இணையத்தைப் பார்த்து வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயாரிக்கிறீர்களா? - எச்சரிக்கை அவசியம் | Homemade Sunscreens are dangerous, says reports

வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (05/06/2019)

கடைசி தொடர்பு:16:01 (06/06/2019)

இணையத்தைப் பார்த்து வீட்டிலேயே சன்ஸ்கிரீன் தயாரிக்கிறீர்களா? - எச்சரிக்கை அவசியம்

வீட்டிலேயே தயாரிக்கப்படும் சன்ஸ்கிரீன் வகைகள், புற ஊதாக் கதிர்களிலிருந்து 68 சதவிகிதம் சருமத்தைப் பாதுகாப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது. 

சமையல் குறிப்பு தொடங்கி அழகியல் குறிப்புகள் வரை எல்லாமே இணையத்தில் தேடினால் கிடைக்கிறது. எதை, எப்படி, என்ன பதத்தில் தயாரிக்க வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் அனைத்தும் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அவை அனைத்தையும் முழுமையாகச் சரியென்று சொல்லிவிட முடியாது. 

சன்ஸ்கிரீன்

சமூகவலைதளங்களின் உதவியுடன் வீட்டிலேயே தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. சமீபத்தில் அமெரிக்காவின் `ஜாக்சன்வில்லே' (Jacksonville) பகுதியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர், வீட்டில் தயாரிக்கப்படும் சன்ஸ்கிரீன்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில், இதுபோன்று தயாரிக்கப்படும் சன்ஸ்கிரீன் வகைகள், புற ஊதாக் கதிர்களிலிருந்து 68 சதவிகிதம் சருமத்தைப் பாதுகாப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆய்வாளர்களில் ஒருவரான லாரா மெக்கென்சி இதுகுறித்து கூறும்போது, ``கைவினைப் பொருள்கள், சமையல், அழகுசாதனப் பொருள்கள் குறித்து கற்றுக்கொள்வதற்கான பிரத்தியேக இடமாகவே இணையதளம் மாறிவிட்டது. ஆனால், அவற்றின் நம்பகத்தன்மையில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. பல நேரங்களில், இணையத்தில் வெளியிடப்படும் அந்தத் தகவல்கள் பாதுகாப்பானதாக இருப்பதில்லை. காரணம், தாமாகவே தயாரிப்பதால், அந்தப் பொருள்கள்மீது பலருக்கும் சந்தேகம் வருவதில்லை. ஆனால், எந்தவொரு பொருளிலும் ரசாயனம் சேர்க்கும்போது அதன் அளவுகோலில் கவனம் அவசியம். 

எஸ்.பி.எஃப். அளவு

விற்பனைக்கு உள்ளாக்கப்படும் சன்ஸ்கிரீன்கள் ரசாயனம் தொடர்பான பல்வேறுகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்பதால், அதில் நம்பகத்தன்மை இருக்கும். ஆனால், சொந்தமாகத் தயாரிக்கப்படுபவற்றை, வீட்டில் பரிசோதனைக்கு உட்படுத்த முடியாது என்பதுதான் இங்கு பிரச்னை. இதுமட்டுமன்றி, அவற்றின் செய்முறையைப் பார்த்து சன்ஸ்கிரீன் லோஷன்களைத் தயாரிக்கும் பலரும் பரிந்துரைக்கப்படும் அதே அளவைப் பயன்படுத்தவில்லை என்பது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலான தகவல்களில், சரியான அளவு பரிந்துரைக்கப்படுவதில்லை" என்று கூறியுள்ளார். 

எனவே, இனியொரு முறை `நீங்களே தயாரிக்கலாம்' வகையின்கீழ் சன்ஸ்கிரீன் லோஷன்கள் எதையாவது நீங்கள் பார்க்க நேர்ந்தால், கவனமாக இருங்கள். அவற்றைப் பார்த்து செய்யத் தொடங்குவதற்குமுன் கீழ்க்காணும் விஷயங்களைக் கவனத்தில்கொண்டு செயல்படுவது நல்லது.

கிரீம்


* செய்முறையைப் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட இணையதளத்தின் நம்பகத்தன்மை
* செய்முறையில் பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் அதன் அளவுகோல்கள்
* சன்ஸ்க்ரீன் எஸ்.பி.எப் அளவு மிகமுக்கியமானது. இந்த அளவு, ஒவ்வொருவரின் சருமத்துக்கும் வேறுபடும் என்பதால் சரும மருத்துவரிடம் இதுகுறித்து விசாரித்து தெரிந்துகொள்வது நல்லது.
* நீங்களே தயாரித்த சன்ஸ்க்ரீனை முதல்முறை பயன்படுத்தும்போது, சிறிதளவு கிரீமை உபயோகப்படுத்தி பரிசோதித்துப் பார்க்கவும். ஒவ்வாமை ஏதும் ஏற்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள், குறைந்தபட்சம் 48 மணி நேரம் வரை பொறுமை காக்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க