'செப்டம்பர் 8' - தேசிய கண் தான தினம்!

"தானத்தில் சிறந்த தானம், கண்தானம்" என்பார்கள். ஏனெனில், கண்தானம் செய்வதால், நாம் இறந்தாலும், மற்றொருவர் மூலம் நம் கண்கள் இந்த உலகை பார்க்க முடியும். நாம் இறந்த பின்னர் மண்ணுடன் மண்ணாக மக்கி போகும் நம் உடல் உறுப்புகளை, மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலம், நாம் இறந்தும் பலருக்கு வாழ்வளிக்க முடிகிறது.

எனவேதான் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, தேசிய கண்தான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகில் 4 கோடி மக்கள் பார்வையற்றவர்களாக உள்ளனர். இவற்றில், நம் இந்தியாவில் மட்டும் ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். நாம் அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால், இந்தியாவில் பார்வையற்றவர்களை பார்வை உடையவர்களாக மாற்ற முடியும்.

கண்தானம் பற்றிய சில தகவல்கள்:


கண் தானம் செய்ய விரும்புவோர், நமக்கு அருகிலுள்ள கண்தான வங்கியை தொடர்பு கொண்டு, கண்களை தானம் செய்வது பற்றி தெரிவிக்கலாம்.

ஒருவர் இறந்த 4 முதல் 6 மணி நேரத்திற்குள் கண்தானத்தை செய்ய வேண்டும்.

கண்தானம் செய்யும் இறந்தவரையும், கண்களைப் பெற்றுக் கொள்பவரையும் மருத்துவர் முறையாக பரிசோதனை செய்த பிறகுதான், கண் விழிகளை பார்வையற்றவருக்குப் பொருத்த முடியும்.

கண்தானம் செய்பவர் இறந்ததும், உடனடியாக அவரது கண்களை மூடி, கண்ணின் மீது ஐஸ்கட்டி அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும். கண்ணின் முக்கிய உறுப்பான 'கார்னியா' எனப்படும் கருவிழிக்குள் ஒளிக்கற்றையானது உள்ளே செல்வதைத் தடுப்பதற்காக இதனை செய்ய வேண்டும்.

முதலில் இறந்தவரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்பட்டு, உடல்நிலையின் ஆரோக்கியம் பற்றி ஆய்வு செய்யப்படும். பின்னரே கண் எடுக்கப்பட்டு, மற்றவருக்கு பொருத்தப்படும்.

கண்தானம் செய்ய 20லிருந்து 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

மூக்குக் கண்ணாடி அணிந்தவர்களும், கண் புரை அறுவை சிகிச்சை செய்தவர்களும் கண்தானம் செய்யலாம்.

ஒரு வயது நிரம்பியவர் முதல் எல்லா வயதினரும் கண்தானம் செய்யலாம்.

உலகிலேயே இலங்கைதான் கண்தானம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது.

யார் செய்யலாம், யார் கூடாது:


நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா நோயாளிகள் உட்பட அனைவரும் கண்தானம் செய்யலாம். ஆனால், தொற்று நோயால் இறந்தவர்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடி, எய்ட்ஸ் போன்ற நோய் பாதிப்புகளால் இறந்தவர்கள் கண்தானம் செய்ய முடியாது.

நம் கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்:

போதிய வெளிச்சத்தில்தான் படிக்கவும், எழுதவும் செய்ய வேண்டும்.

கண்களில் தூசி விழுந்தால் கைகளால் கசக்காமல், தண்ணீரைக் கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும். பால், முட்டை, கீரை, மீன், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

கணினி மற்றும் டி.வி.யை பயன்படுத்துவோர், அடிக்கடி கண்களை மூடியும், சிமிட்டவும் செய்ய வேண்டும்.
40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் கண்களை பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.

அனைவரும் கண்தானம் செய்வோம்! பிறர் கண் மூலமாக மீண்டும் உயிர்வாழ்வோம்!!

- கு.ஆனந்த ராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!