உலக சர்க்கரை நோய் தினம்: மருத்துவர்களின் சில விளக்கங்கள்!

வம்பர் 14 இன்று உலக சர்க்கரை நோய் தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சர்க்கரை நோய் வருவதற்கான காரணங்கள். அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் மருத்துவர் சம்பத்குமார் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் மருத்துவர் மகேஷ்பாபு ஆகியோர் அளித்த விளக்கங்கள்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டாலே, அவருக்கு கூடவே இதய நோயும் வந்து விடும். அதனால், இத்தகைய நோயாளிகள் உடனடியாக இதயம் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர்களை அனுக வேண்டும். அவர்களின் ஆலோசனை மிகவும் அவசியம். மருத்துவர்களின் ஆலோசனை மூலம் இதய நோய்க்கான மாத்திரைகள் எடுத்து கொண்டால், நோயை முற்றிலும் குணபடுத்திவிட முடியும். சர்க்கரை நோயாளிகளுக்கு இதய ரத்த குழாய்களில் 2 அல்லது 3 இடங்களில் அடைப்பு இருந்தால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதே சிறந்தது.

ஏனெனில், சர்க்கரை நோயின் காரணமாக இதயத்தின் பல்வேறு இடங்களில் அடைப்புகள் இருக்கலாம். அல்லது மீண்டும் அடைப்புகள் வரலாம். 6 மாதங்களுக்கு ஒருமுறை ட்ரட்மில் மற்றும் எக்கோ பரிசோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும். ட்ரட்மில் சோதனை மேற்கொண்டால் இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை தெரிந்து கொள்ள முடியும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் இதயநோய் பிரச்னைகள் வராது. ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரப்பதால் இதய நோய் வாய்ப்புகள் குறைவு. அதே சூழலில் மெனோபாஸ் நிலையில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். எனவே இவர்களும் இதய நோய் நிபுணர்களின் ஆலோசனையை பெற வேண்டும். அத்துடன் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்  பரிசோதனை செய்து கொள்ளலாம் சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், புகைபிடித்தல் போன்றவை இதய நோய்க்கு முக்கிய காரணங்களாக உள்ளது.

ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் ரசாயண பொருட்கள் உள்ளன. அதில் 200 பொருட்கள் இதயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது. தொடர்ந்து புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை 2 ஆண்டுகள் நிறுத்திவிட்டால் புகைப்பழக்கம் இல்லாதவர்களின் உடல்நிலைக்கு மாறிவிடுவார்கள்.

தினமும் நாம் உண்ணும் உணவில் உப்பு, இனிப்பு, கொழுப்பு உள்ளிட்டவைகளை குறிப்பிட்ட அளவு பயன்படுத்த வேண்டும். இரவு நேர கண் விழிப்பை தவிர்பதன் மூலம் பரிபூரண ஆரோக்கியத்தை பெற முடியும். பழங்கள், கீரைகள், காய்கறிகள் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்து கொள்வதுடன் நாள்தோறும் ஏதாவது ஒரு வகை பழத்தினை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

சமையலில் நார்ப்பொருள் மிகுந்த காய்கறிகளை தேர்ந்தெடுத்து சமைப்பது சால சிறந்தது. ரொட்டி, பிரட், புரோட்டா, சப்பாத்தி ஆகியவற்றை உண்ணும் போது வெண்ணெய், நெய், டால்டா போன்ற கொழுப்பு பொருட்களை குறைந்த அளவோ அல்லது முற்றிலும் தவிர்த்தோ பயன்படுத்த வேண்டும். தோல் உறித்த கோழி மற்றும் மீன் போன்ற கொழுப்பற்ற இறைச்சிகளை தெரிந்தெடுத்து எண்ணையில் பொறித்து எடுக்காமல் நன்றாக வேகவைத்து உண்ணலாம். அதேபோல், முட்டையின் வெள்ளை கருவை மட்டும் உண்பது இதய நோயினை தடுக்கும்.

நல்ல உணவு பழக்கங்களுடன் உடற்பயிற்சியும் நம் உடலை சர்க்கரை இல்லா நிலைக்கு கொண்டு செல்லும். அமெரிக்கன் ஹார்ட் ஃபவுன்டேஷன் அறிவுரைபடி தினமும் 30 நிமிடம் வேர்க்கும் நிலையில் நடை பயிற்சி மேற்கொள்ளவதன் மூலமும் சர்க்கரை நோயினை கட்டுபபடுத்த முடியும். ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள நோயாளிகள் ஏரோபிக் உடற்பயிற்சி, லேசர்தெரபி, ஸ்டெம்செல் தெரபி மூலம் தற்காலிக நிவாரணங்களை பெறலாம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி. அத்தகைய செல்வத்தை நாம் அனைவரும் பெற உணவிலும் புகையிலும் கட்டுபாடுடன் இருப்பதே நல்வழி.

இரா.மோகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!