வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (01/12/2014)

கடைசி தொடர்பு:11:54 (01/12/2014)

டிசம்பர் - 1 உலக எய்ட்ஸ் தினம் - எச்சரிக்கை

2015-ம் ஆண்டுக்குள்  ஹெச்.ஐ.வி தொற்றை  அறவே அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.  எய்ட்ஸ் நோய் தாக்கியவர்கள் அனைவருக்கும் ஏ.ஆர்.டி தெரப்பி சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக அளவில் 3.5 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.17 கோடி பேர் மட்டுமே எய்ட்ஸ் நோயைக் கட்டுக்குள் வைக்கும் ‘ஏ.ஆர்.டி தெரப்பி’ சிகிச்சையை எடுக்கின்றனர். மற்றவர்களின் நிலை கவலைக்கிடம்தான்.ஹெச்.ஐ.வி தாக்கிய ஒருவரின் உடலில் ஒரு துளி ரத்தத்தில் 250-க்கும் கீழ் வெள்ளை அணுக்கள் இருந்தால், அவர் கண்டிப்பாக   ஏ.ஆர்.டி தெரப்பியை எடுக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை, இந்த ஆன்ட்டி ரெட்ரோவைரல் மருந்தை 12 மணி நேர இடைவேளையில் எடுக்க வேண்டும். ஒரு நாள்கூட மருந்தை நிறுத்தக் கூடாது. எய்ட்ஸ் நோயைக் கட்டுக்குள் வைப்பதற்கு மட்டுமே மருந்துகள் இருக்கின்றன. குணப்படுத்த முடியாது.

பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமாகவே 90 சதவிகிதத்தினரை ஹெச்.ஐ.வி வைரஸ் தாக்குகிறது. எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களை தொடுவதாலோ அவர்களது எச்சில், வியர்வை மூலமாகவோ மற்றொருவருக்குப் பரவாது. எய்ட்ஸ் நோயாளியின் ரத்தத்தை செலுத்தும்போதும், ஊசிமருந்து செலுத்துவதன் மூலமும் எய்ட்ஸ் பரவும்.

ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா, இல்லையா என்பதை அறிய  `எலிசா' பரிசோதனை செய்ய வேண்டும். எய்ட்ஸ் பரிசோதனை முடிவை அறிந்துகொள்ள நாட்கணக்கில் காத்திருக்கத் தேவை இல்லை. 15 நிமிடங்களில் முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.

திருமணம் செய்துகொள்ளும் ஆண், பெண் இருவரும் கட்டாயம் ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கருவுற்ற பெண்களுக்கு, மருத்துவமனையிலேயே எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. கருவுற்ற பெண்களுக்கு எய்ட்ஸ் இருந்தால் குழந்தைக்கு அந்த நோய் பரவாமல் தடுத்துவிட முடியும். 

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் வசிக்கும் மூன்றாவது நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 24 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 1.5 லட்சம் பேர் உள்ளனர்.

எய்ட்ஸ் நோய் வந்தவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். உடலில் வரும் சிறு ரத்தக் காயம்கூட மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும். உடலில் வரும் புண்கள் விரைவில் ஆறாது. காலணிகள் அணியாமல் வெளியே செல்லக் கூடாது.

- பு.விவேக் ஆனந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்