'நலம்தானா... உடலும் உள்ளமும் நலம்தானா?' | world mental health day

வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (10/10/2015)

கடைசி தொடர்பு:17:12 (10/10/2015)

'நலம்தானா... உடலும் உள்ளமும் நலம்தானா?'

'நலம்தானா... உடலும் உள்ளமும் நலம்தானா?' என்ற பாடலுக்கு ஏற்ப ஒரு மனிதனின் வாழ்வுக்கு  உடல்நலன்  சரியாக அமைவது மட்டுமின்றி, மனநலனும் சரியாக இருக்க வேண்டும். இதற்காக உலக மனநல மையம் 1992-ம் வருடத்தில் இருந்து அக்டோபர் 10-ம் தேதியை  உலக மனநலன் தினமாக கொண்டாடி வருகிறது. 1994-ல் இருந்து ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு  இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 'மனச்சிதைவு நோயுடன் ஆரோக்கியமான வாழ்வை வாழுதல்' என்ற கருப்பொருளை வைத்து கொண்டாடப்படுகிறது.

உலக மக்கள் தொகையில் 35 கோடி மக்கள் மனநலன் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அனைத்து வயதைச் சேர்ந்தவர்களும்  மனநலன் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மனநலன் என்பது மனம், மனம்சார்ந்த செயல்கள் மற்றும் சிந்தனைகளைக்  குறிக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கும்  முயற்சிக்கின்றனர். ஆண்டுதோறும் உலகம் முழுதும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்களில் 15 வயதில் இருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்களே  அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம், நீண்டகால சோகம், வேலையின்மை,  ஏமாற்றம், ஏக்கம், தொடர்தோல்வி ஆகியவைதான். 

இதில் 50 சதவிகிதம் முதியோர்களே பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் உடல்நலக் குறைவு, பிள்ளைகள் புறக்கணிப்பு  கடுமையான மன அழுத்தம், மனச்சோர்வால் இந்நிலைக்கு ஆளாகின்றனர். இதனைத் தடுக்க 30 வயதைத் தாண்டும்போதே முதுமைக்காக சேமித்து வைக்க வேண்டும். சொத்து ஏதும் இருந்தால், பிள்ளைகளின் பெயரில் மாற்றக் கூடாது. இப்படி செய்வதன் மூலம்  முதுமையின் சுமையை ஓரளவு குறைக்கலாம் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

முதியோர் மனநலத்தையும் கவனித்தே ஆக வேண்டும். பெரும்பாலான மன நலக்குறைவுக்குக் காரணம்  மன அழுத்தம், கவலைகள், அதனால் ஏற்படும் பதற்றம். இதனால் சீரண  மண்டலம் குறிப்பாக  கல்லீரல் பாதிக்கப்படும். நெஞ்சு எரிச்சல் , கை கால் வலி, மூச்சு கோளாறு , சத்துக்குறைவு,தொடர்ச்சியான இருமல் ஆகியவை இதற்கான அறிகுறி.இவை நாற்பது  வயதின் ஆரம்பத்தில் ஏற்படலாம்.

எந்தவொரு பரிசோதனையும் இவற்றின் ஆரம்ப நிலையைக் காட்டாது. இவர்களிடம் கனிவாக நடந்து, ஜீரணிக்க கூடிய சுலபமான உணவு வகையைக் கொடுக்க வேண்டும். காலை உணவு  சீக்கிரமாக கொடுக்க வேண்டும். தேநீர் போன்றவற்றை அருந்தும்போது பிஸ்கட்டையும் சேர்த்துக்கொள்ளலாம். அதிக உணவு ஒரே நேரத்தில் உட்கொள்வதை தவிர்த்து  2 மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுக்கலாம்.

1950-க்கு  முன்பு மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்காதபோது மந்திரவாதிகளைத்  தேடிச்சென்றனர். அமெரிக்கா, லண்டன்  போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் மனநலன் பாதிப்பு குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றுக்கு 20 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லை என்பது வேதனைக்குரியது.

நெல்லை மனநல மருத்துவர் பன்னீர் செல்வம் கூறுகையில் , ''இந்தியாவில் 4000 மனநல மருத்துவர்கள்  மட்டுமே உள்ளனர். தமிழகத்தில் மனநல மருத்துவ முதுநிலை படிப்புக்கு ஆறு  இடங்கள் மட்டுமே உள்ளன. மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவப் படிப்புக்கான்ன இடங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும்'' என்று கூறினார்.

குழந்தை திருமணம், காதல் திருமணம் செய்பவர்கள் பலர் எதிர்காலத்தில் வரும் பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் மனநலன் பாதிக்கப்படுகின்றனர். போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மாதவிடாய் நிற்க்கும்  காலத்தில் சில பெண்கள் மனநலன்  பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மனநலன் பாதிக்கப்படாமல் இருக்க, தினமும் உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்தால் போதுமானது.

மனநலன் பாதிக்கப்பட்டவர்களை தீண்டதகாதவர்கள் போன்று அந்நியராகப் பார்க்காமல் அன்பு, பாசம்,  அரவணைப்பு  கொடுத்து  நடத்தவே இன்று  உலகளவில் இத்தினம்  கொண்டாடப்படுகிறது.

.த.வினோதா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close