`மூளையின் செயல்பாடுகளைப் பாதிக்கும் இன்டர்நெட் பயன்பாடு!' - எச்சரிக்கை மணியடிக்கும் ஆய்வு | High usage of internet can impact brain functions: study

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (10/06/2019)

கடைசி தொடர்பு:18:20 (10/06/2019)

`மூளையின் செயல்பாடுகளைப் பாதிக்கும் இன்டர்நெட் பயன்பாடு!' - எச்சரிக்கை மணியடிக்கும் ஆய்வு

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் ஒருசேர கட்டிப்போட்டிருக்கிறது, டிஜிட்டல் யுகம். செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், ஐபாட் என இணைய உலகில் எந்நேரமும் மக்கள் சஞ்சரித்துக்கொண்டிருக்கின்றனர். இப்படி தொடர்ந்து இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துவதால், மூளையின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

கணினி

இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆய்வொன்றை நடத்தினர். அதில், இணையத்தை அதிகமாகப் பயன்படுத்தும்போது, மூளையின் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, கவனிக்கும் திறன், ஞாபகசக்தி போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது கண்டறியப்பட்டது. உலக மனோதத்துவ இதழிலும் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. நினைவாற்றலில் கடுமையான மற்றும் நீடித்த மாற்றங்களை இணையத்தால் உருவாக்க முடியும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

`இணையத்தில் தொடர்ச்சியாக வரும் நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் கட்டற்ற தகவல்கள், நம்முடைய கவனத்தைத் திசைதிருப்புவதால் மூளையின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகின்றன’ என்கிறார், மூத்த ஆராய்ச்சியாளரான ஜோசப் பிர்த். 

கம்ப்யூட்டர்

`டிஜிட்டல் சாதனங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், சமூகத்திலிருந்து விலகிப்போவதுடன், உடற்பயிற்சிபோன்ற முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கவனம் சிதறுகிறது. போதைப் பழக்கம், சைபர் குற்றங்களில் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்புகள் அதிகமுண்டு. இதைத் தடுப்பதற்கு, சில குறிப்பிட்ட செயலிகள் (Apps) இணையத்திலேயே கிடைக்கின்றன. அவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தினால், அதிக நேரம் இணையத்தில் உலாவுவதிலிருந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களைத் தடுக்கலாம்’ என்றும் வழிகாட்டுகிறார் பிர்த். 

இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது பெரியவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே தெரியவந்துள்ளது. இளைஞர்களின் இணையப் பயன்பாட்டால் ஏற்படும் சாதக, பாதகங்களைக் கண்டறிய இன்னும் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்னும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

அதிக இணைய பயன்பாடு மூளையைப் பாதிக்கும்

சமூக வலைதளங்கள், ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பெரிய சவாலாக மாறியுள்ளன. உலக சுகாதார அமைப்பின் 2018-ம் ஆண்டின் வழிகாட்டுதலின்படி, இரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரையிலுள்ள குழந்தைகளில், நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக கணினியைப் பார்க்கும் நேரத்தை (Screen time) குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 


அதிகம் படித்தவை