Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்டாசு கொளுத்த பாதுகாப்பான 'டிப்ஸ்' கள்!

தீபாவளி கோலாகலம் துவங்கிவிட்டது. துணிக்கடைகளிலும் பட்டாசு விற்பனையகங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் நச்சுப்புகை, வெடிச்சத்தம் போன்றவை  மனித உடலுக்கு ஒவ்வாமை தரக்கூடியது என்றாலும், பாரம்பரிய பண்டிகையான தீபாவளிக்கு பட்டாசுவை தவிர்த்துவிட்டால் தீபாவளியில் சுவாரஸ்யம் இல்லை.

அதேசமயம் தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடவில்லை யென்றால் 'தீபாவளி' 'தீராவலி' என்றாகிவிடும். உற்சாக மிகுதியில் குழந்தைகள், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கமாட்டார்கள்.

குழந்தைகளின் முழுபாதுகாப்புக்கும் பெற்றோர்களே முழுபொறுப்பு ஏற்று,  தீபாவளியை பாதுகாப்பான தீபாவளியாக மாற்றவேண்டும் என்கிறார் திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி உதவிப் பேராசிரியை, மருத்துவர் வி.பி. சரசு.

தீபாவளியின்போது குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அவர் அளிக்கும் டிப்ஸ்கள் இதோ...

பட்டாசுகளை கொளுத்த மெழுகுவர்த்தி அல்லது ஊதுவத்திகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். இவை நீளமானதாக இருப்பது ஆபத்தை தவிர்க்க உதவும்.

பட்டாசு கொளுத்தும் இடங்களில் மொத்தமாக பட்டாசுகளை  குவியலாக வைக்கக்கூடாது. மேலும் பட்டாசுகளின் அருகில் கொளுத்த பயன்படுத்தும் வர்த்திகள் இருக்கக்கூடாது.

பட்டாசு வெடிக்கும் இடத்தில் எப்போதும் தயாராக ஒரு வாளி தண்ணீர் அல்லது மணலை வைத்துக்கொள்ள வேண்டும். எதிர்பாராத விபத்து சமயங்களில் அது பயன்படும்.

வாண வெடிகளை பெரும்பாலும் ஜன நெருக்கடி, வசிப்பிடம் அல்லாத இடங்களில் வைத்து வெடிக்கவும். இல்லையென்றால் வெடித்துச் சிதறி விழும் தீப்பொறிகள் வீடுகளின் மீது விழுந்து தீ விபத்தை ஏற்படுத்தி விடும்.

வெடிக்காத பட்டாசுகளை வெடிக்க வைக்கும் தவறான வழிகளில் இறங்கவேண்டாம். குழந்தைகளிடம் பாம், வாண வெடிகள் போன்றவற்றை கொடுத்து வெடிக்கச் சொல்லாதீர்கள்.

மூடிய பாத்திரங்களில் போட்டு வெடிப்பது மற்றும் இன்னும் சில வேண்டத்தகாத முறைகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும்.

ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து பட்டாசு வாங்கும்போது,  ஒரு நூறு ரூபாய்க்கு  அவசர உதவி மருந்துகளை வாங்குவதில் சுணக்கம் காட்டக்கூடாது. அத்தனை எச்சரிக்கையையும் மீறி ஏதாவது நடந்தால், மருத்துவரிடம் செல்வதற்கு முன் முதலுதவி அளிக்க அது உதவும். உதாரணத்திற்கு பர்னால். தீப்புண் பட்ட இடத்தில் அதை தடவி விடலாம்.

கண்களில் பட்டாசு பொறி விழுந்தால், உடனடியாக கண்களை நல்ல நீரில் பலமுறை கழுவவேண்டும். பின் உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை அணுகவேண்டும்.

பட்டாசு வெடிக்கும்போது காட்டன் உடைகளையே அணிந்து வெடிக்கவும்.  சிந்தடிக் போன்ற மற்ற வகை துணிகள் தீயை மளமளவென் பற்றவைக்கும் தன்மை கொண்டவை.

ஹீரோயிஸம் காட்டுவதாக எண்ணி பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்காதீர்கள். அப்படி ஏதேனும் நேர்ந்தால்,  உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்தை நீரினால் தொடர்ந்து கழுவவும். எரிச்சலும் காயத்தின் தீவிரமும் இதனால் குறையும்.

செல்லப்பிராணிகளை வளர்ப்பவராக இருந்தால், தயவுசெய்து அதிக சத்தம் மற்றும் கரும்புகை கிளப்பும் பட்டாசுகளை தவிருங்கள். விலங்குகளுக்கு நுண்ணிய கேட்புத்திறன் அதிகம். அதனால் வெடிச்சத்தம் அதன் காதுகேட்கும் திறனை இழக்கச்செய்யும். 

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தனியே பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது. பாதுகாவலர் ஒருவர் கண்டிப்பாக உடன் இருக்கவேண்டும்.

வெடிக்காத பட்டாசுகளை திரும்ப திரும்ப வெடிக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கக்கூடாது. வெடிக்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் எனக் கருதினால்,  அவற்றை எடுத்து அருகிலுள்ள வாளித் தண்ணீரில் போட்டுவிடவும்.

இது தவிர அரசு மற்றும் வல்லுனர் தரப்பிலிருந்தும் பாதுகாப்பான தீபாவளிக்கு பல யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. அவை...

பட்டாசுகளை அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்கவேண்டும். இரவு 10 மணி முதல் விடியற்காலை 6 மணிவரை பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்ற அரசு விதிமுறை இருப்பதை கவனத்தில் கொள்வது.

பொதுமக்கள்
குழுமியிருக்கும் இடம், வீட்டுக்குள் பட்டாசுகள் வெடிப்பதை தவிருங்கள். விபத்து ஏற்பட்டால் பயங்கர சேதாரம் ஏற்பட வாய்ப்புண்டு.

சொந்தமாக
பட்டாசு தயாரித்து வெடிப்பதை தவிர்க்கவும். 

வீட்டின் கூரை மேல், மின்வயர்கள், மரங்கள் என தடை இருக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. அவை வானத்தில் பாயும் வெடிகளின் திசையை மாற்றி விபத்தை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.

அட, இவ்வளவு பதட்டப் பாதுகாப்பு ஏன்... படீர் சுளீரென வெடிக்கும் பட்டாசுகளை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, வண்ண வண்ண மத்தாப்பூக்களை மட்டும் பாதுகாப்பாக கொளுத்தி மகிழ்ந்தால், தீபாவளி எப்போதும் ஹேப்பி தீபாவளி!

- எஸ்.கிருபாகரன் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement