புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தனர். முதல் கட்ட கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது.
கீமோதெரபி சிகிச்சையில் வழங்கப்படும் மருந்துகளின் வீரியத்தால் தலைமுடி அனைத்தும் உதிர்தல், குமட்டல், வாந்தி, உடல் பலவீனம் போன்ற பல பக்கவிளைவுகள் ஏற்படும். ரஞ்சனிக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட்டன. தலைமுடி அனைத்தும் உதிர்ந்து, உடல் பலவீனமடைந்தது.

கீமோதெரபியால் தலை முடி அனைத்தும் உதிரும்

இந்த நிலையில், மருத்துவர்கள் இரண்டாம் கட்ட கீமோதெரபி சிகிச்சைக்கான நாளையும் குறித்தனர். அப்போதுதான் அரசு மருத்துவமனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட திசு மாதிரியின் பரிசோதனை முடிவு வந்தது. அதில் ரஞ்சனியின் மார்பகத்தில் இருந்த கட்டி, புற்றுநோய் கட்டி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்ததைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இரண்டாம் கட்ட கீமோதெரபிக்கான தயாரிப்புகள், புற்றுநோய்க்காக வழங்கப்பட்ட மாத்திரைகள் என அனைத்தும் நிறுத்தப்பட்டன. புற்றுநோயே இல்லாதவருக்கு புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ரஞ்சனியின் வருமானம்தான் வயதான பெற்றோர், 8 வயது மகள் ஆகியோர் அடங்கிய குடும்பத்துக்கு முக்கிய ஆதாரமாக இருந்தது.

கீமோதெரபி


``கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு உடல் பலவீனம் காரணமாக என்னால் வேலைக்குப் போகமுடியவில்லை. என் அப்பா ஒரு சிறிய கடை வைத்திருக்கிறார். அதில் வரும் சொற்ப வருமானத்தில்தான் இப்போது குடும்பம் நடக்கிறது" என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார் ரஞ்சனி.
கேரள மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா, இந்த விவகாரம் தொடர்பாக ரஞ்சனி சிகிச்சை பெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரை விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.