`ஆந்தை போன்று தாமதமாக உறங்கி தாமதமாக எழுபவரா நீங்கள்?’ - இத படிங்க மொதல்ல! | Four life hacks to reset body clock in Three weeks

வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (11/06/2019)

கடைசி தொடர்பு:21:01 (11/06/2019)

`ஆந்தை போன்று தாமதமாக உறங்கி தாமதமாக எழுபவரா நீங்கள்?’ - இத படிங்க மொதல்ல!

ரபரப்பான இன்றைய சூழலில், நம்மில் பெரும்பாலானோர் நேரத்துக்கு உறங்குவதில்லை. பெரும்பாலும் நள்ளிரவில் தூங்கச் சென்று, விடிந்தபின் தாமதமாக எழும் பழக்கத்தையே பின்பற்றிவருகிறோம். இதனால், உடலின் உயிரியல் கடிகாரம் மாறி, கடுமையான பாதிப்புகள் எழும் என்று எச்சரித்துவருகிறார்கள், மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும். தூக்கம் தொடர்பான இந்தப் பிரச்னைக்கு,  இங்கிலாந்தின் பிர்மிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தீர்வு கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் அன்றாட  வாழ்வில் சிறிய மாற்றங்களைச் செய்வதன்மூலம், இந்தப் பாதிப்பிலிருந்து மீளலாம் என்றும் தெரிவிக்கின்றன அந்த ஆய்வு முடிவுகள்.

தூக்கமின்மை

ஆந்தை, பகல் முழுவதும் உறங்கி இரவு நேரத்தில் விழித்திருக்கும். ஆந்தையைப் போன்ற இந்த பழக்கவழக்கம்தான் மனிதர்கள் மத்தியிலும் அதிகரித்துவருகிறது. பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பதால் ஆந்தைக்கு  நன்மை பயக்கலாம். ஆனால், நமக்கு எப்போதும் பிரச்னையைத்தான் உண்டாக்கும். ஆந்தையைப்போன்று பகல் நேரத்தில் எப்போதும் களைப்படைந்தே காணப்படுவோம். இது சர்க்கரைநோய், இதயக் கோளாறு, மனஅழுத்தம் போன்று பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். 

இந்தப் பிரச்னைக்கு எப்படித் தீர்வு காணலாம் என்று ஆந்தையைப் போலவே இரவு நேரத்தில் கண்விழிக்கும் 22 ஆரோக்கியமானவர்களைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்தார்கள். அவர்கள், தினமும் இரவு 2.30 மணிக்கு படுத்து, காலையில் 10.15 மணிக்கு எழும் பழக்கத்தைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சியை மேற்கொண்ட குழுவின் தலைவரான முனைவர் எலைஸ் ஃபேசெர் சில்ட்ஸ், `ஸ்லீப் மெடிசன்’ இதழுக்கு எழுதிய கட்டுரையில், `ஆந்தையைப் போன்று உறங்குபவர்களுக்கு மருந்தியல் அல்லாத சில தீர்வுகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். இந்த முறையின்மூலம், தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்க முடியும். அதே நேரத்தில், அவர்களால் மற்றவர்களைப்போன்று சிறப்பாகச் செயல்படமுடியும்' என்று தெரிவித்துள்ளார்.

தூக்கம்

ஆந்தையைப்போன்று வாழ்பவர்கள் செய்யவேண்டியவை...

தாமதமாக படுக்கைக்குச் செல்லும் பழக்கத்தால், அன்றாட வாழ்வியலில் சோர்வு, எரிச்சல் போன்ற பிரச்னைகளையும் சந்திக்கவேண்டியிருக்கும். அதேவேளை, பகல் நேர உறக்கம் மனநலப் பிரச்னைகளைத் தோற்றுவிக்கும். மேலும், இதுதொடர்பாக பல்வேறுகட்ட ஆய்வு முடிவுகள்மூலம் சில வாழ்வியல் மாற்றங்களைப் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

* வழக்கமாக எழும் நேரத்தைவிட 2 - 3 மணி நேரம் முன்பே எழுந்து, வீட்டுக்கு வெளியே சென்று காலை நேர சூரிய ஒளி எவ்வளவு நேரம் உடலில் படும்படி நிற்க முடியுமோ அவ்வளவு நேரம் நிற்க வேண்டும். 

* வழக்கமாக படுக்கைக்குச் செல்லும் நேரத்தைவிட, 2 - 3 மணி நேரம் முன்பே படுத்துவிட வேண்டும். படுக்கைக்குச் செல்வதற்குமுன் சிறிது சிறிதாக வெளிச்சத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். 

தூக்கமின்மை

* இந்தப் பழக்கங்களைத் தினமும் இரவு மற்றும் காலை நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டும். வார இறுதியிலும் தவறவிடக் கூடாது. 

* காலை உணவையும் சரியான நேரத்தில் மதிய உணவையும், 7 மணிக்குள் இரவு உணவையும்  தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். 

இந்தப் பழக்கங்களை மூன்று வாரங்கள் தொடர்ந்து கடைப்பிடித்தாலே, உடல் மற்றும் மன நலங்களில் நல்ல மாற்றத்தை அடையலாம். இதனால் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதுடன், பகல் நேரத்தில் தூங்க வேண்டும் என்ற எண்ணமும் குறைந்துவிடும். உறக்கமின்மை மற்றும் சரியான நேரத்தில் தூங்காததால் ஏற்படும் அபாயகரமான பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள் உறக்கம் பற்றி ஆய்வுசெய்த ஆராய்ச்சியாளர்கள்.
 
நீங்களும் ஆந்தையைப் போன்றே பகல் நேரத்தில் தூங்கி, இரவு நேரத்தில் விழித்திருப்பவரா? மேற்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்திப்பாருங்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க