Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெண்புள்ளிகள் ஒரு நோய் அல்ல....!

ருபக்கம் வெள்ளையாக இருப்பவர்களை நம் சமூகத்தில் உயர்வாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வெண்புள்ளிகள் இருப்பவர்களை மிகவும் உதாசீனப்படுத்துவது மிகப்பெரிய முரண். உண்மையில் மருத்துவ ரீதியாக அது ஒரு நோய் அல்ல.

“காலம் காலமாக வெண்புள்ளியை ஏதோ ஒரு வியாதி போலவே எண்ணும் மனப்பாங்கு நம் மக்களிடையே இருக்கிறது. இன்றைய காலகட்டங்களில் அந்த எண்ணம் குறைந்திருக்கிறதே தவிர, அது முழுக்க முழுக்க மாறவேண்டும் என்பதே எங்களின் நோக்கம்!"  என்கிறார் வெண்புள்ளிகள் விழிப்பு உணர்வு இயக்கத்தைச் சேர்ந்த உமாபதி.

அவர் மேலும் கூறுகையில், "வெண்புள்ளிகள் ஏதோ மரபு சார்ந்த பரம்பரை நோயோ, தீராத தீய பழக்கங்களால் வந்த வியாதியோ அல்லது தொற்றுநோயோ அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு சாதாரண நிறமிக் குறைபாடு. ரத்தத்தில் இருக்கும்  வெள்ளை அணுக்கள், தோலுக்கு நிறம் தரும் 'மேலனோசைட்' என்கிற தோல் நிறமியை, நோய் கிருமி என்று நினைத்து அழித்துவிடுகிறது. இது ஒரு தற்செயலான நிகழ்வுதான். அது எந்த இடத்தில் நடக்கிறதோ அந்த இடத்தில் வெண்புள்ளிகள் ஏற்பட்டு தோலின் நிறம் மாற்றமடைகிறது.

இது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இது உடலில் தன்னிச்சையான செயலால் ஏற்படுகிறதே தவிர, வேறு எந்த நோயாலும் ஏற்படுவதில்லை இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட விளக்கம்’. ‘சர்க்கரை, தைராய்டு பிரச்னைகளைப் போலவே இதுவும் ஒரு உடற்கூறு பிரச்னையே. அதனால் வெண்புள்ளிகள் உள்ளவர்களை ஒதுக்கி வைப்பது சரியானது அல்ல.

இந்த விழிப்புணர்வு அற்றவர்களை வெண்குஷ்டம் என்று சொல்லி இதற்கு ஆயுர்வேத மருந்து, லேகியங்கள் இருக்கின்றன என்று விளம்பரப்படுத்தி மக்களை தங்கள் வலைக்குள் விழவைக்கிறார்கள் போலியான சிலர். மக்களும் வெண்புள்ளிகள் வந்தால் எங்கே சமூகம் தங்களை புறக்கணித்துவிடுமோ என்று பயந்து பல ஆயிரங்களைச் செலவிட்டு இதற்கு மருத்துவம் பார்க்கத் தயாராகிறார்கள். அதை சில தவறான போலி ஆட்கள் தாங்கள் சம்பாதிப்பதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இதற்கு அரசே மருந்து கண்டுபிடித்துள்ளது. அது முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. அதைப் பயன்படுத்தினால் இந்த வெண்புள்ளிகள் முழுக்க மறைந்துபோகும். இதை மக்களிடம் கொண்டு செல்லவே இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நகரங்களில் இருக்கும் இன்றைய இளைஞர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை அவர்களுக்கு இதில் போதிய விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால், கிராமப் புறங்களில்தான் இன்னமும் இதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

சில பள்ளி, கல்லூரிகளில் வெண்புள்ளிகள் வந்த மாணவர்களை ஒதுக்கிவைத்ததைக் கண்டித்து நீதிமன்றம் வரை சென்று ‘இது ஒரு நோய் அல்ல; சாதாரண நிறக்குறைபாடுதான். அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது’ என்று அரசாணையே பெற்றுள்ளோம்.

இந்தியாவில் 7 கோடி பேர் வெண்புள்ளிகளைக் கொண்டுள்ளனர். இது மொத்த சதவிகிதத்தில் 4%. தமிழகத்தில் மட்டும் 37 லட்சம் பேர் இருக்கிறார்கள். பொதுவாக வெண்புள்ளிகள் இருப்பவர்களுக்கு திருமணத் தடை இருக்கும். எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு இருக்குமோ என்று பெண்/மாப்பிள்ளை தர பயப்படுகிறார்கள். இது தேவையில்லாத ஒரு அச்சம்.

அதைப் போக்கவே நாங்கள் எங்கள் இயக்கத்தின் சார்பாக மனிதச்சங்கலி, கருத்தரங்கம் போன்றவற்றை நடத்திவருகிறோம். நாங்களாகவே இலவசத் திருமணங்களையும் நடத்தி வருகிறோம். வெண்புள்ளிகள் இருப்பவர்கள்  'vitiligo.india.org' என்ற எங்களின் இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்துகொண்டால் நாங்களே வரன் பார்த்து முற்றிலும் இலவசமாக நடத்தி வைக்கிறோம்.

இதுவரை தமிழகம் முழுக்க 300க்கும் அதிகமாக திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன.

வெண்புள்ளிகளுக்கு மத்திய அரசின் ராணுவ அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராணுவ மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ( டி.ஆர்.டி.ஒ.) மூலிகை மருந்தினைக் கண்டுபிடித்துள்ளது. லுகோஸ்கின் என்று பெயரிடப் பட்டுள்ள இந்த மருந்தினை 400 நாட்கள் உட்கொண்டால் வெண்புள்ளிகள் மறைந்து தோலின் பழைய நிறம் தோன்றுகிறது. இந்த மூலிகை மருந்தினை உட்கொண்ட பலர் தங்களது தோலின் பழைய நிறத்தை மீட்டுள்ளனர்.

இந்த மருந்து குறித்த கருத்தரங்கம் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று காலை 9.45 மணிக்கு மேற்கு தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

எங்களின் எண்ணமெல்லாம் இனி வரும் அடுத்த தலைமுறை,  வெண்புள்ளிகள் ஒரு தற்செயல் நிகழ்வு என்பதை புரிந்துகொண்டு,  வெண்புள்ளிகள் கொண்ட தன் சக நண்பரை எப்போதும் போல பார்க்கவேண்டுமே தவிர,  அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கக்கூடாது என்பதுதான்" என்றார்.

-மா.அ.மோகன் பிரபாகரன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement