இந்தியாவில், வருடத்துக்கு லட்சம் குழந்தைகளை காற்று மாசுபாட்டால் இழக்கிறோம்! | India is losing one lakh children every year because of Air pollution

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (06/06/2019)

கடைசி தொடர்பு:22:00 (06/06/2019)

இந்தியாவில், வருடத்துக்கு லட்சம் குழந்தைகளை காற்று மாசுபாட்டால் இழக்கிறோம்!

ஸ்டேட் ஆஃப் இந்தியா என்விரான்மென்ட் (State of India's Environment - SoE) என்ற அமைப்பு, கடந்த சில வருடங்களாகக் காற்று மாசுபாடு, குழந்தைகளுக்கு எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது பற்றி இந்திய அளவில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.  நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

காற்று மாசுபாடு

அதில், சராசரியாக 10,000 குழந்தைகளில் 8.5 சதவிகிதம் பேர் காற்று மாசுபாடு காரணமாக தங்களுடைய ஐந்து வயதுக்குள் இறப்பை எய்திவிடுகின்றனர் என்றும், பெண் குழந்தைகளில் 9.6 சதவிகிதம் பேர் காற்று மாசுபாடு காரணமாக தங்களின் ஐந்து வயதுக்குள் இறக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. ``இந்தியா, அளவுக்கதிகமாக மக்கள்தொகை கொண்ட ஒரு நாடு. அதனாலேயே, இங்கு ஏற்படும் சிறிய அளவீடுகள்கூட பெரும்பகுதி உயிர்களைக் குறிக்கும். மேற்குறிப்பிடப்பட்ட 9.6 மற்றும் 8.5 ஆகிய சதவிகிதங்கள் பார்ப்பதற்குக் குறைவான எண்ணிக்கையாகத் தோன்றலாம். ஆனால், எண்களில் சொல்லப்போனால், ஒரு லட்சம். ஆம், காற்று மாசுபாடு காரணமாக ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகளை அவர்களுடைய ஐந்தாவது வயதுக்குள் நாம் இழக்கிறோம். அனைத்து வயதினரையும் பொறுத்திப்பார்த்தால் இந்தியாவில் நிகழும் இறப்புகளில் 12.5 சதவிகிதம், காற்று மாசுபாடு காரணமாகவே நிகழ்ந்தவையாக இருக்கின்றன " எனக்கூறியுள்ளனர் அதிகாரிகள்.

``காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய அரசு 2013-ம் ஆண்டு உறுதிமொழி ஒன்றை எடுத்தது. அது, 2020-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சமாக ஒன்றரை கோடி மின்சார வாகனங்களும், ஐம்பது முதல் அறுபது லட்சம் இ-வெஹிக்கில்ஸூம் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது. ஆனால், மே 2019 கணக்குப்படி, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-வெகிக்கில்ஸ் எண்ணிக்கை, இரண்டு லட்சத்து எட்டாயிரம்தான்" என எஸ்.ஓ.இ. தரப்பில் அரசு மீது விமர்சனமும் வைக்கப்பட்டுள்ளது. 

காற்று மாசுபாடு - குழந்தை இறப்பு

உலக தரவுகளின் கூற்றுப்படி, 2017 - ம் ஆண்டு மட்டும் காற்று மாசுபாடு காரணமாக இறந்த இந்தியர்களின் எண்ணிக்கை பன்னிரண்டு கோடி. இந்த வருடம், இந்த எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்துள்ளதே தவிர, குறையவும் இல்லை. எனில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் தாக்கத்தை நாமே எளிதாகப் புரிந்துகொள்ளலாம். நேற்று வெளிவந்த ஆய்வு முடிவுக்குப்பிறகு, 'காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்திய அளவில் நாங்கள் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும், முழுமையாகப் பயனளிக்கவில்லை. இது நிஜமாகவே எங்களுக்கு வருந்தத்தக்க விஷயம்தான்' எனச் சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர்  ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க