பனி விழும் தேகம் பத்திரமா?

ருமத்துக்கு ஆகாத பனிக்காலம் இது. சருமப் பரமரிப்புக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றிக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த சரும சிறப்பு மருத்துவர் தனலட்சுமி.

தேங்காய் எண்ணெய் சிறந்த நிவாரணி!

சரும வறட்சியைத் தவிர்க்க... குளிக்கும் முன்னும், குளித்த பின்னும் உடல், முகம், உதடு என சருமம் முழுவதும் தேங்காய் எண்ணெய் அல்லது லிக்விட் பாராஃபின் தடவலாம். தேங்காய் எண்ணெய், இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவது.

ஆனால், லிக்விட் பாராஃபின் என்பது பெட்ரோலியத்தில் இருந்து கிடைக்கக் கூடியது, அதனால், எண்ணெய் சருமம் உள்ளவர்கள் உடல் முழுவதும் இதைத் தடவாமல், வறட்சி கண்ட இடங்களில் மட்டும் தடவலாம். ஏனெனில், அவர்கள் சருமத்தில் இருக்கக் கூடிய எண்ணெய் பசையுடன் இதுவும் சேர்ந்து பருக்களை வரவைக்கக் கூடும்.

மிக வறண்ட சருமம் உள்ளவர்கள், சோப் பயன்படுத்தாமல் குளிக்கலாம். சருமத்தில் வறட்சியை உண்டாக்கும் பனி படாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.

இதேபோல்தான் கேசமும். முடியையும், தலையையும் வறண்டு போக விடாமல் எண்ணெய் தடவ வேண்டும். தலையிலும் பனி படாமல் துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.

வாசனை திரவியம்... வேண்டவே வேண்டாம்!

சோப், ஷாம்பூ, கண்டிஷனர் என நாம் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருட்கள், அதிக வாசனை திரவியம் சேர்க்காமல் மைல்டாக இருக்க வேண்டும். காரணம், வாசனை திரவியத்துக்கு சூரிய ஒளியை இழுக்கும் தன்மை உண்டு. எனவே, ‘ம்ம்... சூப்பர் வாசனை!’ என மயங்காதீர்கள் இனி.

அதேபோல, நம் சருமத்தின் pH5.5. நாம் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருட்களும் pH  மதிப்பு  5.5 உள்ளதாக இருக்க வேண்டும். இந்த pH அளவு 5.5 ஐ விட அதிகமாக இருந்தால், காரத்தின் அளவு அதிகம் இருக்கும். இது வறட்சியை உண்டாக்கும். pH அளவு குறைவாக இருந்தாலும் பிரச்னையே. இதனால், அமிலத்தின் அளவு அதிகமாகி சருமத்தில் எரிச்சல் உண்டாகும். இது செல்களை பாதிக்கும். எனவே, தேவையான அளவை விட pH அளவு வேறுபட்டிருக்கும் காஸ்மெடிக் பொருட்களை வாங்க வேண்டாம்.

சூரிய ஒளி... கொஞ்சம் போதும்!

பலரும் இந்த பனி கிளைமேட்டில் வெயிலுக்காக ஏங்கியிருப்பார்கள். சிலர், பனிக்கு இதமாக வெயிலைத் தேடிப் போவார்கள். சூரிய ஒளியின் மூலம் வைட்டமின் டி கிடைக்கிறதுதான். அதற்காக தினமும் ஒரு ஐந்து நிமிடம் வெயிலில் நின்றாலே போதும், உடலுக்குத் தேவையான வைட்டமினை நமது சருமம் உற்பத்தி செய்துகொள்ளும். அதற்கு மேல் நின்றால், சூரியக் கதிர்கள் நம் சருமத்தை கருக்கவோ, சரும செல்களை சிதைக்கவோ செய்யும். எனவே, காலை 9 மணி முதல் சாயங்காலம் 4 மணி வரையிலான வெயிலைத் தவிர்க்க வேண்டும்.

உணவால் சரிசெய்யலாம் வறட்சியை!


சரும வறட்சி கண்டவர்கள் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். மேலும், இயற்கையான  பீட்டா கரோட்டின் உள்ள மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளும், சுண்டலும் சருமத்துக்கு பொலிவு தரும்!’’

-கே. அபிநயா

( மாணவப் பத்திரிக்கையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!