கோடைக்காலத்தில் உயிரைப் பறிக்கும் ஹீட் ஸ்ட்ரோக்... காரணங்கள், தீர்வுகள்! | Story about prevention of heat stroke

வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (13/06/2019)

கடைசி தொடர்பு:11:23 (13/06/2019)

கோடைக்காலத்தில் உயிரைப் பறிக்கும் ஹீட் ஸ்ட்ரோக்... காரணங்கள், தீர்வுகள்!

முதியவர்கள் வெயிலில் வெளியே செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். போயே ஆக வேண்டும் என்றால் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன், நிறைய தண்ணீர் குடித்துவிட்டுச் செல்ல வேண்டும்.

கோடைக்காலத்தில் உயிரைப் பறிக்கும் ஹீட் ஸ்ட்ரோக்... காரணங்கள், தீர்வுகள்!

ந்த அறிகுறியும் இல்லாமல் திடீர் மரணத்தை ஏற்படுத்தும் கொடுமையான பாதிப்புகளில் ஒன்று 'ஹீட் ஸ்ட்ரோக்'. ஏராளமானோரைக் காவு வாங்கும் இந்தப் பாதிப்புக்கு இந்த ஆண்டு இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள். தற்போது தென்னிந்தியாவைவிட வட இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் காணப்படுகிறது. அதனால், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா போன்ற சில மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆங்காங்கே சில உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

கடந்த திங்களன்று, தமிழகத்தைச் சேர்ந்த சிலர் உத்தரப் பிரதேசத்துக்கு சுற்றுலாச் சென்றார்கள். அங்கு நிலவிய வெப்பத்தின் கொடுமை தாங்காமல் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவையிலிருந்து சுற்றுலாச்  சென்ற அவர்கள் ஐந்து பேரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது சோகம். வெப்பத்தைத் தாங்க முடியாததால் அவர்கள் உயிரிழந்ததாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக வெப்பம் காரணமாக நம் உடல் உறுப்புகள் திடீரென செயலிழந்து, மரணம் ஏற்படுவதை 'ஹீட் ஸ்ட்ரோக்' என்பார்கள். நம் மூளையிலுள்ள  'ஹைப்போதலாமஸி'ல்  'தெர்மோஸ்டாட்'  என்ற பகுதிதான் புற வெப்பநிலைக்கு ஏற்ப, உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும். புற வெப்பநிலை அதிகரிக்கும்போது, உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அப்போது 'தெர்மாஸ்டாட்' வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்றி சரியாக வைத்துக்கொள்ளும். வெளியே குளிராக இருந்தால், உடலிலுள்ள வெப்பம் வெளியேறாமல் பார்த்துக்கொள்ளும். 'தெர்மாஸ்டேட்' செயலிழந்துவிட்டால் 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்படும்.  

பாதிப்பு

வயதானவர்களுக்குப் பொதுவாக 'தெர்மாஸ்டேட்'  ஓரளவுதான் செயல்படும். அதனால்தான் முதியோர் உயிரிழக்க நேர்கிறது. கடினமானமுதியோர் நல மருத்துவர் நடராஜன் வேலைகள் செய்யாவிட்டாலும்கூட சூரிய வெப்பத்தின்காரணமாக அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை 'நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக்' என்று சொல்வார்கள். வெயிலில் நீண்டதூரம் ஓடுவது, விளையாடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் 'எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக்' வரும். இது அனைத்து வயதினருக்கும் வரலாம். எனவே, 'கோடைக்காலத்தில், மற்றவர்களைக் காட்டிலும் வயதானவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது' என்கிறார் முதியோர் நல மருத்துவர் நடராஜன்.

கோடைக்காலத்தைக் கடக்க முதியோருக்கு சில ஆலோசனைகளையும் வழங்குகிறார் அவர்.

''வயதானவர்கள் கோடைக்காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றால், வியர்வை அதிகமாக வெளியேறும். உடல் சோர்வு, தலைவலி, குமட்டல், நா வறட்சி, மயக்கம், வாந்தி போன்ற பாதிப்புகள் உண்டாகும். நீர்க்கடுப்பு, சிறுநீர் குறைவாக வெளியேறுதல், மலச்சிக்கல், வேனல் கட்டி, தூக்கமின்மை, தோல் அரிப்பு, தடிப்பு, வியர்க்குரு, பூஞ்சைக் காளான் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். அதிகநேரம் தொடர்ந்து வெயிலில் இருந்தால் 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்படவும் வாய்ப்புண்டு.

முதியோர்

முதியவர்கள் வெயிலில் வெளியே செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். போயே ஆக வேண்டும் என்றால் வீட்டிலிருந்து கிளம்புவதற்குமுன், நிறைய தண்ணீர் குடித்துவிட்டுச் செல்ல வேண்டும். அத்துடன், உப்பு சேர்த்த மோர் அல்லது ஜூஸ் குடிக்கலாம். தலைக்குத் தொப்பி, கூலிங் க்ளாஸ் அணியவேண்டும். கண்டிப்பாகக் குடை எடுத்துச் செல்ல வேண்டும்.

வெளியே செல்லும்போது என்றில்லை... பொதுவாகவே முதியோர் கோடைக்காலத்தில் அதிகமாகத் தண்ணீர் அருந்த வேண்டும். தாக உணர்ச்சி குறைந்திருக்கும் என்பதால், அவர்கள் குறைந்த அளவே தண்ணீர் குடிப்பார்கள். எனவே, வீட்டில்  உள்ளவர்கள்தான் அவர்களைத் தண்ணீர் குடிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும். சிறுநீரகம் மற்றும் இதய பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி நீர் அருந்த வேண்டும். 

தண்ணீர்

தர்பூசணி, ஆரஞ்சு, இளநீர், நுங்கு போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடலாம். நன்னாரி சர்பத், பதநீர் குடிக்கலாம். கோடைக்காலத்தில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும். கேழ்வரகு, கம்பு ஆகிய தானியங்களில் செய்யப்படும் கஞ்சி உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சியைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணிக்கும்; விரைவில் செரிமானமாகும். வெளியே சென்று வந்தால், வெள்ளரிக்காயை வெட்டி கண்களில் வைத்துக்கொள்வதும் உடல் சூட்டைத் தணிக்கும். 

தற்பூசணி

காற்றோட்டமான அறைகளில் தூங்க வேண்டியது அவசியம். ஜன்னல்கள், வாசல் நிலைப்படிகளில் வெட்டிவேர் தட்டியைத் தொங்கவிட்டு, தண்ணீர் தெளித்துவிட்டுத் தூங்கினால் குளிர்ச்சியாக இருக்கும். பருத்தி மற்றும் கதர் ஆடைகளை அணியலாம். இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். வெளியூர்ப் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. உடல் பாதிப்பு ஏதும் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது''  என்கிறார் மருத்துவர் நடராஜன்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்