ஆரோக்கியத்திற்கு அழைப்பு விடுக்கும் தென்னை கைவினைப் பொருட்கள்!

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இன்றைய வாழ்வில் தவிர்க்க முடியாததாகி விட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் நாம் உட்கொள்ளும் உணவுகளில் இருந்து அனைத்திலும் அதன் நச்சு தன்மையை பரவவிட்டு நம்மை அறியாமல் நம் உடல் நலத்தை பாதிப்படைய செய்து கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து நாம் விடுபட்டு நம்முடைய பாரம்பரிய பொருட்களை  பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இயற்கையின் கொடையான தென்னை மரத்தில் இருந்து உருவாகும் தேங்காய் சிரட்டை (ஓடு) கொண்டு பல பயன்தரக் கூடிய, நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட கலைநயமிக்க கைவினைப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த அந்த கைவினைக் கலைஞர் ஜெயகுருஸ்.

தேங்காய் சிரட்டை(ஓடு) கொண்டு பெண்கள் அணியும் ஆபரண பொருட்கள், சமையல் பொருட்கள், கீ செயின், டாலர், அழகு சாதனப் பொருட்கள் என வித விதமாக இவர் தயாரிக்கும் தென்னை கைவினைப் பொருட்கள் அழகோ அழகு.

ஜெய குருஸ்ஸை சந்தித்தோம். “ எனது தாத்தா சமாதான வில்லவராயர், எனது தந்தை செபஸ்தியான், தற்போது நான் என மூன்று தலைமுறையாக கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். நாங்கள் தயாரித்த பொருட்கள் இன்றும் பல அரண்மனைகளிலும், வெளிநாடுகளிலும், மக்களின் இல்லங்களையும் அலங்கரித்துக்கொண்டிருப்பது எங்கள் நேர்த்தியை வெளிப்படுத்தும்.

எனது தாத்தா ஆமை ஓட்டில் கைவினைப் பொருட்கள் செய்வதில் புகழ்பெற்றிருந்தார். ஒரு கட்டத்தில் அரசு ஆமை ஓட்டில் தயாரிக்கும் பொருட்களுக்கு தடை விதித்ததனால் அதற்கு மாற்று வழியாக ஆயில் பெயிண்டிங், எம்ப்ராய்டரி வேலைகள், கடல் சிப்பிகள் கொண்டு  பொருட்களை தயாரித்தனர். எனது தந்தையும் அதை தொடர்ந்தார்.

எனக்கும் சிறு வயதில் இருந்தே இதன் மீது இயல்பான ஆர்வம் இருந்தது. இருந்தும் என் தந்தை இந்த தொழிலை முறையாகவும் படித்து அறிய வேண்டும் எனச் சொன்னதால் பெங்களூரில் உள்ள அகில இந்திய கைத்தொழில் உற்பத்தி மன்ற விரிவாக்க மையத்தில் சேர்ந்து படித்தேன். எனது தாத்தா ஆமை ஓட்டிலும், என் தந்தை ஆயில் பெய்ண்டிங்கிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியதுபோல் நானும் சொல்லிக்கொள்ளும்படியாக எதாவது செய்யவேண்டும் என முடிவெடுத்து செய்ததுதான் தேங்காய் சிரட்டை கொண்டு கைவினைப்பொருட்கள் செய்வது.

பொதுவாக தேங்காயில் தேங்காயை பயன்படுத்திவிட்டு சிரட்டையை நாம் வெளியே வீசி விடுகின்றோம். இப்படி பயனற்று போகும்  சிரட்டையை மீண்டும் பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் தயாரிப்போம், நம் முன்னோர்கள் அதை தானே பயன்படுத்தினார்கள் என்ற யோசனை தோன்றியது என்னுள். நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து வெளியில் பயன்படுத்தும் பொருட்கள் வரை எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் கலந்துள்ளதே என்ற வருத்தமும் இருந்தது எனக்கு. பிளாஸ்டிக்கை ஒழித்து நமது பண்டைய கால பயன்பாட்டு  பொருளான தேங்காய் சிரட்டை கொண்டு புதிய முறையில் காலத்துக்கேற்ப கைவினைப்பொருட்கள் தயாரிப்போம் என்று முடிவு செய்தேன்.

அதன்படி தற்போது தேங்காய் சிரட்டை கொண்டு நகைப்பெட்டி, பெண்கள் அணியும் கம்மல், செயின், நெக்லஸ், மோதிரம்,  சமையல் பொருட்களான டீ கப், சூப்கப், கரண்டி, குடுவை, என பலவும், அதே சமையல் பொருட்கள் வெளிநாட்டினர்  பயன்படுத்தும் டிசைன் களிலும்,  ஹன்ட்பேக், பரிசு பொருட்கள், கைத்தடி, பேனா, கைக்கடிகாரம், என 160க்கும் மேற்பட்ட பொருட்களை இயற்கையான முறையில் இயற்கை பொருளான தேங்காய் சிரட்டை கொண்டே தயாரித்துள்ளேன். இதற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

10 ரூபாய்க்கு நான் வாங்கும் தேங்காயை இரண்டு ரூபாய் குறைத்து 8 ரூபாய்க்கு மக்களிடத்தில் விற்கிறேன். தேங்காயை நான் கீறல் இன்றி சைசாக நடுவில் வெட்டி இரண்டு முறியாக கொடுப்பேன். கொடுக்கும்போது அவர்களிடம் வைக்கும் ஒரே கோரிக்கை, தேங்காயை பயன்படுத்திவிட்டு சிரட்டையை திரும்ப கொடுத்து விடுங்கள் என்பதுதான்.

கண் பகுதி திறமானதாக உள்ள சிரட்டையை நகைகள் பண்ணுவதற்கு பயன்படுத்துவேன். மற்றொரு பகுதியை டீ கப், கீ செயின் போன்ற மற்ற பொருட்களை செய்வொம்.

உள்நாட்டு தென்னை சிரட்டைகள் மெல்லியதாக இருக்கும். அவை பொருட்கள் செய்வதற்கு பயன்படாது. பொதுவாக கடற்கரை  பகுதியை ஒட்டியுள்ள தென்னை சிரட்டைகளே தரமானதாக இருக்கும்.  அது தான் கைவினைப் பொருட்கள் தயாரிக்க தகுந்த சிரட்டைகளாகும். தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் உள்ள தென்னை சிரட்டைகளே சிறப்பானது. ஏனெனில் இங்குள்ள  சிரட்டைகளில் எண்ணெய் பசை தன்மை அதிகம் இருக்கும். அதுதான் தயாரிக்கும் அந்த பொருட்களுக்கு பளபளப்பை தருகின்றது.

இத்தொழிலில் எனது மனைவியும் எனக்கு ஆதரவாக உள்ளார். எங்கள் கலைக் கூடத்தில் ஆண்கள், பெண்கள்  என 10 பேர் பணிபுரிகின்றனர். நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட நகைப்பெட்டி, கம்மல், நெக்லஸ், செயின், மோதிரம் போன்றவற்றை பெண்கள்  செய்கின்றனர்.  ஆண்கள் சிரட்டையை சைசாக வெட்டுவது, பாலிஷ் போடுவது ஆகியவற்றை செய்வர். எங்களிடம் 30 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையிலான 160க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றோம்.

இந்திய அளவில் கைவினைப்பொருட்களில் மிகவும் பாரம்பரியமானது, இந்த தேங்காய் சிரட்டை கொண்டு செய்யப்படும் தேங்காய் ஓடு கைவினைப் பொருட்களாகும். சமையல் வேலைகளுக்கு இந்த கைவினைப் பொருட்களை பயன்படுத்துவதால், உணவின் விஷத்தன்மை இயற்கையாகவே குறைகின்றது. ஆரோக்கியமான உணவு முறைக்கு வழிவகுக்கும், 80 வருடங்கள் ஆனாலும் இந்த பொருட்கள் அழியாது, இது நம்முடைய பண்டையகாலத்தில் நம் முன்னோர்கள்  பயன்படுத்திய பாரம்பரிய பொருட்களாகும். எளிதில் உடையாது திறமானதாக இருக்கும், இப்பொருட்கள் சூடு ஏறாமல் குளிர்ச்சியான தன்மை கொண்டது. முக்கியமாக பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து நாம் விடுபடலாம்.

பிளாஸ்டிக் பொருட்களை விட இதன் விலை மிகக் குறைவு, நமக்கு செலவும் மிச்சம், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதது. சமையல்கள் மற்றும் அணிகலன்களுக்கு இதை பயன்படுத்தும் பொழுது அது நம் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானதாக உள்ளது, கழிவுகள் என்று நாம் சிரட்டையை ஒதுக்காமல் இதன் மூலம் அது மீண்டும் நம் பயன்பாட்டுக்கு உதவுகிறது, இப்பொருட்களின் அதிகளவு ஏற்றுமதி மூலம் நம் நாட்டிற்கும், கைவினைக் கலைஞர்களுக்கும் வருமானத்தை ஈட்டி தருகின்றது.

நமது நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு  ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் முதலிடத்தில் இருப்பது மீன். இரண்டவது இந்த கைவினைப்பொருட்கள் ஆகும். வெளிநாட்டு சந்தையில் நம் இந்திய கைவினைபொருட்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது. ஜெர்மனி, அமெரிக்கா, பின்லாந்து போன்ற நாடுகளுக்கு எனது கைவினைப்பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றேன்.  இத்தொழிலில் தரம் என்பது  நூறு சதவீதம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது மக்களிடத்தில் நல்ல விதத்தில் சென்றடையும்.  சுயத்தொழில் மற்றும்  வேலைவாய்ப்புகளில் கைவினைத் தொழில்களுக்கு நல்ல பல வேலை வாய்ப்புகளும் உள்ளன” என்றார்.

ஜெயகுரூசுக்கு கடந்த 1999- 2000 க்கான தமிழ்நாடு அரசின் “சிறந்த கைவினைத்தொழில் விருதும், அரியானா மாநில அரசின் “கலாஸ்ரீ”  விருது, தமிழக அரசின்  தமிழ் மற்றும் கலைப் பண்பாட்டுத்துறையின் இந்த ஆண்டுக்கான மூத்த கலைஞர் “கலை செம்மல்” விருது ஆகியவை தரப்பட்டுள்ளன.

பெருமையும் புளங்காகிதத்துடனும் பேசும் ஜெயகுரூஸ், தமக்கு வருத்தம் தரும் விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“அன்றைய  பிரதமர் ராஜீவ் காந்தி கைவினைக் கலைஞர்களுக்கு என்று  பல சலுகைகள் வழங்கினார். அது  இத்தொழிலுக்கு வளர்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுத்தது. ஆனால் அதற்கு பிறகு வந்த அரசுகள் சலுகைகள் பலவற்றை நிறுத்தியதோடு இத்தொழிலின் மீதான அக்கறையையும் குறைத்துக்கொண்டனர். இதனால் இன்று பலர் கைவினைத்தொழிலை விட்டுவிட்டு வேறுத் தொழில்களுக்கு சென்றுவிட்டனர்.

மத்திய அரசு கண்காட்சிகளில் ஸ்டால்களை இலவசமாக தந்து அதில் வரும் லாபத்தை நாங்களே எடுத்து கொள்ள வழி செய்கின்றது. ஆனால் மாநில அரசு லாபத்தில் 35 சதவீதத்தை கட்டணமாக பெறுகிறது. இதனால் எங்களுக்கு முழு லாபம் கிடைப்பது இல்லை. மத்திய அரசும், மாநில அரசும் எங்களை  போன்ற கைவினைக்கலைஞர்களுக்கு சலுகைகள் பல வழங்கி எங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.  இத்தொழில் மேலும் அழிந்துவிடாது அரசு பாதுகாக்க வேண்டும்” என்றார்.

ஜெயகுருசின் தாயார் ராஜாத்தியும் சிறந்த கைவினைக்கலைஞர் மற்றும் ஓவியரும் ஆவார். மனைவி ஜான்சி குருஸ், இத்தம்பதிக்கு ஜோ யாஷிமா, ஜோ ராஜி  என இரு மகள்கள் உள்ளனர்.

சங்கக்கால பயன்பாட்டு பொருளான தேங்காய் சிரட்டையை கொண்டு இயற்கையோடும், நமது காலமாற்றத்துக்கு ஏற்ப புதுப்பொலிவுடனும், தயாரிக்கப்படும் இத்தகைய கைவினைப் பொருட்கள் வரவேற்கத்தக்கது. பிளாஸ்டிக்கை ஒழித்து நாம் இயற்கையோடு இணைந்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்னும் சமூக  அக்கறையோடு இக்கைவினைத் தொழிலை செய்து அசத்தும் ஜெயகுருஸ் அவர்களுக்கு நாம் ஒரு சபாஷ் போடலாம்…!!

- ரா.ராம்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!