Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘8 பேக்ஸ்’ ஆக மாறப்போகும் தொப்பைகள்!

”எந்தக் கடையில நீ அரிசி வாங்குற?” என்று, ஒரு திரைப்படத்தில், பருமனான ஒரு பெண்மணியைப் பார்த்து, நடிகர் கவுண்டமணி கேலி செய்வார். இன்று அந்தக் கேள்வி மிகப் பரவலாகக் கேட்கப்படுகிறது என்பதுதான் அந்த கேலியைத் தாண்டி நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய உண்மை.

எட்டு வயதுக் குழந்தைகள் முதல், எண்பது வயது முதியவர்கள் வரை இன்று பரவலாகச் சந்தித்துவரும், ஒரு பெரும் சிக்கல், உடல் எடை உபாதை. பள்ளி பயிற்சிகளில் கலந்து கொள்ள வேண்டுமென்று சிறுவர்களும், ‘சைஸ் ஜீரோ’ ஆக வேண்டுமென்று இளைஞர்களும், நீரழிவு பயத்தில் நடுவயதினரும், உடல் சுரப்பளவுகளைக் கட்டுப்படுத்தும் பந்தயத்தில் வயோதிகர்களும் என, எல்லா அங்கத்தினரையும் பயந்து ஓட வைக்கும் அசுரன்தான் இந்த உடல் எடைச்சமனின்மை.

இந்த எடை அதிகரிப்பு பற்றிய பயம் நம் சமூகத்தில் பல்வேறு தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காலை நடைபயிற்சி, சிரிப்புப் பயிற்சி என ஒரு கும்பல் கிளம்ப, அருகம்புல் சாறு, அத்திப்பழம் என்று ஒரு கும்பல் மிரட்ட, ‘லோ கால்ரி; ஹை ஃபைபர் - ஓட் மீல், ஒரைஸனால்’ என ஒரு கும்பல் துரத்த, உடல் எடைக்கு பயந்து ஓட்டம் எடுக்கும் மக்களின் எண்ணிக்கைப் பெருகிக்கொண்டே போகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது ”உடல் எடையைக் கட்டுப்படுத்த ஒரு ஸ்விட்ச் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது அல்லவா?

அப்படி ஒரு முயற்சியைத்தான் தொடங்கி முதல்படியை, வெற்றியுடன் கடந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ‘மாஸெச்சூஸெட்ஸ்’ பல்கலைக்கழக ஆய்வாளர்கள். “உடலிலுள்ள அதிகரித்த எடை என்பது நாம் உட்கொள்கிற உணவின் கலோரிகளுக்கும், நாம் செலவிட்டு, எரித்துவிடுகின்ற கலோரிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடு மட்டுமே என்ற கருத்து பரவலாக உள்ளது; அக்கருதுகோள், உடல் எடையை நிர்ணயிப்பதில் மரபணுக்கள் ஆற்றும் பங்கைப் பற்றி ஆய்வு செய்ய மறந்துவிடுகிறது” என்கிறார் முனைவர் மேனோலிஸ் கெல்லிஸ்.

மாஸெச்சூஸெட்ஸ் பல்கலைக்கழகமும், ஹார்வார்டு மருத்துவக் கல்லூரியும் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள், ‘இங்கிலாந்து அறிவியல் இதழில்’ வெளியாகியுள்ளன. இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

*மனித உடலின் ஒவ்வொரு அங்கமும், உடலின் டி.என்.ஏ வின் படியே தங்கள் செயல்பாட்டை அமைத்துக்கொள்கின்றன.

*இதன் அடிப்படையில், ஐ.ஆர்.எக்ஸ் 3 மற்றும் ஐ.ஆர்.எக்ஸ். 5 ஆகிய மரபணுக்களே, உடலின் செல்கள் எவ்வளவு கொழுப்பைத் தேக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கின்றன.

*தற்போது சி.ஏ.எஸ் 9 எனும் தொழில்நுட்பத்தின் மூலமாக இந்த மரபணுக்களை மாற்றியமைக்க இயலுமென்று நிரூபிக்கப்பட்டுள்ளது

தற்போது சிற்றுயிரிகளின் மீது மட்டுமே பரிசோதிக்கப்படிருக்கும் இந்த ஆய்வு, மனிதர்களின் மீது நடத்தப்படப் போகும் நாள் வெகுதொலைவிலில்லை என்கின்றனர், ஆய்வுக் குழுவினர்.

"எலிகளின் உடலில் மனித திசுக்களைப்புகுத்தி, அத்தகைய விசேஷ எலிகளின் மேல், இச்சோதனை மேற்கொள்ளப்பட்ட போது, குறிப்பிட்ட எலிகளின்  உடல் எடை  50 விழுக்காடு குறைந்தது ஆழ்ந்த வியப்பில் ஆழ்த்தியது" என்கிறார், பேராசிரியை மெலீனா க்ளஸ்னிட்சர். மேலும் அவர், "உடலின் ஆற்றல் கொள்முதல் சக்திக்கும், ஆற்றல் செலவிடும் சக்திக்கும் இடையே ஒரு மாபெரும் தானியங்கியாக இந்த ஆய்வு அமையப்போகிறது” என்று பூரித்தார்.

இந்த ஆய்வுகள் வெற்றிப்பாதையில் நடைபோடும் பட்சத்தில், எல்லாத் தொப்பைகளும் ‘8 பேக்ஸ்’ ஆக மாறிவிடும் போலிருக்கிறது. எனினும் இயற்கையின் போக்கை எதிர்த்து நீந்த முயன்றால், அந்த அறிவியலின் விளைவு என்னவாகும் என்பது, வரலாற்றின் வார்த்தைகளுக்கு மட்டுமே உரிய தீர்ப்பு.

- ச.அருண்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement