ஐம்பதை கடந்த ஆணா நீங்கள் ? புராஸ்டேட் புற்றுநோய் உஷார் !

புராஸ்டேட் புற்றுநோய் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று இந்திய புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பு நிறுவனத்தின் (Indian Prostate Cancer Foundation) நிறுவனர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் சிவராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

புராஸ்டேட் புற்றுநோய் என்பது சமீப காலமாக ஆண்களின் ஆரோக்கியத்திற்கு எமனாக புறப்பட்டு உள்ளது. 50 ஐ கடந்த ஆண்களுக்கு வரும் இந்நோய் சமீபகாலங்களாக ஆண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் புராஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய டாக்டர் அனந்தகிருஷ்ணனின் பேச்சு புராஸ்டேட் புற்றுநோய் குறித்து அபாயத்தை தெளிவாக சொன்னது.

“புராஸ்டேட் புற்றுநோய் குறித்து இந்தியர்களிடையே, குறிப்பாகத் தமிழக மக்களிடையே போதிய விழிப்பு இல்லை. ஆனால், மேலை நாடுகளை விட இங்குதான் புராஸ்டேட் புற்றுநோய் மூலம் அதிக பாதிப்பு உள்ளது. இது குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடையில் இருந்தால், எளிதில் நோயின் பாதிப்பைத் தடுத்துவிடலாம்” என்றார் அவர்.

ஆண்களுக்கே வரக் கூடிய இந்த நோய்க்கான அறிகுறிகளை விவரித்த அவர், “ 50 வயதுக்கு மேற்பட்டோர் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறநீரில் இரத்தம் வருவது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால், பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். பி.எஸ்.ஏ. (PSA) எனப்படும் இரத்தப் பரிசோதனை எளிதானது. அத்துடன், நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், அதை மிக எளிதாக முற்றிலும் குணப்படுத்திவிடலாம். புராஸ்டேட் புற்றுநோய் சிகிச்சையில் தற்போது ரோபாடிக் சர்ஜரி (Robotic Surgery) எனப்படும் நவீன வகை அறுவைச் சிகிச்சை நடைமுறைக்கு வந்துள்ளது. இது எளிதில் சிகிச்சை செய்யும் வழியாகும்” என்றார்.

இன்றைய மனித வாழ்வில் மாறிவரும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை புராஸ்டேட் புற்றுநோய் தோன்ற முக்கிய காரணங்கள் என்று கூறிய அவர், “புராஸ்டேட் புற்றுநோய் நிறுவனம் (Indian Prostate Cancer Foundation) இது தொடர்பாக பல தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

 நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு டாக்டர் அனந்தகிருஷ்ணன் சிவராமன் விளக்கங்களை அளித்தார்.

நீங்கள் 50 வயதைக் கடந்தவரானால் உடனே மருத்துவரை அணுகி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நலம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!