ஒரே வட்டாரத்தில் 576 குழந்தைகள் உட்பட 700 பேருக்கு ஹெச்.ஐ.வி - பாகிஸ்தானில் பீதி! | 700 people affected with HIV in pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (07/06/2019)

கடைசி தொடர்பு:20:16 (07/06/2019)

ஒரே வட்டாரத்தில் 576 குழந்தைகள் உட்பட 700 பேருக்கு ஹெச்.ஐ.வி - பாகிஸ்தானில் பீதி!

தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளதாகப் பாகிஸ்தானின் பொதுநல இயக்குநர் மசூத் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கைக்குள் வருபவர்களில், பச்சிளம் குழந்தை தொடங்கி 5 வயது வரையிலான 576 குழந்தைகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

ஒரே வட்டாரத்தில்  576 குழந்தைகள் உட்பட 700 பேருக்கு ஹெச்.ஐ.வி - பாகிஸ்தானில் பீதி!

கடந்த மாத தொடக்கத்தில், விழிப்புணர்வுக்காகப் பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்குத் தனியார் அமைப்பு சார்பில் ஹெச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்தப் பரிசோதனையின் முடிவு, அப்பகுதி மக்களை மட்டுமன்றி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

காரணம், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும் பகுதியினருக்கு ஹெச்.ஐ.வி பாதித்திருப்பது அந்தப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. முதன்முதலாக வெளிவந்த அறிக்கையில், 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் ஊடகங்கள், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவித்தது. அரசுக்கும் இந்தச் சந்தேகம் வலுக்கவே, அடுத்தடுத்த நாள்களில் லர்கானா மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் வசிக்கும் மக்களுக்கும் ஹெச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் சுமார் 500 பேர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்ப்டிருந்தது தெரியவந்தது. பிரச்னையின் தீவிரத்தை அப்போதுதான் அனைவரும் உணர்ந்துகொண்டனர். 

ஹெச்.ஐ.வி

பாதிக்கப்பட்ட பலருக்கும் மிகச் சமீபத்தில்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் பரிசோதனைகளில் உறுதிசெய்யப்பட்டன. அதன் பின்னணியைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் விசாரணையில் இந்தப் பிரச்னைக்கு லர்கானாவைச் சேர்ந்த முசாஃபர் மருத்துவர் என்பது கண்டறியப்பட்டது. ஒருமுறை பயன்படுத்திய ஊசியை மீண்டும் மீண்டும் அவர் பயன்படுத்தியதே, பிரச்னையின் ஆணிவேர் என்பதை விசாரணைக் குழு உறுதிசெய்தது. மருத்துவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். 

இந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது என பாகிஸ்தானின் பொதுநல இயக்குநர் மசூத் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கைக்குள் வருபவர்களில், பச்சிளம் குழந்தை தொடங்கி 5 வயது வரையிலான 576 குழந்தைகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து இதுவரை ஏறத்தாழ 25,000 பேர் ஹெச்.ஐ.வி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் மசூத் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அரசின் வேண்டுகோளுக்கிணங்க, பாகிஸ்தானில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மருத்துவச் சேவையை அளிப்பதற்காக உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவ செயற்பாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகள் முழு வீச்சில் அந்தப் பகுதியில் களமிறங்கியுள்ளனர். அவர்களின் கள ஆய்வுக்குப் பிறகு, ஹெச்.ஐ.வி பாதிப்புக்குக் காரணம் பாகிஸ்தானில் தகுதி பெறாத மருத்துவர்கள், ரத்த வங்கிகள் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் அதிகளவில் இருப்பதுதான் எனத் தெரியவந்துள்ளது. 

ஹெச்.ஐ.வி

தற்போது லர்கானா பகுதியில் மட்டும் தகுதிபெறாத 17 பொது மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 70-க்கும் மேற்பட்ட மருந்தகங்களும் மூடப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி டாவ்ன் இதுகுறித்து ஊடகங்களிடம் பேசும்போது, "எங்கள் சுகாதார அமைச்சகம் தற்போது அகா கான் பல்கலைக்கழகம், பாகிஸ்தான் தொற்று நோயியல்துறை, லர்கானாவின் யுனிசெஃப் அமைப்பு, யு.என்.எய்ட்ஸ் அமைப்பு அனைத்தோடும் கைகோத்து செயலாற்றத் தொடங்கியுள்ளது. விரைவில் நிலைமையைச் சரி செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.

700-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது, பாகிஸ்தானில் பலரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறு குழந்தைகளின் பெற்றோரிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பெற்றோர், தாமாக முன்வந்து தங்கள் குழந்தைகளை ஹெச்.ஐ.வி பரிசோதனைக்கு உட்படுத்தி வருவகின்றனர். எனவே, அரசு சார்பில் 50,000 ஹெச்.ஐ.வி பரிசோதனை 'கிட்' பாகிஸ்தான் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

மூன்று குழந்தைகளின் தந்தையான கூலித்தொழிலாளி இமிடியாஸ் இதுகுறித்து ஊடகங்களிடம் பேசும்போது, "அந்த டாக்டர், 50 குழந்தைகளுக்கு ஒரு ஊசிங்கற அடிப்படையில பிள்ளைகளுக்கு ஊசி போடுவாரு. என்னோட மூணு பிள்ளைகளுக்கும் இப்போ ஹெச்.ஐ.வி பாதிப்பு வந்துடுச்சு. எங்க ஊர்ல குழந்தைகள் நல மருத்துவரே கிடையாது. பயந்துபோய் பக்கத்து டவுணுக்குப் போய் பார்த்தப்போதான், எம்புள்ளைங்களும் பாதிக்கப்பட்டிருக்குனு தெரியவந்திருக்கு" எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

எய்ட்ஸ் - ஹெச் ஐ வி

ஹெச்.ஐ.வி. பாதிப்பின் தீவிரத்தன்மை குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புரியும் ஹெச்.ஐ.வி-க்கான சிறப்பு அதிகாரி சேகரிடம் கேட்டோம்.

"மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்திதான் இது. பல வருடங்களாக மருத்துவ அலட்சியம் நீடித்தால் மட்டுமே, இந்தளவு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொர் வருடமும் அரசு சார்பில் முறையான விழிப்புணர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால்கூட முதல்நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிந்திருக்கலாம். 

ஹெச்.ஐ.வி பாதிப்பை ஆண்டிஜென் பரிசோதனை மூலமாக உறுதிசெய்வது வழக்கம். ஆனால், பாதிப்பு ஏற்பட்டு முதல் மூன்று மாதத்துக்கு ஆண்டிஜென் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி வெளிப்படத் தொடங்கியிருக்காது. இந்தக் காலகட்டம், சிலருக்கு மூன்று வருடமாகக்கூட இருக்கலாம். இடைப்பட்ட காலம் 'வின்டோ பீரியட்' (Window period) எனக் குறிப்பிடப்படும். இந்தக் காலகட்டத்தில் இருப்பவர்களைப் பரிசோதித்தாலும் ஹெ.ஐ.வி-யை உறுதி செய்ய முடியாது. அதனால் எண்ணிக்கை இன்னும் உயரவும் வாய்ப்புள்ளது.

சமீபத்தில் பரவிய ஹெச்.ஐ.வி தொற்று பாதிப்பாக இது இருந்தால், குறுகிய கால பரிசோதனையில் இத்தனை பேருக்கு ஹெச்.ஐ.வி  பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆகவே, நீண்ட நாள் பாதிப்பு என்றுதான் இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.  இப்போது வேகமாக ஹெச்.ஐ.வி பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதைச் செய்திகள் வழியாக நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இந்த அதிவேக பரிசோதனை எப்படிச் சாத்தியப்பட்டது, என்னென்ன சாதனங்கள் உபயோகிக்கப்படுகின்றன என்பதற்கான விடைகள் இல்லை. தற்போது உலக சுகாதார நிறுவனம் களமிறங்கி இருப்பது பாராட்டத்தக்க விஷயம். அவர்களின் செயல்பாடு, பிரச்னையை ஓரளவு கட்டுப்படுத்தும் என நம்பலாம். இந்த விவகாரம் நமக்கும்கூட ஓர் எச்சரிக்கையாகக் கருதி, மருத்துவர்கள், மருத்துவமனைகள் பாதுகாப்பான சிகிச்சையை நோயாளிகளுக்கு அளிக்க வேண்டும்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்