அரசு மருத்துவமனை ரத்தம் பற்றாக்குறையைப் போக்க நாம் தமிழர் கட்சியினரின் அசத்தல் முயற்சி! | Naam tamilar party members donate blood in rajiv gandhi hospital for blood deficiency

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (06/06/2019)

கடைசி தொடர்பு:15:51 (15/06/2019)

அரசு மருத்துவமனை ரத்தம் பற்றாக்குறையைப் போக்க நாம் தமிழர் கட்சியினரின் அசத்தல் முயற்சி!

ட்சி கட்டமைப்பு, தேர்தல் அரசியல் செயல்பாடுகளைத் தாண்டி மரம் நடுதல், ரத்ததான முகாம், பனை விதை சேகரித்தல், ஏரி, குளம் தூர்வாருதல்... என சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர். அந்த வகையில் தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள ரத்த பற்றாக்குறையைப் போக்க கட்சியின் சார்பாக ரத்ததானம் செய்து வருகின்றனர். முன்னதாக, ''ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்றும், கட்சி உறுப்பினர்கள் தானம் அளிக்க முன்வர வேண்டும்'' எனவும் நாம் தமிழர் கட்சித் தலைமையின் சார்பாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று முதல் ரத்ததானம், செய்துவருகிறார்கள் கட்சித் தொண்டர்கள்.

நாம் தமிழர் கட்சி

ரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைப் போக்க, நாம் தமிழர் கட்சியின் துணைப் பிரிவான குருதிக் கொடை பாசறையின் சார்பாக இந்த ரத்ததான செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அறிக்கை

அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் நாதனிடம் பேசினோம்,

''எங்கள் கட்சியில் ரத்ததானத்துக்கென்று, 'குருதிக் கொடை பாசறை' என்ற  தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ரத்ததானம் செய்துவருகிறோம். யாருக்கு எந்த நேரத்தில் ரத்தம் தேவைப்பட்டாலும், எங்கள் கட்சி உறுப்பினர்களின் மூலமாகத் தானமளித்து வருகிறோம். தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்கள் ரத்ததான முகாம் நடத்தும்போதும் உதவி செய்கிறோம்.

ரத்ததானம்

எப்போதும் ரத்தம் இருப்பு இருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பற்றாக்குறை என்கிற தகவல் வந்தது. ரத்ததானம் செய்யுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அண்ணன் சீமானின் அறிவுறுத்தலின் பேரில் அறிக்கை வெளியிட்டோம். நேற்று முதல் இருபதுக்கும் மேற்பட்ட தம்பிகள் தானமளித்திருக்கிறார்கள். இன்று காலையும் ஒரு சிலர் தானமளித்துள்ளனர். தானமளிப்பவர்களுக்குக் குருதிகொடை பாசறையின் சார்பாக `உயிர்நேய மாண்பாளர்' என்ற சான்றிதழ் வழங்குகிறோம். வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தானமளிக்க முடிவு செய்துள்ளோம்'' என்றார் அவர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க