ஓர் ஆண்டுக்கு 90,000 பிளாஸ்டிக் துகள்கள்... பாட்டில் தண்ணீர் குடிப்பவர்களே உஷார்! | Each human consuming bottled water, may intake 90,000 plastic microbes per year, says study

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (06/06/2019)

கடைசி தொடர்பு:20:40 (06/06/2019)

ஓர் ஆண்டுக்கு 90,000 பிளாஸ்டிக் துகள்கள்... பாட்டில் தண்ணீர் குடிப்பவர்களே உஷார்!

லக சுற்றுச்சூழல் தினம் நேற்று (ஜூன் 5) கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்த தினத்தில் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் சூழலியல் தொடர்பான கருப்பொருள் அறிவிக்கப்படும். அந்த ஆண்டு முழுவதும், அதுகுறித்த விழிப்புணர்வுகள், செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு காற்று மாசுபாட்டிலிருந்து இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

தண்ணீர்

காற்று மாசுபாடு குறித்து உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது, `என்விரான்மென்டல் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி' (Environmental Science and Technology) எனும் பத்திரிகை நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதாவது, பிளாஸ்டிக் பொருள்கள், காற்றை எந்தளவுக்கு மாசுபடுத்துகின்றன என்பதைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில். பாட்டில் தண்ணீரை தொடர்ச்சியாக அருந்துபவர்கள் ஓர் ஆண்டில் மட்டும் 90,000 பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கூடவோ, குறையவோ இருக்கலாம், அடுத்தகட்ட ஆய்வில் அவை தெளிவாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எது எப்படியாக இருந்தாலும், காற்று மாசுபாட்டுக்குச் சுற்றுச்சூழல் மட்டுமன்றி உணவு, உடை, இருப்பிடம் எனப் பல வகையான காரணங்கள் இருப்பது  இதன்மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

டயர்

ஆண்கள், தங்களது சிந்தடிக் ஆடைகள், கான்டாக்ட் லென்ஸ்கள், கார் டயர்கள் போன்றவற்றிலிருந்து மட்டும் ஒரு வருடத்தில் சுமார் 52 ஆயிரம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதுமட்டுமன்றி, சுவாசத்தின்மூலம் ஒருநாளைக்கு ஏறத்தாழ 320 துகள்களை ஒருவர் சுவாசிப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைப்பது மட்டுமே இத்தகைய ஆபத்துகளிலிருந்து தப்பிக்க ஒரே வழி எனவும் அறிவுறுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இந்த ஆய்வின் அடுத்தகட்டமாக, எவ்வளவு மைக்ரோ துகள்கள் நுரையீரலைச் சென்றடைகிறது, வயிற்றுப் பகுதியில் அவை ஏற்படுத்தும் பாதிப்பின் வீரியம் என்ன, அதனால் ஏற்படும் தீமைகள் என்ன, என்பது கண்டறியப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க