உடலுக்கு ஆரோக்கியம்... உள்ளத்துக்கு அமைதி தரும் சூப்பர் பயிற்சி சூரிய நமஸ்காரம்! | Gives you peace of mind... in a healthy body Super practice the sun salutation!

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (20/06/2015)

கடைசி தொடர்பு:15:29 (23/06/2015)

உடலுக்கு ஆரோக்கியம்... உள்ளத்துக்கு அமைதி தரும் சூப்பர் பயிற்சி சூரிய நமஸ்காரம்!

மூளையில் உதிக்கும் எந்த எண்ணங்களுமே இதயத்தோடுதான் சம்பந்தப்படுத்திப் பேசப்படுகின்றன. அன்பு, காதல், பாசம், வெறுப்பு, சோகம் என எந்த உணர்வையும் மனசோடுதான் தொடர்புபடுத்துகிறோம். ஆனால், இதயம் என்பது சாதாரணமான ஓர் இயந்திரம். ஆனால், ஏன் மூளையின் அனைத்து எண்ணங்களும் இதயத்தோடு தொடர்புபடுத்தப்படுகின்றன?

ஒரு குழந்தை வயிற்றில் உருவாகும்போது, முதன்முதலில் உருவாகும் உறுப்பு இதயம்தான். நான்கு நுண்ணறைகள் உருவாகி, இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது. அதன் பிறகுதான், அனைத்து உறுப்புகளும் உருவாகின்றன. ஆதிமுதலில் உருவாகும் இதயத்தில்தான் நாம் அனைத்தையும் கொண்டுபோய் வைக்கிறோம்.

அந்த இதயத்தை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும் முக்கியமான யோகப் பயிற்சி, சூரிய நமஸ்காரம். உலகில் யோகக்கலை எந்த அளவுக்கு முக்கியமான இடம் வகிக்கிறதோ, அந்தளவுக்கு யாகக் கலைகளுக்குள் முக்கியமான இடம் வகிப்பது சூரிய நமஸ்காரம். யோகக் கலையில் மொத்தம் 84 லட்சம் ஆசனங்கள் இருக்கின்றன. அவற்றுள் 12 ஆசனங்களைத் தேர்ந்தெடுத்து, பதஞ்சசலி முனிவர் வடிவமைத்துக் கொடுத்த அதி அற்புதமான பயிற்சிதான் சூரிய நமஸ்காரம்.

‘‘அப்படீன்னா என்ன...? சூரியனைப் பார்த்து ஒரு வணக்கம் சொல்றதா?’’ என்று யோகப் பயிற்சி பற்றி அறியாதவர்கள் நினைக்கலாம். நிச்சயமாக சூரியனை நாம் வணங்கத்தான் வேண்டும். உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும், பாரபட்சம் இல்லாமல் தனது ஒளியை வழங்கி உயிர்காக்கும் அந்த சூரியனை நன்றி செலுத்தும் விதத்தில் வணங்குவதில் தவறேதும் இல்லை.

நன்றி செலுத்தினாலும், இல்லையென்றாலும் சூரியன் தினமும் வந்துகொண்டுதான் இருக்கும். இந்தப் பயிற்சியில் நமது உடலுக்கான எக்கச்சக்க நன்மைகள் இருக்கின்றன. இதை மதத்தோடு சம்பந்தப்படுத்தாமல் அனைவருமே கற்றுக்கொள்வது நல்லது. என்னுடைய மாணவர்கள், நோயாளிகளில் அனைத்து மதத்தவரும் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த வேறுபாடும் இன்றி நான் யோகப் பயிற்சியைக் கற்றுத் தருகிறேன். எந்தவிதமான மந்திரங்களையும் போதிப்பது இல்லை. மதம், இனம், நாடு, மொழி வேறுபாடின்றி, உடல் ஆரோக்கியதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செய்யப்படுவதுதான் யோகாசனம். அதில் தலையானது, சூரிய நமஸ்காரம். 12 ஆசனங்களைத் தன்னுள் அடக்கியிருக்கும் ஒரு தொகுப்புதான் இது.

இதன் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டுதான், நமது தலைநகர் புதுடெல்லி விமான நிலையத்தில் சூரிய நமஸ்காரத்தின் 12 நிலைகளையும் சிலைகளாக வைக்கப்பட்டுள்ளன. அங்கே வரும் வெளிநாட்டவருக்கு, ‘‘யோகா எங்கள் சொத்து. அதை நீங்கள் எடுத்துச் சென்று ஆரோக்கியமாக இருங்க... நாங்களும் எங்கள் அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுத்து, ஆரோக்கியமாக இருப்போம்!’’ என்று சொல்லாமல் சொல்கின்றன அந்தச் சிலைகள்.

எப்படிச் செய்வது?

(டாக்டர் புவனேஸ்வரி ஒரு மாணவிக்குக் கற்பிக்கும் இதன் வீடியோ பதிவை, காணலாம்.)

* முதலில் நேராக நின்றுகொண்டு கைகள் இரண்டையும் மார்புக்குக் குறுக்கே கரங்களைக் கூப்பிக்கொள்ளவும். இதுதான் நமஸ்கார முத்திரை.

* பிறகு அப்படியே பின்னோக்கி வளையவும். இது, அஞ்சலி முத்திரை.

* பின், முன்னோக்கி வளைந்து, கீழ்நோக்கிக் குனிந்து முட்டியை மடக்காமல், இரண்டு கைகளாலும் இரண்டு பாதங்களையும் தொடவேண்டும். இது, பாதஹஸ்த ஆசனம்.

* வலது காலை மட்டும் முன்புறமாக வைத்து, முன்னோக்கிப் பார்க்க வேண்டும். இதன் பெயர், அஷ்வ சஞ்சலனம்.

* அடுத்து, இரு கால்களையும் பின்னே நீட்டி, மலை போல ஆங்கில ‘வி’ எழுத்து வடிவில் நிற்க வேண்டும். இது, மேரு ஆசனம்.

* பின்னர், உடலின் அத்தனை அங்கங்களும் பூமியில் படுவது போலப் படுக்கவேண்டும். இதன் பெயர், அஷ்டாங்க பூமி ஸ்பரிசம்.

* பிறகு, தலையை மட்டும் மேலே தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த நிலைக்குப் பெயர், புஜங்க ஆசனம்.

* இதற்கடுத்து, மேரு ஆசனம், அஷ்வ சஞ்சலனம், பாத ஹஸ்த ஆசனம் என்று பின்னோக்கி ஒவ்வொரு நிலையாகப் போய், இறுதியாக நமஸ்கார முத்திரை நிலையில் நின்று, கைகளைத் தொங்கப் போடவேண்டும்.

இதுதான் சூரிய நமஸ்காரத்தின் முழுமையான ஒரு சுற்று.

எப்போது செய்வது?

அதிகாலையில் அல்லது இளங்காலையில் எழுந்து செய்யவேண்டும். சூரியன் உதிக்கும்போது (5.30 மணி முதல் 6.30 மணிக்குள்) செய்வது மிகவும் நல்லது. சூர்யோதய நேரத்தில், கையைக் காலை முன்னும் பின்னும் வளைத்து, சூரியநமஸ்காரம் செய்தால் உடலின் அனைத்து அவயங்களும் புத்துணர்வு பெறும். மாலையில் சூரியன் மறையும் நேரத்திலும் இதைச் செய்யலாம்.

* வயிறு காலியாக இருக்கவேண்டும். எந்த உணவும் இருக்கக் கூடாது.

* வலது காலை முன்புறம் வைத்து, பின்புறம் வைப்பது, பிறகு இடது காலை அதே போல் செய்வது - இதை ஒரு முறை என்று வைத்துக்கொண்டால், இதே போல் 6 முறை செய்யலாம்.

* காலையில் 6 முறை, மாலையில் 6 முறை செய்தால், வேறு எந்த மருந்து, மாத்திரைகளோ, உடற்பயிற்சியோ தேவையே இல்லை.

பலன்கள்:

* அனைத்து ஆசனங்களின் பலன்களையும் ஒருங்கே தரக்கூடியது. மற்ற ஆசனங்களைச் செய்ய நேரம் இல்லை என்றாலும் கூட, இது ஒன்றைச் செய்தாலே போதுமானது.

* உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, அனைத்து அவயங்களுக்கும் புத்துணர்வு கொடுக்கும்.

* இதயம், கல்லீரல், குடல், வயிறு, மார்புப் பகுதி, தொண்டைப் பகுதி, கால்கள் - என அனைத்து உறுப்புகளுக்கும் நன்மை பயக்கிறது.

* எந்த உபகரணமும் இன்றி, எடையைக் குறைக்க மிகவும் உதவும் பயிற்சி.

* பள்ளி மாணவர்களும் குழந்தைகளும் செய்தால், அவர்களிடம் காணப்படும் மன அழுத்தம், மனச் சோர்வு மற்றும் ஆர்வப் படபடப்பு எல்லாம் மறைந்துவிடும். குறிப்பாக தேர்வு நேரங்களில் செய்யலாம், மிக நல்லது.

* வளரும் குழந்தைகளுக்கு தசைகளின் உறுதிக்கும், விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு கால்கள் மற்றும் தண்டுவடத்துக்கும் ஆகச் சிறந்த பயிற்சி இது.

* பெண்களின் மாதவிலக்குச் சுழற்சி சீராக இருப்பதற்கு சூரிய நமஸ்காரம் உதவும்.

* முகத்தில் சுருக்கங்கள் மறைந்து, ஒரு பொலிவு உண்டாகும்.

* மொத்தத்தில் உடலை ஆரோக்கியமாகவும் மனதை அமைதியாகவும் வைத்திருக்கும் ஒரு சூப்பர் பயிற்சிதான், சூரிய நமஸ்காரம்.

எச்சரிக்கை:

* கர்ப்பிணிப் பெண்கள், தலைச்சுற்றல் (வெர்டிகோ) மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள், இதய நோய், மூட்டு வலி, கழுத்துவலி, ஸ்பான்டிலைசிஸ், தண்டுவடப் பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சூரிய நமஸ்காரம் கண்டிப்பாகச் செய்யக் கூடாது.

* கர்ப்பப்பை இறக்கம் உள்ள பெண்களும் செய்யக் கூடாது.

* மிகவும் வயது முதிர்ந்தவர்களும், தள்ளாட்டம் உள்ள பெரியவர்களும் செய்யக் கூடாது. மிகவும் களைப்பாக இருக்கும்போது செய்யாதீர்கள். காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடல் வலி இருந்தாலும் தவிர்க்க வேண்டும். அந்தச் சமயத்தில் சவாசனம் அல்லது சாந்தி ஆசனத்தில் படுத்து எழவேண்டும்.

-பிரேமா நாராயணன்

படம்:வி.செந்தில்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்