எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ஆன்-லைன் விண்ணப்பம் தொடங்கியது! | MBBS, PTS Online applications started

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (07/06/2019)

கடைசி தொடர்பு:13:25 (07/06/2019)

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான ஆன்-லைன் விண்ணப்பம் தொடங்கியது!

2019-2020-ம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் இன்று தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட்டது.

 

எம்.பி.பி.எஸ்.

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கான விண்ணப்பம், தகவல் கையேடு (Prospectus) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் நேரடி விண்ணப்ப விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 
அரசு இடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500,  தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000.

www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இரு இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து இணையதளத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 20. 

எம்.பி.பி.எஸ். மாணவர்கள்

அதன்பிறகு, இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பூர்த்திசெய்த விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலருக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களின் நகல் தேர்வுக்குழுவுக்குச் சென்று சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 21.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பரிசீலித்து, ஜூலை 2-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 4-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கருவிகள்

அகில இந்திய எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வுக்குப் பிறகே அந்தந்த மாநிலங்களில் கலந்தாய்வு நடைபெறும். ஆனால் அகில இந்திய கலந்தாய்வு, விண்ணப்பம் குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.