"மன அழுத்தம்தான் அடுத்தகட்டத்துக்கு என்னை உந்தித்தள்ளுது..."- அருண்ராஜா காமராஜ் ஓபன் டாக்!  #LetsRelieveStress | director arunraja kamaraj talks about his stress relief techniques

வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (10/06/2019)

கடைசி தொடர்பு:11:01 (10/06/2019)

"மன அழுத்தம்தான் அடுத்தகட்டத்துக்கு என்னை உந்தித்தள்ளுது..."- அருண்ராஜா காமராஜ் ஓபன் டாக்!  #LetsRelieveStress

நாம் ஒரு விஷயத்தை எதிர்பார்த்து அது நடக்காமல்போனால் மனஅழுத்தம் ஏற்படும். இந்த உலகத்துக்கே அவர் ராஜாவாக இருந்தாலும் அவர் நினைத்தது நடக்கவில்லை என்றால், அவருக்கும் மனஅழுத்தம் வரத்தான் செய்யும். அதையெல்லாம் கடந்துபோவது மட்டுமே மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான தீர்வாக இருக்க முடியும்.

பாடலாசிரியர், பாடகர், நகைச்சுவை நடிகர், இயக்குநர் எனப் பன்முக அவதாரம் எடுத்து அனைத்திலும் வெற்றி கண்டவர் அருண்ராஜா காமராஜ். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத, பழகுவதற்கு எளிமையான படைப்பாளி. தனக்கான களத்தில் நிதானமாக நின்று விளையாடுபவர். `கனா’ படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கான திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். 

இயக்குநர் அருண்ராஜா காமராஜ்

சூர்யா நடிப்பில் `சூரரைப் போற்று’, ஜோதிகா நடிப்பில் `ஜாக்பாட்’ ஆகிய இருபடங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். இவை தவிர்த்து, சில படங்களில் பாடியிருக்கிறார். ஒரு படத்தை இயக்குவதே சவாலான பணி. பன்முகமாக இயங்கும்போது கண்டிப்பாக மனஅழுத்தம் என்பது ஏற்படவே செய்யும். எப்படி அதை எதிர்கொள்கிறார்..? 

“சினிமா என்பது பெரிய கடல். அந்தக் கடலுக்குள் சிறிய படகை எடுத்துக்கொண்டு பயணிக்க ஆரம்பித்திருக்கிறேன். கடலுக்குள் எனக்கு எதுவும் நடக்கலாம். பயணம் கொஞ்சதூரத்தில் முடியலாம். அல்லது என்னுடைய சிறிய படகு பெரிய கப்பலாகவும் மாறலாம். பயணம் முடியும்போதுதான் நான் என்னவாக மாறியிருக்கிறேன் என்பது தெரியும். வெற்றியை அப்படித்தான் பார்க்கிறேன். 10 வருடப் போராட்டத்துக்குப் பின் ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேனே தவிர, நான் வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கவில்லை. 

வெற்றி என்பது நாம் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்கும்போதுதான் நிரந்தரமாக இருக்கும். `இவன் ஜெயிச்சுடுவான்’ என்று எல்லோருக்கும் உங்கள் மேல் நம்பிக்கை வந்துவிட்டால் அதற்காக உழைப்பதுதான் கடினம். முன்னேறிச் செல்கிற எந்தவொரு படைப்பாளிக்குமே பின்னால் இருந்து ஏதோ ஓர் அழுத்தம் உந்தித்தள்ளும். அப்படி என்னை உந்தித்தள்ளுவதாக மனஅழுத்தம் இருந்திருக்கிறது!

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் - மனஅழுத்தம்

`உனக்கான லட்சியத்தை அடையும்வரை கண்ணில் உறக்கம் இருக்கக் கூடாது’ என்று சொல்வார்கள். அப்படித்தான், நான் திட்டமிட்டதை முடிக்கும்வரை கண்ணில் உறக்கம் இருக்காது. அன்றைய பொழுதில் புதியதாக ஒன்றைச் செய்தேன், யோசித்தேன் என்றால் மட்டுமே நிம்மதியான உறக்கம் வரும். பாடலாசிரியராக இருக்கும்போது ஒரு பாடல் எழுதிய பின் தூங்கிவிடுவேன். பின்னர் படுக்கையிலிருந்து எழுந்ததும் மனம்  உற்சாகமாகிவிடும். அப்போது யோசித்து, மற்றொரு பாடலை எழுதுவேன். ஆனால், ஓர் இயக்குநராக மாறிய பின் எனக்குத் தூங்குவதற்கு நேரமில்லை. அப்படிப் பார்த்தால், இயக்குநர் ரோல் என்பது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட மனஅழுத்தம் என்று சொல்வேன்.

இது உடல்நலனுக்குக் கேடுதான். இதைச் சரிசெய்ய சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், தேவையோடும் தேடலோடும் ஓடிக்கொண்டிருப்பதால் அதற்கான நேரம் இப்போது இல்லை. ஆனால், விரைவில் கவனம் செலுத்துவேன்!
சினிமாவில் பாடலாசிரியர், பாடகர், நடிகர், இயக்குநர் என நிறைய வேலைகளைச் செய்யும்போது மனஅழுத்தம் ஏற்படத்தான் செய்யும். அதை அப்படியே நான் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, நான் எடுத்துக்கொண்ட பொறுப்புக்கு ஏற்றவாறு யோசித்துக்கொண்டே இருப்பேன். என் சக நண்பர்களிடம் அது குறித்துப் பேசுவேன். ஆனால், இது ஒரு பாடலாசிரியர் ரோலுக்கு மட்டும் பொருந்தாது. சில பாடல்கள் எழுத நிறைய நேரம் ஆகும். சில பாடல்கள் எனக்குத் திருப்தி அளிக்கக்கூடிய அளவுக்கு அமையாததால், தவிர்த்திருக்கிறேன். அந்தப் பாடலில் இசையமைப்பாளர் விரும்புவதும் நான் எழுத நினைப்பதும் வேறு வேறாக இருக்கும். அப்படியான சமயங்களிலும் பாடல் எழுதுவதைத் தவிர்ப்பதுண்டு.  

இயக்குநர் அருண்ராஜா காமராஜ்

ஆனால், ஓர் இயக்குநராக வேலைசெய்யும்போது திருப்தி அளிக்கும் வகையில் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பேன். சரியோ, தவறோ முடிவுகளை நான்தான் எடுப்பேன். இதுதான் எனக்குத் தேவை என்றால் அது கிடைக்கும்வரை விடாப்பிடியாக இருப்பேன். ஒரு காட்சியை எழுதும்போது நான் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறதா என்று பார்ப்பேன். இந்தக் காட்சி ரசிகர்களிடம் எடுபடும் என்று நம்புவேன். ஏனென்றால், மற்றவர்களைவிட என்னுடைய சிந்தனைகளை நான் மதிக்கிறேன். அதனால் வரும் வெற்றி, தோல்விகளை முழுமையாக நானே ஏற்றுக்கொள்கிறேன்!

உடலும் மனமும் வேறு வேறு. நான் ஆரோக்கியமாக இருக்கிறேனா என்பதை என்னுடைய உடல் காட்டிக்கொடுத்துவிடும். ஆனால், மனநலனைப் பொறுத்தவரை நான் எப்படி இருக்கிறேன் என்பதை என்னால் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. உடல்நலனைப்போல மனநலனும் ரொம்ப முக்கியம் என்று நினைக்கிறேன். எல்லா துறையிலும் வேலைப் பளு என்பது அதிகமாக இருக்கிறது. வேலைப் பளு என்பதே மனஅழுத்தம் தரக்கூடியதுதான். அது சினிமாவுக்கும் பொருந்தும். அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். `வரும் காலங்களில் என்னுடைய வளர்ச்சிக்கு இது உதவக்கூடியது’ என்று நினைத்துக்கொண்டு வேலைசெய்யும்போது மனஅழுத்தம் எல்லாம் பறந்தே போய்விடும்.  

அருண்ராஜா காமராஜ்

நாம் ஒரு விஷயத்தை எதிர்பார்த்து அது நடக்காமல்போனால் மனஅழுத்தம் ஏற்படும். இந்த உலகத்துக்கே அவர் ராஜாவாக இருந்தாலும் அவர் நினைத்தது நடக்கவில்லை என்றால், அவருக்கும் மனஅழுத்தம் வரத்தான் செய்யும். அதையெல்லாம் கடந்துபோவது மட்டுமே மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கானத் தீர்வாக இருக்கமுடியும். இழப்பு, வலி, ஏமாற்றம், தோல்வி போன்றவையெல்லாம் நிரந்தரமல்ல... தானாகவே போய்விடும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. 

இயக்குநர் அருண்ராஜா காமராஜ்

எனக்கும் மனஅழுத்தம் வந்திருக்கிறது. நண்பர்களிடம் கூறி புலம்பியிருக்கிறேன், வருத்தப்பட்டிருக்கிறேன். சில விஷயங்களுக்காக ஏங்கியிருக்கிறேன். யாரிடமும் சொல்லாமல் அழுதிருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் கடந்து, அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறேன். வேறு ஒரு வடிவத்தில் மறுபடியும் மனஅழுத்தம் எனக்கு வரலாம். அப்போதும் அதைக் கடந்துபோவது மட்டுமே அதை எதிர்கொள்வதற்கான சரியான வழியாக இருக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். அப்படிக் கடந்துபோகத் தயாராக இருந்துவிட்டால் எத்தகைய மனஅழுத்தத்திலிருந்து யாரும் வெளியேறிவிட முடியும்!” என்கிறார் அருண்ராஜா காமராஜ்


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை