`தண்ணீர் மாறினால் தலைமுடி கொட்டுமா?' - மருத்துவரின் விளக்கம் | Is water change cause to hairfall?

வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (04/06/2019)

கடைசி தொடர்பு:18:11 (04/06/2019)

`தண்ணீர் மாறினால் தலைமுடி கொட்டுமா?' - மருத்துவரின் விளக்கம்

`தலைமுடியின் வேர்க்கால்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கு மட்டுமே இப்படி நடக்கும்.'

'வீடு மாறினோம், தண்ணி மாறுச்சு. தலை முடி கொட்டிப் போச்சு' - தண்ணீர் மீதான இந்தக் குற்றச்சாட்டை நாமெல்லாருமே வாழ்நாளில் ஒரு முறையாவது சொல்லி இருப்போம். உண்மையிலேயே தண்ணீர் மாறுவதற்கும் தலைமுடி உதிர்வதற்கும் சம்பந்தம் இருக்கிறதா? ஆயுர்வேத மருத்துவர் மகேஸ்வரராவிடம் கேட்டோம். 

தலைமுடி

ஆயுர்வேத மருத்துவர் மகேஷ்வரராவ்``இதில் ஓரளவுக்கு மட்டுமே உண்மை இருக்கிறது. தண்ணீரில் கடினமானது, மென்மையானது என இரண்டு வகைகள் இருக்கின்றன. தொடர்ந்து மென்மையான தண்ணீரில் குளித்து வந்தவர்கள் திடீரென கடினமான தண்ணீரில் தொடர்ந்து குளித்து வந்தால் தலைமுடிக் கொட்டத்தான் செய்யும். கடினமான தண்ணீரில் கால்சியம் உப்பு அதிகமாக இருப்பதுதான் இதற்குக் காரணம். இந்தத் தண்ணீரில் தொடர்ந்து தலைக்குக் குளிக்கும்போது தலைமுடி உலர்ந்து உதிர ஆரம்பிக்கும். இதுவே, கடினமான தண்ணீரில் குளித்து வந்தவர்கள் மென்மையான தண்ணீருக்கு மாறினால் முடிக் கொட்டாது. அதனால், தண்ணீர் மாறினால் தலைமுடிக் கொட்டும் என்று சொல்லிவிட முடியாது. 

இதுவும்கூட எல்லாருக்கும் நடக்கும் என்று சொல்ல முடியாது. தலைமுடியின் வேர்க்கால்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கு மட்டுமே இப்படி நடக்கும். இவர்கள், தண்ணீரைக் குறை சொல்வதை விட்டுவிட்டு சத்தான உணவுகளைச் சாப்பிட  ஆரம்பிக்க வேண்டும். 

மற்றபடி, கடினமான தண்ணீரில்தான் தலைக்குக் குளிக்க வேண்டும் என்கிற நிலையில் இருப்பவர்கள், குளித்து முடித்த பிறகு கடைசியாக  ஒரு கப் மென்மையான தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்டாலே, தலைமுடி உதிராது.