தேங்காய்ப்பால்... தேவாமிர்தம்!

வைட்டமின் சி, வைட்டமின் இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ்... இவை எல்லாம் தேங்காய்ப்பாலில் அடங்கியுள்ள சத்துகள். உடலின் உள் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் கேச ஆரோக்கியத்திற்கும் உறுதி அளிக்கும் அற்புத பானம் இது. அதன் பலன்கள் இங்கே..!

உடலுக்கு..

* தேங்காய்ப்பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது.
* மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய்ப்பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.
* ஆன்டி ஆக்ஸிடன்ட்டான செலீனியம் உள்ளதால், தேங்காய்ப்பால் ஆர்த்தரைட்டிஸின் வீரியத்தைக் குறைக்கும்.
* பேக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்ப்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும்  பேக்டீரியா தொற்று போன்ற உடல் நோய் வராமல் தவிர்க்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கேசத்திற்கு..

* வறண்ட, உடைந்த, நுனி பிளந்த கேசத்திற்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற, தேங்காய்ப்பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மஸாஜ் கொடுத்து, 20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.

* தேங்காய்ப்பால், ஒரு சிறந்த கண்டிஷனர். பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சரிபாதி அளவு கலந்து ‘ஹெட் பாத்’ எடுக்க, கூந்தல் மினுங்கும்.

சருமத்திற்கு..

* வறண்ட, போஷாக்கு குறைந்த சருமம் உள்ளவர்கள் தேங்காய்ப்பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.

* வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத் தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க, காப்பர் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய்ப்பாலை சருமத்தில் தொடர்ந்து அப்ளை செய்து வர, இளமைப் பொலிவு கிடைக்கும்.

* சரும எரிச்சல், சோரியாசிஸ், பேக்டீரியா தொற்று போன்ற பிரச்னைகளுக்கு, தேய்காய்ப்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாகத் தடவ, நிவாரணம் கிடைக்கும்.

மொத்தத்தில், தேங்காய்ப்பாலை தேவாமிர்தம் என்றாலும் தகும்!

 - இனியா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!