19 லட்சம் யூனிட் ரத்தம் பற்றாக்குறை... 4 லட்சம் உயிர்களை இழந்துவிட்டோம்! #WorldBloodDonorDay #StopMithani | Because of Lack of blood, India lost four lakh people - World Blood Donor Day awareness

வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (14/06/2019)

கடைசி தொடர்பு:17:02 (14/06/2019)

19 லட்சம் யூனிட் ரத்தம் பற்றாக்குறை... 4 லட்சம் உயிர்களை இழந்துவிட்டோம்! #WorldBloodDonorDay #StopMithani

ஜூன் 14. ரத்த வகைகளைக் கண்டறிந்த கார்ல் லாண்ட்ஸ்டீனரின் பிறந்த நாளான இன்று, ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை, அனைவருக்கும் உணர்த்தும் வகையில், உலக ரத்ததான தினமாகக் கொண்டாடப்படுகிறது.

19 லட்சம் யூனிட் ரத்தம் பற்றாக்குறை... 4 லட்சம் உயிர்களை இழந்துவிட்டோம்! #WorldBloodDonorDay #StopMithani

1971 ம் ஆண்டு... கிழக்கு பாகிஸ்தான், பங்களாதேஷாக மாறுவதற்குமுன்பு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான வீரர்கள் இறந்து மடிய, பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அந்த வீரர்களுக்கு அப்போதைய தேவை ரத்தம். ரத்ததானம் வழங்க முன்வருமாறு `ஆகாசவாணி' என்ற ஆல் இந்தியா ரேடியோ பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது. அதைக்கேட்டு தனது 20 வயதில், முதன்முதலாக ரத்ததானம் வழங்கினார் ஜோதிந்திர சி மித்தானி. 

ரத்தம்

மும்பையின் மிரா நகரில் வசிக்கும் மித்தானிக்குத் தற்போது வயது 65. 

"அந்த நாளை என்னால் மறக்க முடியாது. `சார்.. நீங்க ஏ பாசிட்டிவ்தானே..?' என்றபடி, எனது வீட்டுக் கதவைத் தட்டிய அந்த மனிதரின் கண்களில் இருந்த பரிதவிப்பு, என்னை உடனடியாக அவரது தாய்க்கு ரத்ததானம் செய்யத் தூண்டியது".

"இன்னும் சில மணிநேரம் தாமதித்திருந்தால், உங்களது தாயை நீங்கள் இழந்திருக்கக்கூடும்..." என்ற மருத்துவரின் வரிகள், மித்தானி என்ற மகனை ஊக்கப்படுத்தியது. ஆகவே, அன்று முதல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என இன்றுவரை தொடர்ந்து ரத்ததானம் செய்கிறார் மித்தானி.

``கோயில்களைக் காட்டிலும் மனமார்ந்த பிரார்த்தனைகள் ஒலிப்பது மருத்துவமனைகளில் மட்டுமே. தான் மிகவும் நேசிக்கும் ஒருவர், விபத்தின் காரணமாகவோ அல்லது அறுவை சிகிச்சைக்காகவோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர் உயிர் பிழைப்பதற்காக கண்களில் நீருடன், மனதில் பிரார்த்தனையுடன், பதைபதைப்பாக ரத்தத்துக்காக அலையும் சூழல் பரிதாபத்துக்குரியது. அதுமாதிரியான சூழலில் தயக்கமில்லாமல் ரத்ததானம் செய்யுங்கள்" என்கிறார் மித்தானி. கடந்த 40 ஆண்டுகளில், 151 தடவை ரத்ததானம் செய்து, மிகப்பெரும் சாதனை படைத்துள்ளார் இவர்.

ரத்த தானம்

2008-ம் ஆண்டு மும்பைத் தாக்குதலின்போது காயமடைந்த 700-க்கும் மேற்பட்டோருக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ததோடு, ஓர் உயிருக்குத் தேவைப்பட்ட 'ஏ பாசிட்டிவ்' ரத்தத்தையும் அளித்தார் மித்தானி.

``இத்தனை வருடங்களுக்குப் பிறகும், ரத்தம் எடுப்பதற்காக எனது கைகளில் ஊசி செலுத்தும்போது, மனதில் ஒரு அமைதியும், திருப்தியும் நிறைந்து நிற்கிறது...' என்று கூறும் மித்தானியை கௌரவிக்கும்விதமாக, சென்ற ஆண்டு, `#StopMithani' என்ற பிரசாரத்தை, அனைத்திந்திய ரத்த வங்கிகளும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் மேற்கொண்டன. அப்போது, `இந்தியா விழித்துக் கொண்டால் நான் நிறுத்திக் கொள்கிறேன்...' என்று பதிலளித்தார் மித்தானி.

மித்தானி கூறியதைப்போல, இந்தியா... அதாவது நாம் அனைவரும் விழித்துக்கொள்ளவேண்டும் என்றால் நம் ஒவ்வொருவரிடமும் மாற்றம் நிகழவேண்டும். அதற்கு முன், ரத்ததானம் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். 

நாம் அனைவரும் நன்கு அறிந்த நமது ரத்த வகைகளான ஏ, பி, ஏபி, ஓ மற்றும் அவற்றின் துணைப்பிரிவுகளான, `ஆர்ஹெச் பாசிட்டிவ்' அல்லது நெகட்டிவ் ஆகியவையே ரத்ததானத்துக்கு அடிப்படையாகும். மனித உடலில் சராசரியாக 5 முதல் 5.5 லிட்டர் வரை ஓடிக்கொண்டிருக்கும் ரத்தத்தில், திடப்பொருள்களின் அளவு 40 சதவிகிதம்; நீர்மப்பொருள்களின் அளவு 60 சதவிகிதம். இதில் திடப்பொருள்களான வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், தட்டணுக்கள் ஆகிய மூன்றும் முறையே நோய் எதிர்ப்பு ஆற்றல், ஆக்சிஜன் மற்றும் உயிர்ச்சத்துகளை அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு சேர்ப்பது என மனிதன் உயிர்வாழ்வதற்கான அத்தியாவசியப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்கின்றன.

ரத்த தானம்

மனித உயிர்களைக் காப்பதற்காக, அதிலும் முக்கியமாக விபத்து, பேரிடர் காலங்கள், மகப்பேறு, அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் மற்றும் கீமோதெரபி, டெங்கு காய்ச்சல், ரத்த உற்பத்தி அல்லது ரத்த உறைவு குறைபாடுகள் போன்ற எந்தக் காரணத்துக்காகவும் ரத்தம் என்பது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம்.

ஒரு யூனிட் ரத்தம் என்பது 350 மில்லி. மனித உடலில் சராசரியாக ஐந்து லிட்டர் (15 யூனிட்கள்) ரத்தம் உள்ள நிலையில், ரத்ததானத்தின்போது வெறும் 350 மில்லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒவ்வோர் இரண்டு விநாடிக்கு ஒருமுறை யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. 

நமது தேசத்தின் ஓர் ஆண்டுக்கான மொத்த ரத்தத் தேவை, சுமார் நான்கு கோடி யூனிட்டுகள். கிடைக்கப் பெறுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே. சென்றாண்டு மட்டும் 19 லட்சம் யூனிட்டுகள், அதாவது 60 டேங்கர் அளவு ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையைத் தவிர்த்திருந்தால், நான்கு லட்சம் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கக்கூடும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உட்பட 16 மாநிலங்களில் ரத்தப் பற்றாக்குறை அதிகளவில் நிலவி வருகிறது என்கிறது.

உலக ரத்ததான தினம்

இன்று ஜூன் 14. ரத்த வகைகளைக் கண்டறிந்த கார்ல் லாண்ட்ஸ்டீனரின் பிறந்த நாளான இன்று, ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை, அனைவருக்கும் உணர்த்தும்வகையில், உலக ரத்ததான தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு நாளுக்கும் முப்பத்தெட்டாயிரத்துக்கும் மேலான ரத்தக் கொடையாளிகள் தேவை. எனவே, தேவைப்படும்போது மட்டும் ரத்ததானம் அளிக்காமல், இயன்றபோதெல்லாம் ரத்ததானம் செய்யவேண்டும். மித்தானியைப் போன்ற தன்னார்வலர்களை ரத்ததானம் செய்ய ஊக்கப்படுத்துவதே, இதற்கான முதற்கண் தீர்வாக இருக்கும். எனவே நல்ல உடல்நலத்துடன், எந்தவித நோய்த்தொற்றும் இல்லாத, 50 கிலோவுக்கு மேல் எடையுள்ள, ஹீமோகுளோபின் அளவு 12 கிராமுக்கும் குறையாமல், 16 கிராமுக்கு அதிகரிக்காமல் உள்ள, 18 - 65 வயதுக்கு உட்பட்ட  அனைவரும் ரத்ததானம் செய்யலாம்.

`இயன்றவரை ரத்ததானம் தர முன்வாருங்கள். உங்களது ஒவ்வொரு துளியும், மற்றவர்களுக்கு உயிர்த்துளி...' என்பதே மித்தானி போன்றவர்கள் இளைய தலைமுறையினருக்கு விடுக்கும் கோரிக்கையும், வேண்டுகோளுமாகும்.

நம்மில் 75 சதவிகிதம் பேர், வருடத்தில் இரண்டு முறை ரத்ததானம் செய்தால்போதும். ஏனென்றால் இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்றாக எதுவும் கண்டறியப்படவில்லை. மனித உயிர்களைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதால், தானங்களில் சிறந்தது ரத்த தானம்..!

Safe blood for all..

பாதுகாப்பான ரத்தம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்றால் அது நம் கைகளில் மட்டுமே.

Our blood matters..!
ஜூன்_14


டிரெண்டிங் @ விகடன்